முதலமைச்சருக்கு எதிராக மீண்டும் சதித்திட்டம்! யாழ். நகர அபிவிருத்திக் கூட்டத்தை ஆளுநர் அலுவலகத்தில் நடத்தியது ஏன்?

வடக்கு மாகாண சபையின் நிலைகண்டு தமிழ் மக்கள் தாங்கொணாத் துயரம் கொண்டுள்ளனர். ஏன் தான் இப்படி இவர்கள் நாசகாரம் செய்கின்றனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு உதவுவதை விடுத்து வடக்கு மாகாண சபையை தங்களின் சுய பதவிக்காக பயன்படுத்துகின்றனரே! என்ற வேதனை மக்களிடம் இருக்கவே செய்கிறது.

இது ஒருபுறம் இருக்க, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைக் கொண்டுள்ள வடக்கு மாகாண சபை முதல்வர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை தொடர்ந்தும் சதித்திட்டம் தீட்டி வருகின்றது.

முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் உபத்திரவம் தாங்கமுடியாமல் பதவியைத் தூக்கி எறிந்து விட்டுப்போக வேண்டும். இதற்காக வடக்கு மாகாண சபையில் இருக்கக் கூடிய சில உறுப்பினர்களை கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை பயன்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக வடக்கு மாகாண சபையால் செய்யக்கூடிய பணிகளைக் கூடச் செய்யமுடியாமல் உள்ளது.
வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்மக்களின் உண்மை நிலையைத் தெட்டத் தெளிவாக எடுத்துக்கூறி வருகிறார்.

இதுதான் நிலைமை; வடக்கு மாகாண சபைக்கு உரிய அதிகாரங்களைத் தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம்.தமிழர் தாயகப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுங்கள். இவ்வாறு வடக்கின் முதலமைச்சர் வெளிநாட்டுத் தூதுவர்களிடமெல்லாம் எடுத்துக் கூறுவது கூட்டமைப்பின் தலைமைக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது.
அட! முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுவது சரிதானே! இது எந்த வகையில் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமைக்கு ஆத்திரத்தைக் கொடுக்க முடியும் என்று நீங்கள் கேட்டால் அதில் நியாயம் இருக்கவே செய்யும்.

இங்குதான் ஒரு உண்மையை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது வடக்கின் முதலமைச்சர் மீது தமிழ்மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இது தங்களை ஓரங்கட்டி முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அரசியல் செல்வாக்கை ஏற்படுத்தி விடுமோ என்ற பயமே அவரை வெளியேற்ற வேண்டும் என்ற சதித்திட்டத்திற்குக் காரணமாகிறது.

அதிலும் குறிப்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின் அடுத்த தலைவர் நானே! என்று நினைத்து அதற்கான திட்டங்களை வகுத்து வருபவர் முதல்வர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் இருந்தால், தனக்குத் தலைமைப் பதவி கிடைக்காமல் போகும் என்று நினைத்துக்கொள்கிறார்.
இதன் காரணமாகவே முதலமைச்சரை வெளியேற்ற வேண்டும். இதனை வடக்கு மாகாண சபையின் சில உறுப்பினர்களைக் கொண்டு செய்ய சதித்திட்டம் நடந்து வருகிறது.

முன்பு மேற்குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் ஹோட்டல்களில்கூடி முதல்வருக்கு எதிராகக் கடிதம் எழுதுவது; உறுப்பினர்களிடம் கையெழுத்துப்பெறுவது என்றவாறு ஹோட்டல்களில் கூடிக்கூடிச் சதித்திட்டம் தீட்டினார்கள். எனினும் அத்திட்டம் முறியடிக்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் ஒரு சதித்திட்ட அரங்கேற்றம் நடந்துள்ளது. அதுதான் யாழ்ப்பாண நகர அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடந்த கூட்டமாகும்.

எட்டு மாகாண சபை உறுப்பினர்கள், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து கூடிய இந்தக் கூட்டம் தமிழ்மக்களின் அபிலாசைகளைச் சிதறடித்து வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தை நிர்மூலமாக்கி, ஆளுநரிடம் வடக்கு மாகாண சபையின் முழு அதிகாரத்தையும் தாரைவார்த்துக் கொடுத்து முதலமைச்சர் என்ற பதவியை வலுவிழக்கச் செய்கின்ற மிகப்பெரும் சதித்திட்டமாகும்.

இச்சதித்திட்டம் ஒரு ஊடகத்தின் செய்தியால் முறியடிக்கப்பட்டது. இந்த முறியடிப்பு கூட்டமைப்பின் கொழும்புத் தலைமைக்கு மிகப்பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்த, அந்த ஆத்திரம் கொழும்புத் தலைமையின் சதித்திட்டங்களை அரங்கேற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை கோபாவேசப்படுத்தியது.
இந்நிலையில்தான் வலம்புரி ஒரு மஞ்சள் பத்திரிகை என்ற குற்றச்சாட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டது.

உண்மையில் வலம்புரியை ஒரு மஞ்சள் பத்தரிகை என்று கூறிய சபை உறுப்பினர் சரியாகச் சிந் தித்திருந்தால் தனது கூற்று தனக்கான மக்கள் செல்வாக்கை சிதறடிக்கும் என்பதை விளங்கிக் கொண்டிருப்பார்.

என்ன செய்வது தங்களுக்கான மக்கள் செல்வாக்கு விழுந்து போகிறது என்பதைக் கூட உணராமல் இருக்கக்கூடிய கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை;
அந்தத் தலைமையின் சதித்திட்டங்களை நிறைவேற்றப் பாடுபடும் வடக்கு மாகாணத்தின் சில உறுப் பினர்கள் பாவங்கள் என்று சொல்வதைத்தவிர வேறு எதுவுமில்லை.

எதுவாயினும் யாழ்ப் பாண நகர அபிவிருத்தியில் வடக்கின் முதல்வரை ஓரங்கட்டி ஆளுநர் மட்டத்தில் நடத்தி முடிக்க நினைத்தது மிகப்பெரும் தவறு. இது எங்களுக்கான அதிகாரங்களை நாங்கள் இழப்பதற்குச் சமமானது. ஆக, முதலமைச்சரோடு இணைந்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனை வரும் செயலாற்ற வேண்டும். இது தமிழ்மக்களுக்கு நன்மையைத் தரும்.

-விதுரன்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila