எழில் ராஜன் (வருகைதரு விரிவுரையாளார்- அரசியறிவியல் துறை- கிழக்கு பல்கலைக்கழகம், இணைப்பேச்சாளர்- தமிழ் சிவில் சமுக அமையம்)
சிறிலங்கா அரசு போர் வெற்றியை அறிவித்து இவ்வாரத்துடன் ஆறு வருடங்கள் பூர்த்தியாகின்றன. மாற்றம் வேண்டி ஆட்சி அமைக்கும் அரசு இதுவரைக்கும் தமிழர்களுக்கு உருப்படியாக ஏதும் செய்ததாக தெரியவில்லை. செய்கிறோம் என்று மட்டும் பூச்சாண்டி காட்டி இப்போது தமிழர் பிரச்சினை அல்லது அவர்களுக்கான அரசியல் தீர்வு பற்றி பேசுவது அரசியல் சாணக்கியம் அல்ல என்று கூறி தமிழ்த் தலைமைகளையும் உடன்பட வைத்திருக்கிறது. இதை அரசியல் புனைவு என்பதா அல்லது அரசியல் பேதமை என்று பொருள் கொள்வதா? இனப்படுகொலைகள், இன அழிப்பு, நடந்து முடிந்த இடங்களில் சிறிலங்கா அரசு கறுப்புச் சுற்றுலாவை ஊக்கப்படுத்தியது (Dark Tourism by Folly and Lennon) மட்டுமல்லாது தனது இருப்புக் கரங்களை இன்னும் ஆழப்படுத்தி தமிழர்கள் பலவீனமானவர்கள் இரண்டாம் தர பிரசைகள் எனும் செய்தியை உரக்கச் சொன்னது. எங்களுக்கான நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு அந்நிய அடக்குமுறை அதிகாரத்தை வலியுறுத்துகின்ற நினைவுப் படிமங்கள் முளைக்க வைக்கப்பட்டன.
வரலாற்றியல்
பின் - இனப்படுகொலை காலம் பொதுவாகவே நிலைமாறுகால நீதிக்கான காலம். தற்போது அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் இழப்பீட்டுச் செயற்றிட்டத்திற்குள் உள்வாங்கப்பட முடியாதது இவை தனி மனித உரிமை சார்ந்தது. சிறிலங்கா அரசும் அதன் நிறுவனக் கட்டமைப்புக்களும் Lal Jeyawardena குறிப்பிடுகின்ற Basic-needs-oriented development strategy - மிகவும் குறைந்த அடிப்படைத் தேவைகளை மையப்படுத்திய அபிவிருத்தித் தந்திரோபாயத்தை, மிகைப்படுத்தி, தமிழ் மக்களுக்கு வெள்ளை யானையை பரிசளிப்பதாக காட்சிப்படுத்த முனைகின்றது.
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய அவலம் தமிழ் இன வரலாற்றின் இருண்ட யுகம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. நடந்தது இனப்படுகொலை தான் என வடமாகாண சபைத் தீர்மானம் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றது அதை இங்கு மீட்டுப் பார்க்க வேண்டிய தேவை இருக்காது. கறை படிந்த காலங்கள் நிச்சயமாகவே ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பது எங்கள் எல்லோருடைய அவாவும் கூட வரலாற்றில் ஆவணப்படுத்தல் என்னும் பிண்ணனியில் தான் எனது உரை அமைகின்றது.
இனப்படுகொலை ஆவணப்படுத்தலில் வரலாற்றியலின் பிரிதிநிதித்துவ இயலாத்தன்மையை ஆராய்ந்து நினைவுத்திறத்தின் வகிபாகம் ஆவணப்படுத்தலில் காத்திரமானது எனக் கூற விளைகின்றது. Nigal.C.Hunt Memory, War and Trauma என்கின்ற நூலில் நினைவுத்திறமானது எழுத்துக்கு முற்பட்டது என்று கூறுகின்றாhர். தொடர்ந்து கூறுகையில் வரலாறு நினைவுத் திறத்தில் இருந்து உருவானது a narrative rendition of the past, p.98. நினைவுத் திறத்திலிருந்து உருவான வரலாற்றக் கற்கைநெறி பின்னர் சமூக விஞ்ஞானக் கற்கை நெறிகளுக்குள் உள்வாங்கப்பட்டது.
வரலாற்றியல் எண்ணக் கரு வரலாற்றை எழுதும் கற்கை நெறி என்று மிக எளிமையாக பொருள் கொள்ளலாம். The study of history writing. 19ம் நூற்றாண்டில் வரலாற்றுக் கற்கை நெறி நிறுவனமயப் படுத்தப்பட்டபோது ((Sanjay Seth) வரலாற்றியல் கடந்த காலங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மூல - முதன்மையான ஊடகமாக பரிணமித்தது. ஏற்கனவே கடந்த காலத்தை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற முறைகள் புறந்தள்ளப்பட்டு வரலாற்றுக் கற்கை நெறி முதன்மைப்படுத்தப்பட்டது.
வரலாற்றுக் கற்கைநெறி ஓர் அறிவியலாக உருவாக்கம் பெற்றபோது வரலாற்றை ஆவணப்படுத்துகின்ற வேலை உதிரிகளிடம் சென்று சேர்ந்தது. இவ்வாறு வரலாற்றை பிரதி நிதித்துவப்படுத்தும் முறைமை (based on Western epistemology) மேற்கத்தைய அறிவியல் முறைமை சார்ந்தது. மேற்கத்திய உலகம் சாரா உலகை, வரலாற்றியல் பிரதிநிதித்துவப்படுத்தமா? என்ற கேள்வி பின் காலனித்துவ திறனாய்வு கற்கை நெறிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின் காலனித்துவ அறிவியல் கற்கை நெறி வரலாற்றியலை சிக்கலுக்குட்படுத்தி வரலாற்றியல் மேற்குலகம் சாரா (non-western pasts) கடந்த காலத்தை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய ஓர் ஊடகமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை (Sanjay Seth).
இவ்வுரையின் நோக்கமாக இனப்படுகொலையை பிரதி நிதித்துவப்படுத்தும் முதன்மை ஊடகமாக வரலாற்றியல் இருப்பதை சிக்கலுகுட்படுத்தி அதனுடைய இயலாத்தன்மையை ஆராய்ந்து இனப்படுகொலையைப் பிரதிநிதித்துவப்படுத்த மாற்று ஆவணப்படுத்தல் வெளியை உருவாக்க முயற்சிப்பதும் அதில் நினைவுத்திறத்தின் வகிபாகம் பின் போர், பின் இனப்படுகொலைச் சூழலில் இன்றியமையாதது எனச்சுட்டுவதுமாகும். ஐரோப்பிய மையப்படுத்தப்பட்ட வரலாறும். வரலாற்றியலும் மேட்டுக்குடி சார்ந்த பண்டிதர்களின் அறிவார்ந்த திறனாய்வாக மாறிப் போனது கண்கூடு. இவ்வாறான சூழலில் பிரதான சிந்தனை திறனாய்விலிருந்த ஒதுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, விடப்பட்ட பிறர் (The Other) குழுமம் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். இவர்களது கருதுகோள்களை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய ஊடகத்தை முன்னிறுத்துவது காலத்தின் கட்டாயமாகின்றது. பின் இனப்படுகொலை சூழலில் குறிப்பாக தமிழினப் படுகொலை சார்ந்து இதுவரைக்கும் எழுந்த இலக்கியங்களில் சாதாரணர்களின் சொல்லாடல்கள் எவ்வாறான கண்ணாடி வில்லையூடாக பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றது என்பது யாம் அறிந்தது.
