தமிழ் மக்களின் அரசியல் தேவைகளைப் பொருட்படுத்தாது பெரும்பான்மை அரசாங்கங்கள் முன்வைக்கும் கருத்துக்களே பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் என மத்திய அரசாங்கம் தெரிவிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்தில் பொருளாதார விருத்தி ஏற்படும் பட்சத்தில், அது நல்லிணக்கத்திற்கு வித்திடும் என்ற சிலரின் கூற்றுக்கு பதில் வழங்கும் வகையில், வட மாகாண முதல்வரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்திற்கு தேவையான பணத்தை வழங்குகின்றோம், பொருளாதார விருத்தியை ஏற்படுத்துவோம், அதனூடாக நல்லிணக்கம் பிறக்கும் என சிலர் கூறுவதாகவும் வடக்கு முதல்வர் கூறியுள்ளார்.
இவற்றை வழங்கும் போது, தனியுருத்துக்களைக் கேட்க வேண்டாம் என கூறவது தான் மத்திய அரசாங்கத்தின் கருத்து எனவும் முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
பணம் கொடுத்து வாங்கிவிட்ட பின்னர் அவர்களின் விரும்பம் போல நடப்பதே நல்லிணக்கம் என அவர்கள் நினைப்பதாகவும் முதலமைச்சரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வறுமையில் வாடும் தமிழ் மக்களுக்கு பொருளாதார ஏற்றம் முக்கியமானது என கூறியுள்ள வடக்கு முதல்வர் , தமது தேவையின் நிமித்தம் இவ்வாறான பசப்பு வார்த்தைகளுக்குள் மக்கள் வீழ்வதாகவும் கூறியுள்ளார்.
எனினும், முன்னோக்கிய சிந்தனை அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார விருத்தியைப் கண்டு ஏமாறும் பட்சத்தில் ,வடக்கை அடிபணியச் செய்து எமது வளங்களை சூறையாடி, சிங்கள குடியேற்றங்களை நடைமுறைப்படுத்தி, இறுதியில் அரசியல் உரிமைகளைத் தராது விடுவார்கள் எனவும் வட மாகாண முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
<p>இதற்கான அழைப்பை அரசாங்கம் விடுத்துள்ள நிலையில், ஏன் அதனை ஏற்க மறுக்கின்றீர்கள் என எம்மவர்களே கேள்வி எழுப்புவாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
<p>எம்மை கண்ணைக்கட்டி காட்டுக்குள் கொண்டு போக இடம் வழங்க முடியாது எனவும், மத்தியின் செயற்பாடுகளில் மாகாணத்தின் பங்கும் காணப்பட வேண்டும் என்பதை தொடர்ந்தும் தாம் வலியுறுத்தி வருவதாகவும் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார விருத்தியைத் தந்து எமது உரிமைகளையும் உரித்துக்களையும் தராது விடுவது, எம்மை பணத்திற்கு வாங்கும் செயற்பாடு என கூறியுள்ள அவர், பணம் வாங்கிய பின்னர் வாய் திறக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவத்தினரை வடக்கில் நிலைபெறச்செய்து, அனைத்து நிர்வாக, பொருளாதார, அரசியல் உரித்துக்களையும் மத்திய அரசாங்கம் தம் கையில் வைத்துக்கொண்டு பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் பற்றிப் பேசுவது தொடர்ந்தும் எம்மை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் செயற்பாடு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நல்லிணக்கத்தை விரும்பும் எமது அரசியல்வாதிகள் பலர் அவர்களுடைய சுயநலனுக்காகவே அதனை விரும்புவதாகவும் சி.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
தமிழர்களுக்கான உரிமைகள் கிடைக்காவிடினும், அவர்களின் பை நிறைய பணம் கிடைக்கும் எனவும், கை நிறைய கொடுப்பதற்கு அரசாங்கம் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பைகளை நிரப்பிக்கொண்டு எம்மவர்கள் போய்விடுவார்கள் என்பதற்காகவே, அரசியல் தீர்வு முதலில் வரவேண்டும் என தாம் ஆசைப்படுவதாகவும் வட மாகாண முதலமைச்சர்.சி.வி.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.