யாழ்.மறைமாவட்டத்தின் மேதகு ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களுக்கு அன்பு வணக்கம். தங்கள் மீது சைவ மக்கள் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டுள்ளனர். பொதுவில் யாழ்.மறை மாவட்டத்தில் ஆயர்களாக-அருட்தந்தையர்களாக இருந்தவர்களை இருக்கின்றவர்களை சைவத் தமிழ் மக்கள் என்றும் மதித்தும் போற்றியும் வந்துள்ளனர் என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகின்றோம்.
யாழ்.மறை மாவட்ட ஆயர்களுக்கோ அல்லது பங்குத் தந்தையர்களுக்கோ எதிராக சைவ மக்கள் மனம், மொழி, மெய்களால் எத்தீங்கும் செய்திலர். எனினும் சைவ மக்களின் இப் பெருங்குணம் பல சந்தர்ப்பங்களில் கத்தோலிக்க சமயத்தாலும் இதர கிறிஸ்தவ அமைப்புகளாலும் பலவீனமாகவே கரு தப்பட்டு வந்துள்ளது.
இத்தகைய போக்கை தாங்கள் நிச்சயம் மாற்றியமைப்பீர்கள் என்ற நம்பிக்கை சைவ மக்களிடம் நிறைய இருந்தது. எனினும் கொழும்பு மாநகரில் அண்மையில் கொழும்பு தமிழ் அரசியல் தலைமை சார்ந்தவர்கள் நடத்திய கூட்டம் ஒன்றில் தாங்கள் கலந்து கொண்டமை சைவ மக்களுக்குப் பெரும் கவலையைத் தந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு கலாசாரத்தை கட்டுப்படுத்துதல் என்ற பெயரில் கொழும்பில் நடந்த இந்தக் கூட்டமானது வேறு நோக்கங்களைக் கொண்டது. எனினும் நல்ல நோக்கத்தோடு இவற்றை அணுகுகின்ற தாங்கள் இதை அறியாமல் இருந்திருக்கலாம்.
உண்மையில் இப்போது வட புலத்தில் சைவ சமயத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பரவலாக முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனைச் செய்வதற்காக கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையை சார்ந்த எம்.பி ஒருவர் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
வடக்கின் முதலமைச்சரை வெளியேற்ற வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்ற இவர், அந் தக் கூட்டத்தில் முக்கிய ஏற்பாட்டாளராக இருந்துள்ளார்.
இது தவிர, தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களத் தலைமைகளுடன் சேர்ந்து செளகரியங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கக்கூடிய கொழும்பு தமிழ் அரசியல் தலைமையின் சகபாடிகள் சிலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இத்தகைய கூட்டத்தில் யார் கலந்து கொண்டிருந்தாலும் சைவத் தமிழ் மக்கள் கவலை கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் கலந்து கொண்ட போது உங்கள் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வாள்வெட்டு கலாசாரம் தொடர்பில் கொழும்பில் கூட்டம் போட்டு ஆராய்ந் ததற்குள் உள்நோக்கம் இருந்துள்ளது என்பதை சாமானிய மக்களும் ஏற்றுக் கொள்வர்.
எனவே அன்புக்குரிய யாழ்.மறைமாவட்ட ஆயர் அவர்களே!
தற்போது சமய அடிப்படையில் வடக்கு மாகாண சபையின் ஒழுங்குநிலைகள் திட்டமிட்டு குழப்பம் செய்யப்படுகின்ற நேரத்தில், அரசியல்வாதிகள் கலந்து கொள்கின்ற-அவர்கள் தங்கள் உள்நோக்கத்தை அரங்கேற்ற நினைக்கின்ற கூட்டங்களில் தாங்கள் பங்கேற்பதை தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்பது நம் தாழ்மையான கருத்து.
தேவையாயின் தங்கள் தலைமையில் அரசியலைத் தவிர்த்து மதத்தலைவர்கள், பொது அமைப்புக்கள், நீதி பரிபாலனம், பொலிஸ் என்பவற்றின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணத்தின் தற்கால நிலைமை பற்றி ஆராய்ந்தால் அதை அனைத்துத் தமிழ் மக்களும் கைகூப்பி வரவேற்பர்.
இதை விடுத்து சைவத்துக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுவோரும் அவர்களுக்குப் பந்தம் பிடிப்போரும் கலந்து கொள்கின்ற கூட்டங்களில் தங்கள் பிரசன்னம் மக்களுக்குக் கவலை அளிக்கும் என்ற உண்மையை தாங்கள் தவறாகப் பார்க்க மாட்டீர்கள் என்பது உங்கள் மீது மிகுந்த மரியாதை கொண்ட எங்களின் நம்பிக்கை.