முல்லைத்தீவு மாவட்ட சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையீடு


மாவட்டத்தின் நிலமையை கட்டுப்படுத்த அரச அதிபர் முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதியை தொடர்பு கொண்டபோதும் பதிலளிக்காது இராணுவ அதிகாரி அசமந்தப் போக்கில் இருப்பதனால் முல்லைத்தீவில் நேற்று மாலை முதல் பதற்றம் நிலவுகின்றது.

ஜனாதிபதியின் செயலாளர் , கடற்றொழில் அமைச்சர் , வட மாகாண ஆளுநர் ஆகியோரின் வாக்குறுதிகளுக்கு முறனாக ஒரே நாளில் கொக்குத்தொடுவாயில் 24 தென்னிலங்கை மீனவர்களிற்கு கடற்றொழில் புரிவதற்கான அனுமதியினை மீன் பிடி அமைச்சு இரகசியமான முறையில் வழங்கியதனால் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக தென்னிலங்கை மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாது இரகசியமான முறையில் அனுமதிகளை பெற்று வந்து படையினரின் துனையுடன் தொழில்புரிவது தொடர்பில் நீண்டகாலம் சுட்ணிக் காட்டியதோடு அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர், வட மாகாண ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டு இவர்களை இங்கிருந்து வெளியேற்றுமாறு கோரப்பட்டது.

இதனை அடுத்து இங்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இது தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாக தெரிவித்ததோடு ஓர்குழுவையும் நியமித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த இரு நாட்களிற்கு முன்பு மேலும் 24 தென்னிலங்கை மீனவர்கள்கொழும்பில் அனுமதியினைப் பெற்று வந்து இரகசியமான முறையில் வாடிகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடற்றொழிலுக்கான அனுமதிகளை இரகசியமான முறையில் பெற்றிருந்தபோதிலும் வாடி அமைப்பதற்கான அனுமதிகள் பிரதேச செயலகத்தில் பெறவேண்டும் என்பதே சட்ட ஏற்பாடு.

இருப்பினும் குறித்த அனுமதிகளை பிரதேச செயலகத்தில் பெறவில்லை என்பதன் காரணத்தினால் அப் பிரதேசத்தின் கிராம சேவகர்கள் சென்று அது தொடர்பில் வினாவியதோடு அனுமதி பெறாது அமைக்கப்பட்ட வாடிகளை உடன் அகற்றுமாறும் கோரியுள்ளனர்.

இதன்போது குறித்த பிரதேசத்தில் அத்து மீறி வாடி அமைத்தவர்கள் அருகில் இருந்த 593 பிரிகேட் இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து அங்கு வந்த 593 பிரிகேட்டின் கேணல் தர இராணுவ அதிகாரி இரு கிராம சேவகர்களின் அடையாள அட்டைகளைப் பறித்ததோடு அச்சுறுத்தி கிராமசேவகர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் குறித்த இரு கிராம சேவகர்களும் உடனடியாக பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதனை அடுத்து பிரதேச செயலாளர் கேணல் அதிகாரியை தொடர்பு கொண்டு சிவில் நிர்வாகத்தில் தற்போதும் இராணுவத் தலையீட்டிற்கு உங்களிற்கு யார் அனுமதி அளித்ததுஅந்த இடத்தில் அசம்பாவிதம் நிகழுமாக இருந்தால் இராணுவமே ஏற்படுத்தியது என்ற பொறுப்பினை நீங்கள் ஏற்கவேண்டும் . என சுட்டிக்காட்டியதோடு கிராம சேவகர்களிடமிருந்து பறிமுதல் செய்த அடையாள அட்டைகளை உடன் கையளிக்க வேண்டும் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு உத்தரவு இடப்படும் எனத் தெரிவித்ததோடு உடனடியாகவே பொலிசாருக்கும் தகவல் வழங்கினார்.

இதனை அடுத்து இரு கிராம சேவகர்களினது அடையாள அட்டைகளையும் மீள வழங்கிய இராணுவக் கேணல் . அங்கு அத்து மீறிய வகையில் வாடி அமைத்த தென்னிலங்கையர்களிடம் பொலிசார் வரும்போது கிராமசேவகர்கள் இலஞ்சம் கோரியதனால் இராணுவத்திற்கு தகவல் கொடுத்தோம் எனக் கூறுங்கள் என்று கூறி வைத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார். சிறிது நேரம் உரையாடிய பின்பு பொலிஸ் நிலையம் வந்து முறையிடுமாறு கூறிச் சென்றனர். இதனை அடுத்து கிராம சேவகர்கள் பொலிஸ் நிலையம் சென்றபோது மறு தரப்பும் வந்த பின்பே முறைப்பாடு பதியப்படும் எனத் தெரிவித்தனர்.

இதனால் நீண்ட நேரம் காத்திருந்த கிராமசேவகர்கள் . மறுதரப்பு வர வில்லை முறைப்பாட்டினை ஏற்ககோரியும் பொலிசார் முறைப்பாட்டினை பதிய மறுத்து விட்டனர். இதனால் கிராம சேவகர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் மாவட்ட அரச அதிபர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பிரதேச செயலாளரினால் உடனடியாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் செயல் குறித்து அறிய மாவட்ட இராணுவத் தளபதிக்கு பல தடவை தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டேன் . இருப்பினும் தொடர்பு கிடைக்கவில்லை இது தொடர்பில் நாளை ( இன்று) தொடர்பு கொண்டு அல்லது நேரில் சென்று இது தொடர்பில் ஆராயப்படும். எனத் தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila