
மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்தில் அண்மையில் திருடப்பட்டு மீட்கப்பட்ட துப்பாக்கிகளிலுள்ள கைவிரல் அடையாளங்களை பெறுவதற்காக, குறித்த துப்பாக்கிகள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், லக்கல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார். புதுவருட தினமான கடந்த வியாழக்கிழமை அதிகாலை, லக்கலை பொலிஸ் நிலைத்திலிருந்து 6 துப்பாக்கிகள் காணாமல் போன நிலையில், அருகிலுள்ள பௌத்த விஹாரையொன்றிலிருந்து அவை நேற்று (சனிக்கிழமை) மீட்கப்பட்டிருந்தன. சம்பவ தினத்தன்று பொலிஸார் கடமையில் இருந்தும், குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளமை தொடர்பில் பொலிஸ் தரப்பின் மீது பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மூன்று பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணை இடம்பெற்று வருகின்றது.