ஆய்வாளர்கள் தங்களது பயில்வொழுக்கங்களுக்கேற்ப (discipline) தங்களது எல்லைகளுக்கும், இலக்குகளுக்கும், நோக்கங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப முன்னீடுபடுகளை (preoccupations) தவிர்த்து விடயநோக்கு உண்மைகளை (objective truth) உருவாக்க முனையும் போது மற்றதுகளின் முன்னுரிமைகள் குறிப்பாக அரசியல் முன்னுரிமைகள் பிரதிநிதித்துவப்படாத மற்றதுகளின் பிறிதொரு அறிவியல் சொல்லாடல் (Academic discourage) உருவாக்கப்படக்கூடிய சூழல் வலிந்து உருவாகின்றது. ‘மற்றதுகள்’ தாங்கள் சார்ந்த அறிவியல் சொல்லாடலை தாங்களே உருவாக்குவதற்கான குறிப்பாக ‘மற்றதுகள்’ விரும்புகின்ற அரசியல், அறவியல் சொல்லாடலை உருவாக்குவதற்கான சூழலை பிறப்பிக்க வேர் தேடும் படலம் அத்தியாவசியமாகின்றது.
வட்டார எல்லைகளுக்கு அப்பாற்பட்டு தேசிய முன்னுரிமைகளால் (National priorities) மீளுருவாக்கம் செய்யப்பட்ட கோமி பாபா குறிப்பிடுகின்ற மூன்றாம் வெளி (Third space)கட்டமைக்கப்பட வேண்டும் விடுதலையை எதிர் நோக்கியதாக. மேலே குறிப்பிட்டதிற்கிணங்க வரலாற்றியல் தனது இயலாத்தன்மையை, இனப் படுகொலை பிரதிநிதித்துவம் சார்ந்து வெளிப்படுத்துவது மிகத்தெளிவாகப் புலப்படுகின்றது. வரலாற்றியல் இனப்படுகொலையை பிரதிநிதித்துவப் படாதவிடத்து, அல்லது அதனது இயலாத்தன்மை உணரப்படுமிடத்து, மற்றதுகளின் முன்னுரிமையை மையப்படுத்திய மைய மறுப்பு சார்ந்த பிரதிநிதித்துவ வெளி உருவாக்கப்பட்டு அடையாள விளக்கவியலை (Identity hermeneutics) அகவயப்படுத்திய தேசிய சொல்லாடல் பாதிக்கபட்டவர்களால் உருவாக்கப்படுவது இன்றியமை யாதாகின்றது.
நினைவுத்திறம்
கடந்த ஒரு சில தசாப்தங்களாக நினைவுத்திற கற்கை நெறி படைத்த இலக்கியங்கள் ஏராளம் Kerwin Lee Elein ‘நினைவுத்திற தொழிற்பேட்டை’ என்று குறிப்பிடுமளவிற்கு அத்திறனாய்வு மிக வேகமாக வளர்ந்து விட்டது. நினைவுத்திற திறனாய்வு சார் கற்கை நெறிகள் வளர்ச்சிக்குப் பங்களித்தவர்களின் பெயர்பட்டியல் மிக நீண்டது அவர்களில் குறிப்பிடப்படக் கூடியவர்கள் என நான் கருதுவது 1980 களில் வெளிவந்த இருவருடைய இலக்கியங்கள் Yosef Yerushalmi’s ‘Zakhor: Jewish history and Jewish Memory’(1982) Pierre Nora’s ‘Between Memory and History’. நினைவுத்திற கற்கை நெறியின் வருகை வரலாற்றியல் திறனாய்வின் எல்லைகளைக் கேள்விக்குட்படுத்தியது ஒரு சில ஆய்வாளர்களால் நினைவுத்திற திறனாய்வுக் கற்கை நெறி வரலாற்றுத் திறனாய்வுக் கற்கை நெறிக்கு மாற்றீடாகக் கொள்ளப்படுகின்றது.
