உலகையே புரட்டிப்போடும் பனாமா ஆவணங்கள்!

உலகையே புரட்டிப்போடும் பனாமா ஆவணங்கள்!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் பொன்சேக என்ற நிறுவனத்திலிருந்து கோடிக்கணக்கான ஆவணங்கள் கசியவிடப்பட்டன. இதனால் பணக்காரர்களும் பலமுள்ளவர்களும் தமது பணத்தைப் பதுக்குவதற்காக எப்படி இந்த வரிஏய்ப்பு நாட்டினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என அறியவந்துள்ளது.


மிகமிக இரகசியமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் மொஸாக் பொன்சேக உலகளவில் வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகளை மிகவும் இரகசியமாக நடாத்தும் பெரும் நிறுவனங்களில் ஒன்று. உலகிலே சட்டவிரோதமாகப் பணம் சேர்ப்பவர்களுக்கும், வரி கட்டாமல் தமது பணத்தைச் சேமித்து வைப்பவர்களுக்கும் இந்த நிறுவனம் பெரியளவில் உதவி வருகின்றது.
தற்பொழுது இந்த மொஸாக் பொன்சேக நிறுவனத்தின் பதினொரு மில்லியன் வரையான ஆவணங்களை வோசிங்ரனை தலைமையகமாகக் கொண்டியங்கும் சர்வதேச புலனாய்வு இதழியலாளர்கள் நூறுபேர் சேர்ந்து ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கசியவிட்டுள்ளார்கள்.
இதனால் முன்னாள் லிபிய அதிபர் கடாபி, தற்போதைய சிரிய அதிபர் அஸாத், எகிப்தில் அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட முபாரக், ரஷ்ய அதிபர் புடின்னின் நெருங்கிய நண்பர், பாகிஸ்தான் அதிபர், பிரபல கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி உட்பட 140இற்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தமது பணத்தைப் பதுக்கி வைத்துள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்த ஆவணங்களை ஜேர்மனியிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்று ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் உலகநாடுகளிலேயே பெரும் மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றமையும் தெரியவருகின்றது.
இந்தத் தகவல்கள் கசிந்த மறுகணமே ஐஸ்லாந்துப் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ஆவணத்தின்படி ஐஸ்லாந்துப் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸனும் அவரது மனைவியும் வின்ரின் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருந்துள்ளனர்.
இதன்படி இவர்கள் பலகோடிக் கணக்கான பணத்தினை இந்த நிறுவனத்தில் பதுக்கியுள்ளனர். இதனால் நாட்டில் குழப்பமேற்பட்டு திங்கட்கிழமையன்று ஐஸ்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து இவர் பதவி விலகியுள்ளார். அடுத்த பிரதமராக இந்நாட்டின் விவசாய அமைச்சர் பதவியேற்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன நாட்டைப் பொறுத்தளவில் குற்றங்களைத் தட்டிக்கேட்கும் சீனப் பிரஜைகள் சுற்றிவளைத்து சிறையில் அடைக்கப்படுவார்கள். அண்மைக்காலங்களில் இதுதான் அந்நாட்டில் நடந்தும் வருகின்றது.
தற்போது ஆட்சியிலிருக்கும் கம்யூனிஸ் கட்சிகள் கட்சிக்குள் ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டுமென அண்மையில் லட்சக்கணக்கானவர்கள் தண்டிக்கப்பட்ட நிலையில் ‘பனாமா ஆவணங்கள்’ கசிவு தற்போதைய சீன அதிபருக்கும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஏனென்றால் சீனாவில் ஆட்சியிலிருக்கும் கம்யூனிஸ் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர் வரிவிலக்கு புகலிடம் என்ற பெயரில் வெளிநாட்டிலுள்ள நிறுவனங்களில் பணத்தை வைப்புச் செய்துள்ளனர். இதில் மூன்றுபேர் முக்கியமானவர்கள். அதில் தற்போது அதிபராக இருக்கும் க்ஷி ஜின்பிங், மற்றும் மூத்த அதிகாரிகளான சங்கௌலி மற்றும் லியூ யு சா. மூவரினதும் நெருங்கிய குடும்ப உறவினர்கள் இந்த வெளிநாட்டு நிறுவனங்களில் இயக்குநர்களாக அல்லது பங்குதாரர்களாக இருக்கின்றனர்.
சீனாவில் ஆட்சியிலிருக்கும் கம்யூனிஸ் கட்சியின் கொள்கைகளில் ஒன்றாக உறவினர்கள் அரசியல் தொடர்புகள் மூலம் பயனடைவதை கட்சி எதிர்க்கின்றது. இதற்கு சீனாவில் தடையும் விதிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் சீனாவுக்குள் இந்தச் செய்தி பரவுவதை சீன அரசாங்கம் தடைசெய்துள்ளது.
அங்குள்ள இணையத்தளங்களில் பனாமா பேப்பர்ஸ் எனத் தேடும்போது முடிவு ‘சீனச் சட்டத்தை மீறும் செயல் என வருகின்றது’
மேலும், இந்த ஆவணத்தில் ரஷ்ய அதிபர் புடின் இன் பெயர் இடம்பெறவில்லையாயினும்கூட அவர் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலரினை வங்கிகள் வழியாகவும், நிழல் நிறுவனங்கள் மூலமும் பதுக்கி வைத்திருப்பதாக புலனாய்வு செய்தியாளர்களின் பனாமா ஆவணங்கள் குற்றம் சாட்டி இருக்கிறது.
இதைவிட, உக்ரைன் ஜனாதிபதி, சவுதி அரேபியா மன்னர் உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்களும் இடம்பெற்று இருக்கின்றனர்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை, பல மில்லியன் டாலர்கள் அளவிற்கு வங்கி பத்திரங்களை பனாமா நாட்டில் வாங்கி சொத்துகளாக குவித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆவணங்கள் அனைத்துமே 35–க்கும் மேலான நாடுகளில் அலுவலங்களைக் கொண்டுள்ள பனாமாவைச் சேர்ந்த மொசாக் போன்செகா என்னும் சட்ட நிறுவனத்தின் வழியாக கசிந்து உள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல இந்திய நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட 500ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வரி மோசடி செய்து, பனாமா நாட்டில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக ‘பனாமா பேப்பர்ஸ்’ வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
இந்த இரகசிய ஆவணத்தில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் மூன்று நிறுவனங்களைச் சேர்ந்த மூன்று வாடிக்கையாளர்களும் 22 பங்குதாரர்களும் இதனுடன் தொடர்புபட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களை கசியவிட்டது சட்டப்படி குற்றம் என்றும் இது பனாமா நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் பனாமாநாட்டின் சட்ட நிறுவன தலைவர்களில் ஒருவரான ரோமன் போன்செகா குறிப்பிட்டார்.
தற்போது உல நாடுகளிலேயே பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் பனாமா பேப்பர்ஸ் இன் கசிவினால் பல நாடுகளும் தங்கள் நாட்டில் இந்நிறுவனத்துடன் தொடர்புபட்டுள்ளவர்கள் மீது விசாரணை மேற்கொள்வதற்கு ஆரம்பித்துள்ளன.
இது தொடர்பில் பனாமா அதிபர் ஜூவன் கார்லோஸ் வெரெலா கூறுகையில், ‘வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதில் எங்களுடன் சில நாடுகளால் போட்டி போட முடியவில்லை. அவைதான் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளன. எனினும் எங்கள் நாட்டில், மறைமுகமான எந்த ஒப்பந்தங்களுக்கும் இடமில்லை. அதை நாங்கள் அனுமதிப்பதும் கிடையாது. இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila