லக்கல பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்கள் காணாமல் போன சம்பவத்துடன் பொலிஸ் நிலையத்திலுள்ள சில உத்தியோகத்தர்களுக்கு தொடர்புள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, குறித்த பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பதிகாரியொருவர் கடந்த சில மாதங்களாக இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நான்கு மாதங்களாக பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியொருவரே கடமையாற்றி வந்துள்ளார்.
குறித்த பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த நபர் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த பொலிஸ் நிலையத்தில் 80 பேர் கடமையாற்றி வருகின்றனர்.
எனினும், சம்பவம் இடம்பெறும் தருணத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமே கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அத்துடன், மேலும் 6 பேர் பொலிஸ் விடுதியில் ஓய்வெடுத்த வண்ணம் இருந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
நாளாந்த தேவைக்காக ஆயுதங்களை எடுக்கும் ஆயுத களஞ்சியசாலையிலிருந்தே இந்த ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
பொலிஸ் நிலையத்திலுள்ள திறப்புக்கள் வைக்கப்படும் இடத்திலேயே ஆயுத களஞ்சியசாலையின் திறப்பும் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு 14 திறப்புக்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் எவ்வாறு சரியான திறப்பை எடுத்துள்ளார் என்பது பொலிஸார் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
இதையடுத்தே பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் இடையில் தொடர்புள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பின்னணியிலேயே மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comments