இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி இன்னமும் நல்லாட்சி சிந்திப்பதாகத் தெரியவில்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தாம் ஏதும் ஆயத்தம் செய்தால், அதற்கு எதிராக தென்பகுதியில் கடுமையான பிரசாரம் நடக்கும் என்பதாக நல்லாட்சி கருதுகிறது.
உண்மையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காதவரை நல்லாட்சிக்கு ஆபத்து என்பதே உண்மை.
எனினும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் விருப்பமின்மை காரணமாக நல்லாட்சியும் காலம் கடத்துகிறது.
இதற்காக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்று நாம் வெளிக்கிட்டால் அதற்கு எதிராக மகிந்த ராஜபக்ச தரப்பு கடும் பிரசாரம் செய்யும்.
இது தமது ஆட்சிக்கு ஆபத்தாகி விடும் என்று நல்லாட்சியினர் கூறி வருகின்றனர்.
இதற்கு ஆமாம் என்று தலையாட்டும் அளவிலேயே தமிழ் அரசியல் தலைமையும் உள்ளது.
தமிழ் அரசியல் தலைமையைப் பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைமை கிடைத்தது பெரும்பேறு என்று கருதுகின்றது.
இத்துணை காலப் போராட்டம், தமிழ் மக்கள் சந்தித்த பேரிழப்பு என அனைத்துக்குமான கிடைப்பனவுதான் எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பதாக கருதப்படுவதால், நல்லாட்சியைப் பார்த்து எப்போது தான் நீங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள் என்று கேட்பதற்கு ஆளில்லாமல் போய் விட்டது.
இதன் காரணமாக தமிழ் மக்களை ஏமாற்று கின்ற நடவடிக்கை தொடர்கிறது.
இனப்பிரச்சினைக்கான தீர்வை இழுத்தடிப்பதற்காகவே நல்லாட்சியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தருக்கு எதிர்க் கட்சித்தலைவர் பதவியைக் கொடுத்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒரு தமிழனுக்கு கிடைத்ததால் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அது பேருதவியாயிற்று என்று கூறுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு அதனால் எந்தவித நன்மையுமில்லை எனலாம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பை மிகக் கவனமாக கையாள வேண்டும் என்று அடிக்கடி கூறிக் கொள்ளும் நல்லாட்சியினர்,
மறுபுறத்தில் புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வந்து போவதையும் தடைசெய்ய வேண்டும் என வியூகம் அமைத்து வருவதற்குள் அவர்கள் உள்நோக்கம் தெரியவருகிறது.
எது எப்படியாயினும் இனப்பிரச்சினைக்கான தீர்வை 2016ஆம் ஆண்டுக்குள் நல்லாட்சி எட்டத் தவறுமாயின் அதன் விளைவு வேறுவிதமாக அமைந்து நல்லாட்சிக்கு பேராபத்தாக அமையும் என்பதே உண்மை.
இது தவிர 2016ஆம் ஆண்டுக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படா விட்டால் 01.01.2017 இல் இரா.சம்பந்தர் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் சம்பந்தர் தமிழ்மக்களை ஏமாற்றி விட்டார் என்பதாக நிலைமை முடியும்.
ஆக, சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்தால் நிலைமை எப்படியாகும் என்பதை காலம் தக்கபடி கற்பிக்கும்.