9/11 பின்னர் புஸ்ஸின் ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ தெய்வீக நிலையை அடைந்திருந்தது இதன் பின்னர் விடுதலை, சுயாட்சி, சுயநிர்ணயம் போன்ற கோரிக்கைகளை முன்வைக்கும் குரல்கள் அனைத்துமே பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு தீவிரவாதக் குழுக்களாக வர்ணம் பூசப்பட்டது. புஸ்ஸின் கோசம் 2008களின் மத்தியில் இருந்து மீள உயிர்ப்பிக்கப்பட்டு தமிழர் மீதான முழுமையான அழிப்பு அரங்கேற்றப்பட்டது நான் சொல்லி தெரிய வேண்டிய விடயமல்ல. மீள் உயிர்க்கப்பட்ட புஸ்ஸின் கோசம் தமிழர் தேசியம் சார்ந்த கோரிக்கைகளை பயங்கர வாதத்தின் புதுப் பரிமாணங்களாக உருவகித்து ஒட்டுமொத்த தமிழர் உரிமைகளும், அபிலாசைகளும் தீவிரவாத சொல்லாடல்களுக்குள் உள்வாங்கப்பட்டு தமிழர் தரப்பு சார் அரசியல் உரிமைகள் இருட்டடிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இன்றும் தமிழர் தரப்பு அரசியல் உரிமை பேசும் குரல்கள் அதி உச்ச தீவிர எச்சங்களின் மீள் உயிர்ப்பாக வர்ணம் பூசப்பட்டு இருண்மை யாக்கப்படுகின்றது.
பூகோள அரசியலில் முதலாளித்துவ நலன்களுக்காகவும் அதிகார வெறிக்காகவும் சோடிக்கப்பட்ட சொல்லாடல்கள் அறிவியல் சொல்லாடல்களாகக் கட்டமைக்கப்பட்டு மிகச் செறிவாக ஆய்வுகளில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.
இச் செல்நெறி மிக முனைப்பாக ஈழத்தில் பின் முள்ளிவாய்க்காலில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை நாம் அறியாதவர்கள் அல்ல. இதற்கான சிவராம் குறிப்பிடுகின்ற Counter – Counter insurgency உல வழிமுறைகள் இல்லாது குரல்வளைகளில் சப்பாத்துக் கால்கள் இறுகிய நிலையில் ஒரு சொட்டு தண்ணீரே மேல் என்று பயணிக்க முற்படுவது எந்த விதத்திலும் எதிர்கால சந்ததிக்காக நாம் செய்யும் நீதியாக அமைந்து விடாது.
பின் முள்ளிவாய்க்கால் தசாப்தம் என்பது தமிழ் அடையாள கட்டுடைப்பு பொறிமுறை நிறுவனமயப்படுத்தப்பட்டு அந்நிய அடையாளங்கள் வலிந்து திணிக்கப்பட்டு நாங்கள் விரும்பாத அடையாளங்களால் நாங்கள் உருவமைக்கப்பட்டோம்.
இனப்படுகொலைக்கு இரையாக்கப்பட்ட சமூகம் இன்று வேர்களைத் தேடி தனக்கான கூட்டு அடையாள மீள் கட்டுருவமைப்பு தந்திரோபாயத்தை வகுக்க வேண்டிய கட்டாயத்திற்குள் இன்று தள்ளப்பட்டிருக்கின்றது.
வேர்களைத் தேடும் படலத்தில் இனப்படுகொலைக்குப் பின்னான தளத்தில் நினைவுத்திறம் முக்கியத்துவம் பெறுகின்றது. (Smith Rogger 1992) குறிப்பிடுவது போல பாதிக்கப்பட்டவர்கள் சமூகம் சார்ந்த குரல்கள் சார்பான பிரதிநிதித்துவம் இல்லாதொழிகின்ற போது அவர்களுக்கான குரல்கள் அலட்சியமான, முன்னீடு பாடுகளை முன்வைத்த உலகில்
கேட்கப்படாமலே போய் விடும்.
