வலிகாமம் கிழக்கு பகுதியினில் பல தமிழ் இளைஞர் யுவதிகளை படுகொலை செய்த குற்றச்சாட்டினில் கைதான படையினர் சட்டமா அதிபர் திணைக்கள அறிவுறுத்தலில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக சிறுப்பிட்டியில் இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இவர்கள் கைதாகியிருந்த போதும் பல ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளுடன் தொடர்புபட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட 14 இராணுவத்தினரில் 10 பேரை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாண நீதிவான் மன்றிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 9 இராணுவத்தினர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புத்தூர் பகுதியில் 2 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைக் குற்றச்சாட்டில் சிறுப்பிட்டி இராணுவ முகாமில் கடமையாற்றிய லெப்ரினன் தரத்தை சேர்ந்த ஒரு அதிகாரி உட்பட 16 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு ஜன¬வரி மாதம் 16 பேருக்கும் எதிராகக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சட்டமா அதிபரின் ஆலோசனைகள் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டது.
16 இராணுவத்தினருக்கும் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டதுடன் அவர்களில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 14 இராணுவத்தினரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவர்கள் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தினால் கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
எனினும் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாத காலப்பகுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து குறித்த இராணுவத்தினருக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று குறிப்பிட்டு அறிவுறுத்தல் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து இராணுவத்தினர் சார்பில் கோரப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களின் விளக்கமறியலை நீடித்தது நீதிமன்றம் உத்தவிட்டது.
அத்துடன் 14 இராணுவத்தினரின் சார்பில் அவர்களது உறவினர்களால் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. 14 இராணுவத்தினரில் 5 பேருக்கு பிணை வழங்கப்பட்டது.
ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தனர்.இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் அச்சுவேலி பொலிஸார் வழக்குத் தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றில் முன்வைத்தனர்.
‘வழக்குத் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்துள்ளதாகவும் அதில் 10 இராணுவத்தினரை வழக்கு நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய ஆறு இராணுவத்தினர் தொடர்பாக ஆலோசனை கிடைக்கப்பெறவில்லை. எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் விடுவிக்குமாறு கூறப்பட்ட 10 இராணுவத்தினரில் ஒருவரும் ஏனைய 6 இராணுவத்தினரில் ஒருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். அதனால் 9 பேர் நேற்று வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
ஏனையவர்களான 4 இராணுவத்தினரின் விளக்கமறியலை எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்குமாறு நீதிவான் சி.சதீஸ்கரன் கட்டளையிட்டுள்ளார்.