தமிழ் மக்கள் இரத்தமும் சதையுமாக இலங்கை மண்ணில் நடத்திய விடுதலைப் போராட்டம் சிங்கள ஆட்சியாளர்களினால் தோற்கடிக்கப்பட்ட நாளான மே மாதத்தின் 19ஆம் திகதியை சிங்கள அரசுகள் போர் வெற்றி நாளாக கொண்டாடுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது எண்ணிலடங்கா மோசடிகளையும், அதிகாரத் துஸ்பிரயோகங்களையும், நல்லாட்சி அரசாங்கம் சுமத்தினாலும், அவரைக் கைது செய்யத் துணியாமல் இன்னும் நடுங்கிக் கொண்டிருப்பதற்கு பிரதான காரணமே, யுத்தத்தை வெற்றிகொண்ட சிங்கள தேசத்தின் தந்தையாக இன்னும் மதிக்கப்படுவதுதான்.
மஹிந்தவின் தம்பிகளை, மகன்மாரை, உறவினர்களை கைது செய்யவும், சிறையில் அடைக்கவும் முடிந்த அரசுக்கும், காவல்துறைக்கும் மஹிந்தவை விசாரணைக்கு அழைக்க மட்டுமே முடியுமாக இருக்கின்றது. அவரை கைது செய்தால், சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து அரசுக்கு எதிராக போராடுவார்கள் என்ற அச்சம் நல்லாட்சிக்கு இருக்கின்றது.
ஆனால் மறுபுறத்திலே, தமிழ் மக்களைப் பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ச ஒரு போர்க்குற்றவாளி, அவரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி விசாரணை செய்து, உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இதுதான் இலங்கை நாட்டில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே இருக்கும் இன்றைய நிலையாகும்.
விடுதலைப் புலிகள் பலமாக இருந்தவரையில், கார்த்திகை மாதத்தின் 19ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதிவரை மாவீரர் வாரமாக தமிழ் மக்கள் அனுஷ்டிப்பார்கள். 26ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் ஈகைச் சுடரேற்றி மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி, தமிழ் மக்களுக்கு உரையாற்றுவார். இந்த நிலைமையானது, 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது.
இலங்கைப் படைகளின் விமானத்தாக்குதல்களும், பல்குழல் எறிகனைகளும், இரசாயணக் குண்டுகளும், துருப்புக்களின் தாக்குதல்களும் விடுதலைப்புலிகளையும், வன்னி பெருநிலப்பரப்புக்குள் அகப்பட்டுக்கிடந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்களையும் பெரும் அழிவுக்குள் தள்ளிவிட்டிருந்தது. அங்கங்கள் சிதைந்து மாமிசத் துண்டங்களாக மனிதர்கள் மருத்துவ உதவிகளும் இல்லாமல் கிடத்தி வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை மீதும், மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலினால் பெரும் மனித அவலம் அரங்கேறியது.
முள்ளிவாய்க்காலில் மக்கள் யுத்தத்தின் நடுவே அகப்பட்டு கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்டார்கள் – கொல்லப்பட்டார்கள். கண்முன்னே உறவினரும், அயலவனும் அங்கம் சிதறி அவலக்குரல் எழுப்பி, மாண்டு போவது கண்டும், உயிரோடு எஞ்சியிருந்த ஒவ்வொரு தமிழனும், தன் இயலாமை கண்டு, உயிர் சுமந்த பிணமாகிப் போன மாபெரும் உலகத் துயரம் அவை. எதிரிக்குக்கூட அப்படி ஒரு அவலமும், அழிவும் நேர்ந்துவிடக் கூடாது என்று, தமிழினம் நினைத்த விவரிக்க முடியாத விபரீதம் அது. அதை இனப்படுகொலை என்றாலும், மனித கூட்டுக்கொலை என்றாலும், எல்லாமும் பொருந்தும்.