Dan Stone தனது இனப்படுகொலையும் நினைவுத்திறமும் என்கின்ற ஆய்வுக் கட்டுரையில் ஒரு இனப்படுகொலை நடந்தேறுவதற்கு கூட்டு நினைவுத் திறத்தை அணிதிரட்ட வேண்டிய தேவை இருக்கின்றதெனவும் இதே போல் தான் இனப்படுகொலையை நினைவூட்டுவதற்கும் கூட்டு நினைவுத்திற அணிதிரட்டல் அவசியம் எனக் குறிப்பிடுகின்றார். மேலும் Nora குறிப்பிடுகையில் நினைவுத்திறம் என்பது நிரந்தரமான உண்மையான தோற்றப்பாடு, எங்களை எப்போதுமே நிகழ்காலத்துடன் இணைக்கும் ஒரு பிணைப்பு என்கின்றார்.
‘என்னுடைய மேலாடை பொத்தான்கள் அவிழ்க்கப்பட்டிருந்தன எனது உள்ளாடைகளை அந்த அறையில் விட்டு வந்திருந்தேன். மீண்டும் நான் தங்கியிருந்த மண்டபம் நோக்கி மீண்டு வரும் போது படைவீரர்கள் என்னைப் பார்த்து எள்ளி நகையாடினர். நான் குனிந்த தலை நிமிராது அவமானத்தால் தரையைப் பார்த்து நடந்து சென்றேன். நீண்ட மண்டபத்தில் நடக்கும் போது என்னால் மேல் சட்டையின் இரண்டு பொத்தான்களை மட்டுமே பூட்ட முடிந்தது என்னுடைய முலைகள் வெளித்தெரிந்தன. அதற்கு மேல் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
என்னுடைய பாவாடை இரத்ததில் தோய்ந்திருந்தது என்னுடைய அவயங்கள் இரும்புக்கம்பியினால் சுடப்பட்டிருந்தது. எனது உடல் உடைந்த போத்தல் குவளையினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது’ (மேற்குறிப்பிட்ட வன்புணர்வு சம்பவம் மனிக் முகாமில் நடந்தேறியது இது போன்ற சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வராமலே நடந்தேறியிருக்கின்றன.)
இது உதிரியான தாயின் வன்புணர்வு சம்பவம். தனிமனித நினைவுத்திறம் இறந்தகால சம்பவ நினைவூட்டல்களில் தங்கியுள்ளது. தனி உதிரிக்கு நடந்தேறியவை காலம், இடம் சார்ந்தது.
காலம், இடம் பொய்க்கும் போது உண்மைத் தன்மை கேள்விக்கு உட்பட்டு விடாது சரணடைந்த மக்கள் நிர்வாணமாக்கப்பட்டு படையினரின் சோதனைச் சாவடிக்குள்ளால் வலிந்து பயணிக்க திணிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரது அனுபவமுமே வித்தியாசமானது Halbwachs கூற்றப்படி தனித்த உதிரியான நினைவுத்திறன்களின் கூட்டு வடிவமே கூட்டு நினைவுத்திறம் ஆகும். காரணம் மானிடம் தனித்த தன்மையுடையதல்ல அது கூட்டுக்களின் தொகுப்பு. நினைவுத்திறம் ஒரு சமூகத் தோற்றப்பாடு அது வெற்றிடத்தில் அல்லது சூன்யத்தில் நிகழ முடியாது என்பது Herbert Hirsch ன் கருத்து.
உதிரியின் அகவயப்படுத்தப்பட்ட அனுபவங்களும் கடந்த கால பட்டறிவும் அவற்றினூடாக எழுந்த தெரிதலும் (knowing) எனது அடையாளத்தையும் இருப்பின் வகையறாவையும் தீர்மானிக்கின்றன. அனுபவம் சார்ந்த விபரிப்புக்கள் (narratives) மீள் வாழ்தலை தூண்டுகின்றது. இம் மீள் வாழ்தல் எனக்கான அடையாளத்தை உருவாக்க விளைகின்றது.
மீள் விபரிப்புக்கள் புதிய தெரிதல்களுக்குள் உதிரியை இட்டுச் செல்கின்றது. இப்புதிய தெரிதல் அனுபவத்தின் போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புதிய தெரிதலின் மீள் வாசிப்புக்களும், தொடர்ச்சியான விபரிப்புக்களும் அடையாள கட்டுருவமைப்புக்கு இட்டுச் செல்கின்றது. (Nicola King 2000) அடையாள கட்டுருவமைப்புக்கள் எல்லாமே அரசியல் சார்புடையவை.
மானிடம் உதிரியானதலல் மாறாக கூட்டானது. உதிரியின் சமூக கூட்டுறவும், பகிர்தலும் கூட்டு அனுபத்திற்கு அழைத்துச் செல்கின்றது. மனித ளsocialisation கூட்டு அடையாள தெரிவுக்கு
வலிகோலுகின்றது.
கூட்டு நினைவுத்திறம் கடந்த கால பொதுமைப் படத்தப்பட்ட சொல்லாடல்களையும் படிமங்களையும் ஒருங்கே சேர்த்து தனக்கென ஒரு காலாச்சாரத்தை கூட்டுருவமைக்கின்றது.
இதன் எல்லைகள் உதிரியின் நினைவுத்திற எல்லைகளைக் கடந்ததாக பொது நோக்கத்தை இலக்காக வைத்து நகருகின்றது. Halbwachs விபரிப்பது போல நிகழ் காலத்திலிருந்து, நிகழ்காலத்தில் நடப்பவைகளையும், தேவைகளையும், நல்ன்களையும் மையப்படுத்தி கடந்த காலம் விபரிக்கப்படுகின்றது. இந்த கூட்டு நினைவுத்திறத்தை சுற்றி தொன்மைக்கதை உருவாக்கப்படுகின்றது. இக்கதையின் உள்ளடக்கம் மக்கள் வாழ்வியலின் நடைமுறை சார்ந்த அபிலாசைகளையும், ஆதங்கங்களையும், பிரதி பலிக்கின்றது. படிமப் பிரதிபலிப்பின் விளைவாக நினைவுச் சின்னங்கள், நினைவக்குறிப்புக்கள், நினைவுக் கூட்டங்கள், வளைவுகள் படைக்கப் படுகின்றன. அப்படைப்புக்கள் கூட்டு அடையாளத்தை மையப்படுத்தி விபரிப்புக்களை (Stone 2010).
தேசிய நினைவுத்திறம்
தன்னை ஒரு இனமாக கருதிக் கொண்டு பொது அடையாளத்தினூடு தனித்தவுமிக்க குழுமமாக கூட்டு வரலாற்றின் இருப்பில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்தும். இனம் தங்களுக்கான Meta- விபரிப்புக்களை தேசிய நலன் சார்ந்தும், முன்னுரிமைகள் சார்ந்தும் உருவாக்க கடமைப்பட்டுள்ளது.
நினைவுத்திறம் சாராது எந்தக் குழும அடையாளமும் இருப்புப் பெற்றதில்லை. ஓர் இலக்கு நோக்கிய தொடர்ச்சி என்பது நினைவூட்டல்களால் தக்க வைக்கப்படுகின்றது. நினைவூட்டப்படுபவை ஏற்கனவே அனுமானிக்கப்பட்ட அடையாளத்தினால் வரையறுக்கப் பட்டிருக்கின்றது. ஒவ்வொரு குழுமமும் தனக்கான கடப்பைஃகடந்ததை நினைவூட்டி அக்குழுமம் சார்ந்த தனித்தன்மையை பேணுகின்றது. இவ்வாறு மீள்கட்டமைக்கப்பட்ட கடந்த கால படிமங்களால் அக்குழுமத்திற்கான பூர்வீகத் தன்மையும் அதன் சிறப்பு மிக்க தன்னிகரற்ற தன்மையும் தங்கியுள்ளது. (Litak 2009)
Everest Renan ன் கூற்றுப்படி பொதுமையில் துன்பம் ஒருமைப்படுத்துகின்றது குழுமங்களை, இனங்களை இன்பத்தை விட. தேசிய நினைவுத்திறத்தை பொருத்த வரையில் துன்பியல் வெற்றியை விட விழுமியங் கொண்டதாக கணிக்கப்டுகிறது. காரணம் இது கடப்பாடுகளை, கடமைகளை திணிப்பதோடு ஒருங்கமைக்கபட்ட பொது வேலைத்திட்டத்தையும் தேவைக்குட்டபடுத்துகின்றது. (‘suffering in common unifies more than joy does. Where national memories are concerned, griefs are more of value than triumphs, for they impose duties and require a common effort’.)
Memory as mobilization (Dan Stone)
நினைவுத்திற அணிதிரட்டல்
இனப்படுகொலையின் பின்னான சூழலில் நினைவுத்திறமானது மக்களுக்கு இழைக்கப்பட்ட நீதிக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இனப்படுகொலை நிகழ்வதற்கு முன் பாரிய நினைவுத்திற அணிதிரட்டல் நிகழ்வது கட்டாயம் என Dan Stone குறிப்பிடுகின்றார். இந்த அணிதிரட்டல் வௌ;வேறு உளவியல் காரணங்களினால் நிகழலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இனப்படுகொலை புரிபவர்களின் உளவியலை உற்று நோக்கும் போது அவர்களுடைய உயர்வு மனப்பான்மை (superiority) ஏனையோரை விட தாங்கள் உயர்வானவர்கள் அவர்கள் கொண்டிருக்கும் கருத்தியல் உயர்வானது. (இவைகள் வலிமையற்ற குழுமத்தை இல்லாதொழிக்கும் மூர்க்க குணம்) அதிகார வலிமையுள்ளவர் கொண்டிருக்கும் இறுக்கமான கருத்தியல் வலிமையற்றவரை அழிக்கின்றது. இன்னும் ஆழமாகப் பார்க்கின்ற போது இறுக்கமான கருத்தியலை தாங்கிய தாங்கள் ஏனையோரை விட உயர்ந்தவர்கள் என்ற மனப்பாங்கு பயத்தின் அடிப்படையில் உருவாகின்றது. இப்பயம் தான் அணிதிரட்டலை முன்னெடுக்கின்றது.
(Dan Stone 2000),இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையை குறிப்பிடலாம். Dan Stone குறிப்பிடும் படி ஒரு இனப்படுகொலை கருக் கொள்வதற்கு கருத்தியல் நினைவுத்திற அணிதிரட்டல் அவசியமோ அவ்வாறான நினைவுத்திற அணிதிரட்டல் இனப்படுகொலைக்கு நீதி வேண்டிய பயணத்திலும் அவசியமாகின்றது. இவ்நீதி வேண்டிய அணிதிரட்டலுக்கு நினைவுத்திறம் ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதே நினைவுத்திற அணிதிரட்டல் தான் தமிழர்களுக்கான விடியலைப் பெற்றுத் தரும் என்பது எனது தீர்க்கமான நம்பிக்கை.
ஆய்வாளர்கள் சுட்டும் இனவழிப்புக்கு காரணமான எதிர்மறையான நினைவுத்திற அணிதிரட்டல் நீதியை வேண்டிய யாகத்தில் நேர்மறையாக மாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என நம்புகின்றேன். பின் முள்ளிவாய்க்கால் அரசியல் முன்னெடுப்புக்களில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு முன்னெடுப்புக்களிலும் நேர்மறை நினைவுத்திற அணிதிரட்ட்டல் இன்றியமையாதாகின்றது.. இலக்குகள் எட்டப்படும் வரை நினைவுத்திறம் தொடர் மீள்கட்டுருவமைப்புச் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டியது வரலாற்றுக் கட்டாயம்.
எழில் ராஜன் (வருகைதரு விரிவுரையாளார்- அரசியறிவியல் துறை- கிழக்கு பல்கலைக்கழகம், இணைப்பேச்சாளர்- தமிழ் சிவில் சமுக அமையம்)