வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து மாகாண சபையுடன் கலந்தாலோசிக்காமல் தான் தோன்றிதனமாக செயற்பட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சாடியுள்ளார்.
சர்வதேச கெயர் நிறுவனத்தின் அனுசரணையுடனான மக்களை ஈடுபடுத்தலினூடாக கொள்கை மற்றும் நடைமுறை செயற்பாடுகளை உறுதிமிக்கதாக்குதல் எனும் நிகழ்வு மன்னார் மாந்தை கிழக்கு பிரதேச செய லகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியன புதிய பல திட்டங்க ளுடன் இங்கே வருகை தந்து மத்திய அரசின் வழிகாட்டலின் கீழ் அல்லது மத்திய அரசின் அனுமதியுடன் தாம் தாம் நினைத்தவாறு பல திட்டங்களை மாகாண நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட்ட இடங்களில் மாகாண அரசுடன் எந்தவித கலந்துரையாடல்களோ அல்லது அனுமதிகளோ இன்றி செயற்படுத்த விழைகின்றார்கள்.
இத் தன்மையானது மாகாண அரசின் அதிகாரங்களை புறந்தள்ளுவதாக அல்லது உதாசீனம் செய்வதாக அல்லது கவனத்திற்கொள்ளாததான ஒரு தன்மையை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. அவர்கள் நடைமுறைப்படுத்த இருக்கின்ற திட்டங்கள் எமக்கு நன்மை பயப்பனவாக இருக்கக் கூடும். ஆனால் அவை பற்றி எம்முடன் கலந்தாலோசியாது நினைத்தபாட்டில் நினைத்த நினைத்த திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் ஒரு சீரற்ற வளர்ச்சித் தன்மையை ஏற்படுத்துவதோடு மக்களைக்குழப்பக் கூடிய அல்லது தவறாக வழிநடத்தக் கூடிய நிகழ்வுகளாகவும் அவை அமைந்துவிடுகின்றன.
இதனால்;தான் நான் பல இடங்களிலும் எனது உரையில் என்ன திட்டங்களாக இருந்தாலும் அவை எங்களுக்கு நன்மை பயப்பனவாக அல்லது எம் மக்களுக்குக்கூடுதலான பயன்பாடுகளை பெற்றுக் கொடுக்கக் கூடியனவாக இருப்பினும் உங்கள் திட்டங்கள் தொடர்பான முன்னறிவித்தல்களையும் எதிர்பார்ப்புக்களையும், அடைவு மட்டங்களையும் பற்றி எம்முடன் கலந்து ஆலோசித்து முடிவுக்கு வாருங்கள் என்று கூறிவருகின்றேன். உங்கள் திட்டங்கள் பயனுறுதி மிக்கவையாக காணப்படின் நாங்கள் முழு மையான ஆதரவை நல்குவோம். அத்திட்ட ங்கள் எமக்கு உதவாதவையாகக் காணப்படின் அது பற்றியும் உங்களுடன் பேசுவோம் என்ற கருத்தையே தெரிவித்து வருகின்றேன்.
இன்று (நேற்று) கூட இப்பொழுது கூட இந்த நேரத்தில் ஆளுநர் எம்முடன் கலந்தாலோசிக்காது யாழ்.நகர அபிவிருத்தித் திட்டம் பற்றிக் கூட்டம் நடத்துகின்றார். அத்திட்டம் பற்றி எமது வட மாகாண சபையானது அதனோடு சம்பந்தப்பட்ட அனைவருடனும் சென்ற வருடத்தில் இருந்தே பேசிவருகின்றோம். அவற்றின் பெறுபேறுகளை எங்களிடம் கேட்டு அறியாது ஆளுநர் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார். அவ்வாறான கூட்டத்தை நடத்தாது எம்முடன் முதலில் பேசுவதே சிறந்தது என்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். அது பற்றி நேற்றைய தினம் அவர் என்னுடன் பேசினார்.
சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன் என்போர் இதற்காக கொழும்பில் இருந்து வந்துள்ளதாகத் தெரிவித்தார். அப்படியானால் அவர்களுடன் கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துக்களை எமக்குத் தெரி வியுங்கள் என்று கூறிவிட்டு வந்துள்ளேன் என்றாலும் அக்கூட்டம் கூட்டமுன்னர் அவர் எங்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். அதற்கு அவர் எமக்கு அனுசரணை நல்கவே தாம் அவ்வாறு செய்ததாகக் கூறுகின் றார். அனுசரணை செய்வதாகக் கூறி எமக்கு உபத்திரவம் தராமல் இருந்தால்; போதும்! அதேநேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் நேரடியாகப் பேச முன்வர வேண்டும். ஆளுநர் ஊடாக எம்முடன் பேச வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அவர்களை நாங்கள் எம்மவர்களாகவே இப் பொழுதும் கருதுகின்றோம்.
சர்வதேச கெயர் நிறுவன அதிகாரிகள் எம்மைக்கடந்த 5ஆம் திகதி சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்திய போதும் அவர்களுக்கு எம்முடன் கலந்தாலோசித்து காரியங்கள் ஆற்றுவது பற்றித் தெரிவித்திருந்தேன். அவர்களும் முறையாக எமது பிரதம செயலாளருடன் சேர்ந்து எம்முடன் தொடர்பு கொண்டு தமது திட்டம் பற்றிக் கூறினார்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் பல தேவைகளைக் கொண்டவர்களாக, உடல் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றனர். அவர்களுக்கு அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் அவர்களை உடல் உள ரீதியாக ஸ்திரத்தன்மை அடையக்கூடிய வகையில் அவர்களுக்கான உள வளப்படுத்தல் நிகழ்வுகள் அல்லது பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.