இன்­னொரு உள­வியல் போர்!

பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டதா- புதைக்கப்பட்டதா என்ற புதிய விவாதத்தை அவர் கிளம்பியிருப்பதற்கு வேறேதும் காரணங்கள் தான் இருக்க வேண்டும்.
பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்டது என்று இப்போது கூறியிருக்கும் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்திலும், அது எரிக்கப்பட்டது என்றே கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் கூட அதனையே கூறியிருந்தார். எனவே தான், சரத் பொன்சேகாவின் இப்போதைய உரிமை கோரலின் உண்மைத்தன்மை பற்றிய கேள்விகள் எழுந்திருக்கின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு- விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமானதாக அறிவிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளாகின்ற நிலையிலும், அவரது மரணம் பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்கள் இன்னமும் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.
தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களை ஒரு முடிவுக்கு வர முடியாமல் செய்யும் ஒரு உளவியல் மூலோபாயமாகவும் இதனைக் கருதலாம்.
விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணம் தொடர்பாக மட்டுமன்றி, அவரது தலைமைத்துவத் திறனைக் கேள்விக்குள்ளாக்கும் முயற்சிகளும் கூட அண்மைக்காலத்தில் முன்னெடுக்கப்படுவதைக் காணமுடிகிறது.
இதற்கென கையாளப்படும் வழிமுறைகளும், கையாளப்படும் நபர்களும் கூட வித்தியாசமானவை.
இப்படிப்பட்ட நிலையில் தான், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலம் எரிக்கப்படவில்லை, புதைக்கப்பட்டது என்ற புதிய தகவலைக் கசிய விட்டிருக்கிறார் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
கடந்த ஏழு ஆண்டுகளாகவே, பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் கடலில் கரைக்கப்பட்டு விட்டதாகவே அரசாங்க மற்றும் இராணுவத் தரப்பினால் கூறப்பட்டு வந்தது.
முதல்முறையாக பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்டது என்ற தகவலை வெளியிட்டிருக்கிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
யாழ்ப்பாண ஊடகம் ஒன்றில், வெளியான முன்னாள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவின் பேட்டியில், பிரபாகரன், பொட்டம்மான் போன்றவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டு சாம்பர் கடலில் கரைக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பேட்டியில் வெளியான தகவல்கள் தொடர்பாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை, புதைக்கப்பட்டது என்ற புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இறுதிப் போர் பற்றிய பல தகவல்களை அண்மைய நாட்களாக வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வந்திருக்கிறார் என்பது உண்மை.
அந்த தகவல்களை அவர் வெளியிட முனைந்ததற்கு அரசியல் காரணங்களும் இருக்கின்றன.
ஆனால், பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டதா- – புதைக்கப்பட்டதா என்ற புதிய விவாதத்தை அவர் கிளம்பியிருப்பதற்கு வேறேதும் காரணங்கள் தான் இருக்க வேண்டும்.
பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்டது என்று இப்போது கூறியிருக்கும் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்திலும், அது எரிக்கப்பட்டது என்றே கூறியிருந்தார். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் கூட அதனையே கூறியிருந்தார்.
எனவே தான், சரத் பொன்சேகாவின் இப்போதைய உரிமை கோரலின் உண்மைத்தன்மை பற்றிய கேள்விகள் எழுந்திருக்கின்றன.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய தகவல்களை அறிவதில் தமிழ் மக்கள் இப்போதும் எப்போதும் ஆர்வத்துடனேயே இருந்து வந்திருக்கின்றனர்.
முன்னர், பிரபாகரன் பற்றிய தகவல்களை அறிவதில், தமிழ் மக்களை விட சிங்கள மக்களும், அரசபடைகளும், அரசாங்கமும், வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளும் அதீத ஆர்வம் காட்டியதையும் யாரும் மறந்து விட முடியாது.
இறுதிக்கட்டப் போருக்குப் பின்னர், பிரபாகரனின் இறந்த உடலை காண்பிக்கும் வீடியோவை அரசாங்கம் ஊடகங்களில் ஒளிபரப்பிய பின்னரும் கூட, அதனை நம்ப மறுத்த தமிழர்கள் பலரும், இப்போது தமது நம்பிக்கை பொய் என்ற முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு நம்ப மறுத்த தமிழர்களையும், அவ்வாறான ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது என்ற ஏக்கத்தில் இருந்த தமிழர்களின் உணர்வுகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பல ஊடகங்கள்,
அவ்வப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது போன்ற பரபரப்பான செய்திகளை வெளியிட்டு, தம்மைப் பிரபலப்படுத்திக் கொண்டன. தமது வெளியீடுகளை விற்றுப் பணமும் சம்பாதித்துக் கொண்டன.
அதேவேளை, பிரபாகரனின் மரணம் பற்றி பேசுவதும், எழுதுவதும் கூட அபத்தமான செயலாக – துரோகத்தனமாக பார்க்கப்பட்ட ஒரு சூழல் கூட தமிழ்ச் சமூகத்தில் காணப்பட்டது.
ஆனால், அந்தச் சம்பவம் நிகழ்ந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகின்ற நிலையில், இப்போது பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக் கொள்ளுகின்ற நிலை பரவலாகவே ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில் தான், பிரபாகரனின் சடலத்துக்கு என்ன நடந்தது என்று விவாதத்தை கிளப்ப முனைந்திருக்கிறார் சரத் பொன்சேகா.
போரின் முடிவில் மீட்கப்பட்ட பிரபாகரனின் சடலம் மற்றும் ஏனைய புலிகளின் சடலங்கள் நந்திக்கடல் பிரதேசத்தில் எங்கோ புதைக்கப்பட்டிருக்கலாம் என்றே ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின.
