வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கவுள்ள 65,000 வீட்டுத்திட்டத்தை நிறுத்தாமல், அதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்துமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பரிந்துரைத்துள்ளார். வடக்கு கிழக்கின் சூழலுக்கு இந்த வீட்டுத்திட்டம் பொருத்தமாக இல்லையென தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய ஊடகமொன்றிடம் வடக்கு ஆளுநர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு ஆளுநர், சமையல் எரிவாயு, அடுப்பு, தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகளுடன் இந்த வீட்டுத்திட்டத்தை பயனாளிகளுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், மக்கள் அதனை விரும்புவார்களென எதிர்பார்ப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ளார். குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கும் வட மாகாண சபைக்கும் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ள நிலையில், மக்களின் கருத்தறிந்து குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக வடக்கு மற்றும் கிழக்கில் மக்களின் கருத்துக்கள் கோரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.