யுத்தம் முள்ளிவாய்க்காலோடு முடிவுக்கு வந்துவிடவில்லை. நந்திக்கடலில் தமிழன் இரத்தம் கலந்து போகும்வரை தொடர்ந்தது. படையினரால் கைது செய்யப்பட்டவர்;களை ஆண்கள் என்றும் பார்க்கவில்லை, பெண்கள் என்றும் பார்க்கவில்லை. எல்லோரையும் நிர்வாணப்படுத்தி, ஒருவர் கண்முன்னால் மற்றவரை சித்திரவதை செய்தும், வெட்டியும், கொத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்து அடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடலங்களை பார்த்த மக்கள் இன்றுவரையிலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போலவே பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்கள் உரிமைக்காவும், விடுதலைக்காகவும் ஈழ மண்ணில் நடத்திய போராட்டத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும், பலர் உயிர் இழந்திருந்தாலும், இறுதி யுத்தத்தில் வன்னி மண்ணில் தமிழன் உயிர்கள் பிரிந்ததும், தமிழன் இரத்தம் சிந்தியதும் அதிகம், அதிகம். ஆகையால்தான் மே 18ஐ ஒவ்வொரு தமிழனும் துக்க நாளாக அணுஸ்டிக்க வேண்டும். உலகத்தின் உந்த மூலையிலேனும் ஈழத் தமிழன் வாழ்ந்தாலும், தன் இனத்தின் துயரத்தையும், அவலத்தையும், ஈழ மண்ணில் தமிழன் நடத்திய மாபெரும் போராட்டத்தையும் மறந்து வாழ முடியாது என்கின்றனர் உணர்வாளர்கள்.
யுத்தம் முடிந்தது – மக்கள் காப்பாற்றப்பட்டார்கள் – விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டார்கள் என்று இலங்கை அரசுகள் கூறினாலும், தமிழ் மக்களின் உரிமைக்கானதும், விடுதலைக்கானதுமான வேட்கை அழிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் ஈழத்தமிழர்கள், அரசியல் உரிமைகள் பெற்று, பாதுகாப்பு அச்சம் அகன்று தன்னைத் தானே ஆழ்கின்றவரை, விடுதலைக்கானதும், உரிமைகளுக்கானதுமான உந்துதலும், உணர்வுகளும் ஒவ்வொரு ஈழத்தமிழனின் உள்ளத்திலும் இருந்து கொண்டே இருக்கும்.
மே மாதம் 12ஆம் திகதி தொடக்கம், 18ஆம் திகதிவரை துக்கதினமாக தமிழர்கள் அணுஸ்டிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுப்பப்படுகின்றது. சில அரசியல் பிரமுகர்கள், ஆங்காங்கே கற்பூரங்களை எரித்தும், மெழுகுவர்த்திகளை ஏற்றியும் அஞ்சலி செலுத்துகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள், தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டிவிடுவதாகவும், அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவுமே தெரிகின்றது.
மாறாக உண்மையாக விடுதலைப் போராட்டத்தில் பலியான போராளிகள், பொது மக்கள் என எல்லோரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதை ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக முன்னெடுக்க வேண்டும். அதை மக்கள் தனித்தனியாக செய்யமுடியாது. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று தலைமைகளாக இன்று உலா வருகின்றவர்கள். திட்டமிட்டு அஞ்சலி நிகழ்வையும், பொதுவான இடத்தையும் தீர்மானித்து இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
ஆளுக்கொரு திசையாக – மறைமுகமாக அஞ்சலி செலுத்துவதும், சமயக் கடமைகளைச் செய்வதும், ஒரு இனம் தனது துயரத்தை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இருக்கமுடியாது. இறந்துபோன ஒவ்வொருவருக்காவும், அழுத கண்ணீர் எண்ணையாகவும், ஆத்ம உணர்ச்சி தீபமாகவும், உயிர் வாழ்கின்ற ஒவ்வொரு தாயகத் தமிழனின் உள்ளத்திலும் சுடர் விட்டு ஒளிர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.
அப்போதுதான் எந்த விடுதலைக்காக, எந்த உரிமைகளுக்காக தமிழினம் தன்னுயிரைத் தியாகம் செய்ததோ, அந்த உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்ற உணர்வு நிலைத்து நிற்கும். அதுதான் பலியாகிப் போன ஒவ்வொரு தமிழனுக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.