ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
தமிழ் அரசியல் தலைவர்களையும் வடக்கு மாகாண ஆளுநரையும் பான் கீ மூன் சந்தித்தார்.
ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் வருவதையொட்டி அவரைச் சந்தித்து தங்களின் ஆற்றாமையை எடுத்துக் கூறுவதற்காக காணாமல்போனவர்களின் உறவுகளும் இராணுவத்தின் பிடிக்குள் உள்ள இடங்களைச் சேர்ந்த மக்களும் காத்திருந்தனர்.
எனினும் அவர்களைச் சந்திக்காமல் அல்லது அவர்களைச் சந்திக்கவிடாமல் பான் கீ மூன் பின் வழியால் சென்றார்.
இதேபோன்றுதான் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோதும் மக்கள் அவரை சந்திக்க முடியாமல் போயிற்று.
பொதுவில் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பிரதிநிதிகள் தமிழ் மக்களின் நிலைமைகளை அறிவதற்காக வருவதாகக் கூறிக்கொண்டாலும் அவர்கள் ஒருபோதும் பாதிப்புக்குள்ளான மக்களை சந்திக்கவில்லை என்பதே உண்மை.
தமிழ் அரசில் தலைவர்களைச் சந்திப்பது என்பது சரியானதாயினும் பாதிக்கப்பட்ட மக்களை - அவர்களின் மனநிலையை அறிந்து கொண்டு அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வது வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் தலையாய கடமை.
பெற்ற பிள்ளைகள் காணாமல் போய்விட்டனர். வருடக்கணக்கில் என் பிள்ளை சிறையில் வாடுகின்றான். யுத்தம் முடிந்தும் எங்கள் மண்ணுக்கு நாங்கள் போக முடியவில்லை என்ற வலியை - வேதனையை சதா அனுபவிக்கின்ற மக்கள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறும்போது அதன் தாக்கம் வித்தியாசமானதாக இருக்கும்.
உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் - அனுபவித்தவர்கள் தங்களின் வேதனையை எடுத்துக் கூறும் போது அதன் வலிமை காத்திரத்தன்மை கொண்டதாக இருக்கும்.
எனினும் இந்த உண்மையை வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் உணரவில்லை. தமிழ் அரசியல் தலைமைகளும் உணரவில்லை என்பதுதான் மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் வேதனைகளை சொல்வதற்கு சந்தர்ப்பம் கொடுக்காதவரை - அவர்களை ஆற்றுப்படுத்துவதில் வெளிநாட்டுப் பிரதி நிதிகள் தலையிடாதவரை தமிழ் மக்களின் மனக்குமுறல் அடங்கப்போவதில்லை என்பதே உண்மை.
அந்த வகையில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கட்டாயமாக போரில் பாதிக்கப்பட்டு இன்றுவரை கண்ணீ ரும் கம்பலையுமாக அலைகின்ற தமிழ் மக்களைச் சந்தித்திருக்க வேண்டும்.
அந்தச் சந்திப்பு ஐ.நா செயலாளரின் தீர்மானங்களில் முக்கியமான மாற்றங்களைத் தந்திருக்கும். இருந்தும் அந்தச் சந்திப்புக்கான சந்தர்ப்பங் கள் வழங்கப்படாமை ஐ.நா செயலாளரின் யாழ்ப்பாண விஜயத்தை வெற்றிகரமானதாக ஆக்காதென்றே சொல்லவேண்டும்.
ஐ.நா செயலாளர் பான் கீ மூனை தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்தனர். எனவே அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறியிருப்பர் என்று கூறலாம்.
இங்குதான் தமிழ் அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கையீனங்கள் மேலெழுகின்றன. அதாவது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்கள் அரசியல் தலைவர்களையும் நம்பத் தயாரில்லை என்பதுதான் உண்மை.