மீண்டும் பாலியல் புகார்?

எமது மாணவர்களாலும், ஒட்டுமொத்த சமூகத்தாலும் வெறுக்கப்படும் வகையில் பெண் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொண்ட பேராசிரியர் இளங்குமரன் மீதான விசாரணை கடந்த பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இதனால், அவர் தண்டனைகளுக்குள்ளாகாமல் தப்பித்து வருகிறார் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் கந்தசாமி ஜக்சன் கடுமையாகச் சாடியுள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகம் குறித்த விரிவுரையாளர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால் இனிவரும் விரிவுரையாளர்களும் தப்புக்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை(01) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு சாடியுள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வ. அனுராஜ் விரிவாகக் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த-1994 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மாணவிகளைத் துன்புறுத்தியமைக்காக அக்காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுப் பேராசிரியர் இளங்குமரன் தண்டனை பெற்றிருந்தார். பின்னர் மன்னிப்பின் அடிப்படையில் உள்வாங்கப்பட்ட அவர் கடந்த-2013 ஆம் ஆண்டில் பெண் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டமை, வேண்டுமென்றே மாணவர்களின் புள்ளிகளைக் குறைத்தமை, பெண் மாணவிகளை மாலை நேரம் தனது அறைக்குள் அழைத்து அவர்களுடன் கல்வி சம்பந்தமாக கலந்துரையாடுவதாகத் தெரிவித்து அவர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
இதன் காரணமாக அவரைத் தற்காலிகமாகப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒதுக்கி வைத்து ஒரு வருட விசாரணையும் நடைபெற்றது.
ஒரு வருட காலத்திற்குள் அவர் மீதான விசாரணைகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மேற்குறித்த விரிவுரையாளர் அந்த விசாரணைகளுக்குச் சமூகமளிக்காத நிலையில் கடந்த நான்கு, ஐந்து வருட காலமாக தண்டனை எதுவும் பெறாத நிலையில் இரண்டு இலட்சம் ரூபா சம்பளத்துடன் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ளார்.
கடந்த ஒரு வருட காலமாக எந்தவித வேலைகளுமின்றிச் சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
எமது தேவைகளை நிறைவேற்றக் கோரும் போது நிதி இல்லை என்கிறார்கள். அவருக்கு கடந்த ஒரு வருட காலமாக வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபா நிதியிருந்தாலே பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்திருக்க முடியும். கடந்த டிசம்பர் மாதம் பேராசிரியர் இளங்குமரன் மீதான விசாரணை அறிக்கை வந்த போதும் அவருக்கான சம்பளம் நிறுத்தப்படவில்லை.
கடந்த மார்ச் மாதம் அவருக்கான தண்டனை வழங்கப்படவிருந்த நிலையில் அவரும், பல்கலைக்கழகத்திலுள்ள ஒரு சிலரும் நீதிமன்றத் தீர்ப்பு வழங்காது தடுத்திருந்தனர். இருப்பினும், மார்ச் மாதம்-26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும் பல்கலைக்கழகம் நிர்வாகம் சார்பில் யாருமே அங்கு ஆஜராகவில்லை.
இவ்வாறான செயற்பாடானது அவரை மீண்டும் பல்கலைக்கழகத்திற்குள் உள்வாங்குவதற்குப் பல்கலைக் கழக நிர்வாகம் முன்னெடுப்புக்களைச் செய்கின்றதா? என்ற மிகுந்த சந்தேகத்தை எமக்குத் தோற்றுவித்துள்ளது.
மேற்குறித்த பேராசிரியர் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு அவரைப் பணியிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எமது எதிர்ப்பையும் மீறி அவரை மீண்டும் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதித்தால் மாணவர்களாகிய எம்மால் பல்வேறு போராட்டங்கள் நடாத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila