வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் குமரப்பா- புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் நினைவுத் தூபி அமைக்கப்பட்டிருந்த இடத்தில் புதிய தூபியை அமைப்பதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இன்று காலை 9 மணிக்கு அடிக்கல் நாட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, வல்வை முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவின் தலைமையில் அடிக்கல் நாட்டும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, வல்வெட்டித்துறை நகர சபையின் சுயேட்சைக் குழுவினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு குழப்பம் விளைவித்தனர். அங்கிருந்த பூஜைப் பொருட்கள், கும்பம் போன்றவற்றையும் வீசியெறிந்தனர்.
குமரப்பா புலேந்திரனின் தியாகத்தில் அரசியல் செய்யக்கூடாது. அங்கு நினைவுத் தூபி அமைக்கக் கூடாது என்றும், பொதுப்பூங்காவே தற்போது அமைய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். இதன் போது இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தூபிக்குபு அடிக்கல் நாட்டுவதற்கு வெட்டப்பட்ட குழியை மண்போட்டு மூடினர். அத்தோடு அங்கிருந்தவர்களையும் விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதேவேளை, விடுதலைப்புலிகளின் தளபதிகளான குமரப்பா, புலேந்நிரனின் நினைவுத் தூபியை அமைப்பதற்கு தடைவிதிக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றத்தில் பொலிஸார் தடை உத்தரவு ஒன்றைப் பெற்றனர். நீதிமன்றத்தில் பெறப்பட்ட அறிவித்தலை வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோரிடம் கொடுப்பதற்கு பொலிஸாரும் முயன்றனர். எனினும் அவர்கள் அதனைப் பெறவில்லை. இதனையடுத்து நீதிமன்ற அறிவித்தலை அந்த இடத்தில் பொலிஸாரே வாசித்துக் காட்டினர். அதன் போது சிவஜிலிங்கம் மற்றும் தவிசாளர் ஆகியோர் காதைப் பொத்திக் கொண்டு நின்றனர்.
இந்தக் குழப்பங்களை அடுத்து, நினைவுத்தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கைவிடப்பட்டது.
இந்திய- இலங்கை அரசுகளின் கூட்டுச் சதியினால் சயனைட் அருந்தி மரணத்தை தழுவின் குமரப்பான புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின், 31 ஆவது நினைவு நாளான இன்று, அவர்களின் உடல்கள் தீயுடன் சங்கமித்த, தீருவில் திடலிலேயே இன்றைய அநாகரீகமான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
|