தீவகத்தின் அபிவிருத்தியில் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும்


இராணுவ நடவடிக்கை காரணமாக 1991 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தீவகத்திலிருந்து மக்கள் வெளியேறியிருந்தனர்.

கடல் கடந்த தீவுகளான நெடுந்தீவு, நயினா தீவு, எழுவைதீவு, அனலைதீவு தவிர்ந்த தீவகத்தின் ஏனைய இடங்களில் இருந்து ஒட்டு மொத்தமாக மக்கள் வெளியேறியதன் பின்னர், 

1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிற்பாடு தீவகத்துக்குச் சென்று மக்கள் தங்கள் இடங்களைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தீவகத்தில் மக்கள் மீளக் குடியிருப்பதற்கு தடை  இருக்கவில்லையாயினும் ஏற்கெனவே அங்கிருந்த மக்கள் மீளவும் தீவக மண்ணில் குடியிருப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

இதற்குக் காரணம் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் தீவகம் இயல்பாகவே ஒரு பயங்கரமான சூழல் கொண்ட பிரதேசமாக மாறியிருந்தது.

இடம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினரே மீளக்குடியமர்ந்தனர். அவ்வாறு குடியமர்ந்தவர்களின் வாழ்வும் முன்னேற்றகரமாக அமையவில்லை.

இந்நிலையில், மாணவி வித்தியாவின் படுகொலை தீவகத்தின் பாதுகாப்பின்மையை முழு உலகத்துக்கும் எடுத்துக் காட்டியது.

மீள் குடியமர்வு தொடர்பில் அடிக்கடி குரல் கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் தீவகத்தின் மீள் குடியமர்வு பற்றியோ தீவக மக்களின் அடிப்படைத் தேவைகள், பாதுகாப்பு  என்பன குறித்தோ கவனம் கொள்வதாகத் தெரியவில்லை.

இதன்காரணமாக தீவக மக்கள் இன்று வரை பல்வேறு கஷ்டங்கள் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

தீவகத்தில் மீள்குடியமர்ந்த மக்கள் அங்கு தொடர்ந்து இருக்க வேண்டுமாயின், தீவகத்தின் அபிவிருத்தி பற்றி அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால் தீவகத்தின் அபிவிருத்திக்கு தமிழ் அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் தாராளமாகவே இருக்கின்றனர்.

கல்வியியல் கல்லூரியை தீவகத்தில் அமையுங்கள். ஆசிரியர் பயிற்சி கலாசாலையை தீவகத்தில் நிறுவுங்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஒரு பீடத்தையாவது தீவக மண்ணுக்குக் கொண்டு வாருங்கள் என்றால் எதுவும் இல்லை.

சரி, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்குட்பட்டதாக அமைக்கப்படவுள்ள சிறுவர் வைத்தியசாலையையாவது மண்டை தீவில் நிர்மாணியுங்கள் என்றால் அதற்கும் மனம் இல்லை.

இதுவே நிலைமை என்றால் தீவகத்தை அபிவிருத்தி செய்வது எப்படி? தீவகத்தின் நிலச் சொந்தக்காரர்கள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் வெளிநாடுகளிலுமாக இருக்க,

வெற்றுக் காணிகள் எருக்கலைக்கும் விடத்தல் மரத்துக்கும் இடம்கொடுத்து தீவக மண்ணைப் பயங்கரமாக்கியுள்ளன.

பற்றைகளை வெட்டுங்கள் என்று சொல்லவும் அதைச் செய்விக்கவும் ஆளில்லை எனும் போது எவரும் கவனிப்பாரற்ற இடமாகவே தீவகம் இன்று வரை உள்ளது.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila