வன்னியில் சிறுவர் இராணுவம்! தொடர்கிறது இராணுவ மயம்


வன்னியில் C.S.D இராணுவப் படைப் பிரிவில் முன்பள்ளிச் சிறுவர்கள் இணைக்கப்பட்டமை தொடர்பாக பெற்றோர் கவலையும் விசனமும் அடைந்துள்ளார்கள்.ஆனாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் அடக்குமறை அடாவடித்தனம் தொடர்கிறது. மாகாணக்கல்வி அமைச்சு பேச்சளவில் மட்டும்தான்.வன்னியில் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெளிப்படையாக இருந்த இராணுவ மயமாக்கல் தற்போதைய மைத்திரி நல்லாட்சியில் மிகவும் இரகசியமான முறையில் நன்கு திட்டமிட்ட வகையில் இடம்பெற்று வருகின்றது.வன்னியில் இராணுவத்திற்காக பொதுமக்களது உறுதிக் காணி அபகரிக்கும் நடவடிக்கை திட்டமிட்ட வகையில் தொடர்கின்றது.மக்களது வசிப்பிடங்களில் காணப்படும் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வேலையற்று இருந்த தமிழ் இளைஞர், யுவதிகளை சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவில் வேலைவாய்ப்பு எனக்கூறி இணைத்துக்கொண்ட இலங்கை இராணுவப் படைப் பிரிவு,அவர்களை விவசாயப் பண்ணைகள், பாலர் பாடசாலைகள் எனப் பல்வேறுபட்ட நிறுவனங்களில் இராணுவத் தலைமையின் கீழ் இராணுவக் கண்காணிப்பு, மேற்பார்வையின் அடிப்படையில் பணிக்கமர்த்தியுள்ளார்கள்.இதில் சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவு முன்பள்ளி ஆசிரியைகள் கற்பிக்கும் முன்பள்ளிகளை இராணுவம் தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதுடன், அங்கு எப்படியான செயற்பாடுகள் இடம்பெறவேண்டும் என்பதையும் திட்டமிட்டு வகுத்து வழங்கியுள்ளது.அங்கு கற்கும் முன்பள்ளிச் சிறுவர்களுக்கான சீருடைகளையும் தமது இராணுவச் சின்னம் பொறிக்கப்பட்ட சீருடைகளாக தற்போது மாற்றி வழங்கியுள்ளார்கள்.இராணுவத்தினது சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவு (C.S.D) முன்பள்ளிகளில் கற்கும் மாணவர்கள் இராணுவத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இராணுவச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ள சீருடைகளைத்தான் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சீருடைக்கான பணமாக 600 ரூபாவினை முன்பள்ளி மாணவர்களது பெற்றோர் செலுத்தி C.S.D இராணுவச் சீருடையை பெற்று மாணவச் சிறார்களுக்கு அணிவித்து முன்பள்ளிகளுக்கு அனுப்புமாறு சிவில் பாதுகாப்புப் படையணியைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியைகள் வற்புறுத்தி வருவதாகப் பெற்றோரால் கூறப்படுகின்றது.தமது சிறுவர்களை முன்பள்ளிகளில் கல்வி கற்கத்தான் அனுப்பியதாகவும் சிறுவர்களை இராணுவப் படைப் பிரிவில் இணைப்பதற்கு அனுப்பவில்லை எனவும் கூறப்படுவதுடன்,இவ்விடயத்தில் முன்பள்ளிகளை மாகாணக் கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவேன், கொண்டுவருவேன் என நீண்ட காலமாகக் கூறிவரும் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா விரைந்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து முன்பள்ளிச் சிறார்களை இராணுவப் படைப்பிரிவில் இணைப்பதிலிருந்து காப்பாற்றுமாறு பெற்றோர்களால் கோரப்படுகின்றது.கல்வி அமைச்சின் கீழ் இருக்கவேண்டிய முன்பள்ளிக் கல்விக் கட்டமைப்பு தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுசெல்லப்பட்டு இராணுவப் பிடியில் சிக்கியுள்ளதானது பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila