சம்பந்தனுக்கு நாட்டைப் பிரிப்பதால் எந்தவித நன்மையும் இல்லை. அப்படி நாட்டைப் பிரித்தாலும் அவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆகவே அவர் எமது பிரதேசத்துக்குள் வந்துவிடுவார் எனக் கூறுகின்றார் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
இது தொடர்பில் ரணல் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,
பரவிப்பாஞ்சான் சம்பவத்துக்குப் பின்னர் நான் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை நேரில் அழைத்திருந்தேன். அவர் வருகை தந்திருந்தார்.அவரிடம் கேட்டேன் ‘சம்பந்தன் நீங்கள் இராணுவத்தில் இணையப் போகிறீர்களா? அவ்வாறு நீங்கள் இணைந்தால் உங்களுக்கு பி்ரிகேடியர் அல்லது கேணல் இன் சீவ் பதவியை என்னால் தரமுடியும் எனக் கூறினேன்.
‘தான் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்குச் சென்றபோதே குறித்த சம்பவம் நடைபெற்றது. இராணுவம் சுவீகரித்துள்ள காணி மக்களுக்குரியது. அந்தக் காணி தம்மிடம் மீளக் கையளிக்கப்படுமா என்ற சந்தேகத்தில் மக்கள் உள்ளனர். அது தொடர்பில் அவர்கள் வேதனையுடன் உள்ளனர். அதனால்தான் அங்கு சென்று அந்த காணியினை பார்வையிட்டேன்’ என அவர் என்னிடம் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இராணுவத் தளபதியிடமும் விசாரித்தேன். எதிர்க்கட்சித் தலைவர் இராணுவ முகாம் உள்ள பக்கம் செல்லாது மக்களின் காணி உள்ள பக்கமே சென்று பார்வையிட்டார். அங்கு சென்று பார்வையிடுவதில் பிரச்சனையில்லை. செல்வதற்கு முன்னர் எங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கலாம் என்றார்.
ஆனால் இன்று சிலர் நாட்டைக் குழப்புவதற்கு முயற்சிக்கின்றனர். அவ்வாறில்லை, நாட்டைப் பிரிப்பதால் அவருக்கு எவ்வித பயனும் இல்லை. ஏனெனில் அவர் இருப்பது திருகோணமலையில். நாட்டைப் பிரித்தாலும் அவர் எமது பிரதேசத்திற்குள் வந்து விடுவார்.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் இராணுவ முகாமுக்குள் சென்றதை சிலர் வேறுவிதமாக பெரிதுபடுத்த முனைகின்றனர். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர். எனவே அவர் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கேள்வி எழுப்பலாம். நாடாளுமன்றம் நடைபெறாததால் நான் அவரை விசாரித்தேன் எனவும் தெரிவித்தார். நாடாளுமன்றம் நடைபெறும்போது அவர் இது தொடர்பில் கேள்வி எழுப்பலாம் எனவும் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள காணி அரசாங்கத்துக்கோ இராணுவத்துக்கோ சொந்தமானது அல்ல. அது மக்களின் காணி. யுத்தம் நடைபெற்றபோது பாதுகாப்புத் தேவைக்காக அக்காணிகளை இராணுவம் சுவீகரித்தது. தற்போதைய அமைதியான சூழலில் அக்காணிகளை மீளக் கையளிக்கவேண்டும். இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அக்காணிகளை மக்களிடம் மீளக் கையளிப்போம் எனவும் தெரிவித்தார்.