அந்த இடத்தை அரசாங்கமோ படைத்தரப்போ வெளியிடவில்லை. அது பின்னர் ஒரு நினைவு கூரும் இடமாக - வழிபாட்டு இடமாக மாறிவிடலாம் என்ற அச்சம் தான் அதற்குக் காரணம்.
மாவீரர்களுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தி விடக்கூடாது என்பதற்காக, துயிலுமில்லங்களை அழித்து, அதன் தடயங்களைக்கூட இல்லாமல் செய்தது மாத்திரமன்றி, அந்த இடங்களின் மீது படைமுகாம்களை அமைத்து திருப்திப்பட்டுக் கொண்டது முன்னைய அரசாங்கமும் இராணுவமும்.
அப்படிப்பட்ட நிலையில், பிரபாகரனின் உடல் மட்டுமன்றி, ஏனைய புலிகளின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தைக் கூட, வெளியே கசியவிடாமல் பார்த்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை.
போர் முடிந்து சில நாட்களில் பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டு சாம்பர் கடலில் கரைக்கப்பட்டு விட்டதாக அப்போதைய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அறிவித்திருந்தார்.
2009 மே 22ஆம் திகதி வெளியான ஐலன்ட் நாளிதழில் பிரிகேடியர் உதய நாணயக்காரவின் அந்த பேட்டி வெளியானது.
அதில், பிரபாகரனின் நினைவுகளைக் கட்டியெழுப்புவதை அரசாங்கமும், இராணுவமும் விரும்பவில்லை என்றும், அவரை சாம்பராக்கி விட்டதாகவும், அவரது தனிப்பட்ட பொருட்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறியிருந்தார் பிரிகேடியர் உதய நாணயக்கார.
அதற்குச் சில நாட்களின் பின்னர், 2009 மே 24ஆம் திகதி வெளியான ரிவிர சிங்கள இதழுக்கு இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அளித்திருந்த பேட்டியில்,
பிரபாகரனின் உடல் அந்தப் பகுதியிலேயே படையினரால் எரிக்கப்பட்டு, சாம்பர் இந்தியப் பெருங்கடலில் வீசப்பட்டு விட்டதாக கூறியிருந்தார்.
அதுபோலவே, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம், 6ஆம் திகதி வெளியான சண்டே ஒப்சேவரில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவில் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது.
அந்தப் பேட்டியில் ஒரு கட்டத்தில் பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டதா புதைக்கப்பட்டதா- என்று பேட்டியை எடுத்த மஞ்சுள பெர்னான்டோ கேள்வி எழுப்புகிறார். அதற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அது எரிக்கப்பட்டது என்று பதிலளித்திருந்தார்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரைக்கும், பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டது என்று கூறிக் கொண்டிருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, திடீரென்று இப்போது அது புதைக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார் என்றால், அதற்கான காரணம் என்ன?
புதைக்கப்பட்டது என்ற விடயம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இப்போது தான் தெரிந்ததா அல்லது இதுவரை காலமும் அந்த உண்மையை அவர் மறைத்து வைத்திருந்தாரா?
இந்த விடயம் அவருக்கு இப்போது தான் தெரிந்தது என்று கூற முடியாது.
தனக்கு மட்டும் தான் போரின் அத்தனை சம்பவங்களும் தெரியும் என்று அவரே கூறியிருந்தார்.
அதைவிட, இப்போது தான் அவருக்கே தெரியும் என்றிருந்தால், முன்னாள் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க, போர் முனையில் பணியாற்றியிருக்கவில்லை,
அவருக்கு இறுதிப் போர்க்களத்தில் என்ன நடந்தது என்று தெரியாது என்று, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கூறியிருக்கமாட்டார்.
அவ்வாறாயின், பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்ட விடயத்தை அவர் ஏன் மறைத்து வைத்திருக்க வேண்டும்?
பிரபாகரன் உடல் புதைக்கப்பட்டது என்று தெரிந்தால், அந்த இடத்தைக் கண்டறிய பலரும் முயற்சிப்பார்கள் என்பது அரசாங்கத்துக்கும் படைத்தரப்புக்கும் நன்றாகவே தெரியும்.
அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால், என்றோ ஒரு காலத்தில் அது வழிபாட்டுக்குரிய இடமாக மாறும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
அதனால் சடலம் எரிக்கப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு விட்டது என்று அரசாங்கத் தரப்பு பொய்யைக் கூறியிருக்கலாம்.
அதேவேளை, பிரபாகரனின் உடல், புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிய முடியாத வகையில், அதன் மீது ஒரு படைத்தளத்தைக் கூட அமைத்து இரகசியத்தைப் பாதுகாக்கும் வாய்ப்பும் படைத்தரப்புக்கு இருந்ததை மறுக்க முடியாது.
எனவே இந்த விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணான செய்திகள் கசிய விடப்படுவதும், பிரபாகரனின் ஆளுமையை கேள்வி எழுப்பும் வகையிலான கருத்துக்களை தமிழ் மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிய வைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதையும், சாதாரண விடயங்களாக எடுத்துக் கொள்ள முடியாது.
உளவியல் போர் ஒன்றை ஒத்ததாகவே, இந்தச் செயற்பாடுகளை அவதானிக்க முடிகிறது.
இது யாரால் நடத்தப்படுகிறது- யாரை வைத்து நடத்தப்படுகிறது- யார் இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்பதையெல்லாம் இங்கு யாரும் வெளிப்படையாக கூறவேண்டியதில்லை.
ஏனென்றால், சரத் பொன்சேகா முன்னுக்குப் பின் முரணாக வெளியிடும் தகவல்களைப் போல, அது ஒன்றும் இரகசியமான விடயமல்ல.

சுபத்ரா
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila