
யுத்தகாலத்தில் சொத்துக்களை இழந்து அதன் உரிமங்களை பெறமுடியாது போனவர்கள், அச்சொத்துக்களின் உரிமங்களை பெற்றுக்கொள்வதற்காக வழக்குத் தாக்கல் செய்யும் வகையில், ஆட்சியுரிமை சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் குறித்த சட்டமூலம் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது.
இச் சட்டத்தின் பிரகாரம், கடந்த 1983ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதிமுதல், யுத்தம் நிறைவடைந்த தினமான 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதிவரையான காலப்பகுதியில் தமது சொத்துக்களை இழந்தவர்கள் மற்றும் சொத்துரிமைகளை இழந்தவர்கள் அவற்றை மீளப் பெற்றுக்கொள்ள நீதிமன்றை நாடலாம்.
இச் சட்டத்தின் ஏற்பாடுகளால் வழங்கப்பட்டுள்ள நன்மைகளை இரு வருட காலப்பகுதிக்குள் பயன்படுத்தும் வகையில், அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென குறித்த சட்டமூலத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய பயங்கவராத குழுவொன்றின் செயற்பாடுகள் காரணமாக, நீதிமன்றத்தில் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அல்லது தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு இயலாதவர்கள் தொடர்பில், மேற்கொள்ளப்படவேண்டிய சட்ட ஏற்பாடுகள் உள்ளடங்கிய சட்டமே இதுவென இச் சட்டமூலத்திற்கான முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சபையில் உரையாற்றிய நீதியமைச்சர்-
‘ரோமன்-டச்சு சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே இவ்வளவு காலமும் ஆட்சியுரிமை சட்டம் இருந்தது. அதன் ஏற்பாடுகளின் பிரகாரம், யாதேனும் ஒருவருக்கு உரித்தான அசையும் அல்லது அசையா சொத்துக்கள் பத்து வருடங்களுக்கு மேலாக வேறொருவரினால் அனுபவிக்கப்பட்டிருப்பின், அந்த அனுபவிப்பின் பேரில் சம்பந்தப்பட்ட சொத்தின் உரிமம் பத்து வருடங்களுக்கு மேலாக அதை அனுபவித்தருக்கே உரியதாகிவிடுகின்றது.
இந்த சட்டத்தில் பாரிய குறைபாடுகள் இல்லாவிட்டாலும்கூட, நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய மோதல் நிலைமைகள் காரணமாக ஒரு பகுதி மக்களுக்கு இந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. நாட்டில் மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தத்தின் காரணமாக, ஒருவர் தமது சொத்தின் உரிமத்தை மீட்டுக்கொள்வதற்கான கால அவகாசம் பத்து வருடங்கள் என்பது, குறுகிய காலப்பகுதியாகவே அமைந்திருக்கின்றது.
அந்த வகையில், 1983ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் யுத்தம் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், யாதேனும் நபரொருவரால் தமது சொத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவோ அல்லது அனுபவிக்க முடியாமல் போயிருந்தாலோ அல்லது நீதிமன்றத்தை நாடி தமது காணி உரிமத்தை மீளப் பெறமுடியாமல் போயிருந்தாலோ அது இந்த நாட்டில் நிலவிய மோதல்களினால் அந்நபருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே அமைந்திருக்கும்.
இவ்வாறான நிலைமைகளால், வடக்கு, கிழக்கு மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதில் நடைமுறைச் சிக்கல் நிலவுவதால், அவ்வாறான காணிகளின் உரிமத்தை அவற்றின் உரிமையாளர்கள் மீளப் பெற்றுக்கொள்வதற்கு இச்சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன” என்றார்.