தமிழ் மூதாட்டி ஔவையார் விக்னேஸ்வர பெருமானைப்பார்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும்தா என்று கேட்கிறார்.
முத்தமிழை தனக்குத் தருமாறு கேட்கின்ற ஔவைப்பாட்டி பால், தேன், பாகு, பருப்பு என்ற நிறை உணவுகளை தருவதாகக் கூறுகிறார்.
ஔவையார் கூறிய மேற்போந்த பாடல் மூளை வளர்ச்சி, கல்வி, கற்றல், ஞாபகசக்தி என்பவற்றுக்கு பால், தேன், பாகு, பருப்பு என்பன முக்கிய மான ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் பொருள்படுத்திக் கொள்ளலாம். சங்கத்தமிழ் மூன்றும்தா என்று கேட்ட ஔவையார் அறம்செய விரும்பு என்றார்.
‘அ’ என்ற அகரத்தின் முதல் எழுத்தை போதிக்க அ - அம்மா, அ - அறம் என்று அடையாளப்படுத்தினர் நம் சான்றோர்.
அறம் செய விரும்பு என்று அடியயடுத்துக் கொடுத்த ஔவையாரின் பாடலை அரிவரியில் படித்த எங்கள் இளம் பிள்ளைகள் வளர்ந்து ஒரு கட் டத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நினைக்கும் போது அது தொடர்பில் வேதனையடையாமல் இருக்க முடியாது.
ஆம், எங்கள் மாணவர்கள் - இளைஞர்கள் சிலரின் போக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரின், ஆசிரியர்களின், பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்காமல் தம் பாட்டில் நடக்கத் தலைப்பட்டது ஏன்? இதன் பின்னணி என்ன? என்பது குறித்து உடனடியாக ஆராய வேண் டிய தேவை உள்ளது.
எங்கள் பிள்ளைகள் பாதை மாறி போவது குறித்து எவரும் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. மனித வாழ்வு என்பது ஏதோ ஒரு வகையில் மற்றவரின் வாழ்வோடும் தங்கியுள்ளது.
ஒரு மாணவன் பிறழ்வு படுவானாக இருந்தால் அந்தப் பிறழ்வு அவனுக்கும் அவனின் குடும்பத்திற்குமே பாதிப்பு; நமக்கென்ன என்று இருந்தால், அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆகையால் எங்கள் பிள்ளைகளை வழிப்படுத்துவது எங்களின் தலையாய கடமை. அந்தக் கடமை யிலிருந்து எவரும் விலகிவிடக் கூடாது. தமிழ் இனத் தின் அடித்தளத்தை வேரறுக்க வேண்டுமாயின் அதற்கான ஒரேவழி மாணவர்களை பிழையான பாதையில் வழிப்படுத்துவதுதான்.
இந்தத்திட்டமிடல் எங்கள் மண்ணில் அரங்கேறி அறுவடை ஆரம்பமாகிவிட்டது என்றே கூற வேண்டும். காதில் தோடு குத்துதல், உடம்பில் பச்சை குத்துதல், போதை பாக்கு என்ற ஒருவிதமான நடை முறை எங்களிடம் அறிமுகமாகிவிட்டது. ஒருவரைப் பார்த்து ஒருவர் செய்தல்; நண்பனை பின்பற்றி நண்பர்கள் செய்தல் என்றவாறாக பச்சை குத்துதல், தோடு குத்துதல் என்ற முறைமைகள் அறிமுகமாகின.
இவையயல்லாம் தேவைதானா? இவை ஒழுக்க நடைமுறைக்கு பங்கமான புலக்காட்சியை ஏற்படுத்தும் என்று எடுத்துரைப்பதற்கு ஆள் இல்லாதபோது போதைப்பாக்குகளும், போதைப் பொருட்களும் எங்கள் மண்ணில் தாராளமாக ஊடுருவத் தொடங்கியது.
இந் நிலையில் தான் எங்கள் அருமந்த பிள்ளைகள் தவறான பாதையில் பயணிக்கத் தலைப்பட்டுள்ளனர். இந்த மோசமான நிலைமையிலிருந்து எங்கள் பிள்ளைகள் மீட்டெடுக்கவேண்டும். அன்பு, பாசம், அறிவுரை, ஆலோசனை, நம்பிக்கை என்பவற்றின் ஊடாக எங்கள் இளம் பிள்ளைகளை ஆற்றுப்படுத்த நாம் அனைவரும் முற்பட்டால் ஒரு பகல் பொழுதில் எங்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்த முடியும்.
இதை செய்வதற்காக நாம் நாளாந்த விட்டுக் கொடுப் புகளையும் அன்பையும் பரிமாற வேண்டியிருக்கும்.