தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன் மற்றும் புலிகளின் குரல் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலை தொடர்பாக விசாரணை நடாத்துவதில் சிக்கல்நிலை தோன்றியுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பரணகம ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இருவரும் படுகொலை செய்தமையை விசாரணை செய்வதிலேயே சிக்கல்நிலை தோன்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இக்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை இரண்டுபேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது ஜனாதிபதி ஆணைக்குழுவைக் கலைப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதனால் விசாரணையைப் பூர்த்திசெய்யமுடியாத நிலை உருவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பில் நடைபெறவிருந்த விசாரணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1983ஆம் ஆண்டிலிருந்து மே மாதம் 2009ஆம் ஆண்டுவரை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷவினால் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
இதன்செயற்பாடு தற்போதைய அரசாங்கத்திலும் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில் தற்போது அதனைக் கலைக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.