மத்திக்கும் - வடக்குக்கும் தொடர்கிறது முரண்பாடு.

மத்திக்கும் - வடக்கு மாகாணத்துக்கும் இடையிலான பிரச்சினை, யாழ்ப்பாணப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் எதிரொலித்தது.
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முடிவடைந்துவிட்டது என்று தெரிவித்து வெளியேறிய பின்னரும், மத்திய அரசின் பிரதிநிதியான இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தொடர்ந்தும் நடத்தியுள்ளார்.
யாழ்ப்பாணப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கேற்காத இணைத் தலைவர்களான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் பங்குபற்றியிருந்தார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் இணைத் தலைவர்கள் உரையாற்றினர். இதில் இறுதியாக திருமதி விஜயகலா மகேஸ்வரன் கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது, யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் முன்னைய பிரதேச செயலாளரின் நடவடிக்கை தொடர்பில் விமர்சித்தார். மக்களுக்கான சமுர்த்தி திட்டம், வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அவர் மீது மக்கள் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். தற்போது புதிய பிரதேச செயலர் கிடைத்திருக்கின்றார் என்று தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன், உடனடியாக பதிலளித்தார். நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இன்னொரு பெண்ணைக் குற்றம் சுமத்துகின்றீர்கள்.அவர் தற்போதும் பிரதேசசெயலராக இருக்கின்றார். அவர் மீது தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம். இப்போதுள்ள பிரதேச செயலாளருக்கு எதிராகவும் இவ்வாறு முறைப்பாடுகள் கிடைத்தால் இடமாற்றம் செய்வீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த விடயத்தை இத்தோடு நிறுத்துங்கள் என்று தெரிவித்தார்.
அதற்கு திருமதி விஜயகலா மகேஸ்வரன், நான் சிறிய பதில் வழங்க வேண்டியிருக்கின்றது. நானும் பாதிக்கப்பட்ட பெண். நீங்களும் (அனந்தி) பாதிக்கப்பட்ட பெண். பாதிக்கப்பட்ட பல பெண்களின் முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே, முன்னாள் பிரதேச செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்று குறிப்பிட்டார்.
வடக்கு முதலமைச்சர், மீளவும் இந்த விடயத்தை நிறுத்துமாறு தெரிவித்தார்.
இதன் பின்னர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிகழ்ச்சி நிரலில் குறிக்கப்பட்டிருந்த விடயங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. நிகழ்ச்சி நிரலில் உள்ள 4 விடயங்கள் ஆராயப்பட வேண்டியிருந்த நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முற்பட்டார். கூட்டத்தை முடிப்பதற்கான அறிவிப்பை விடுத்து நன்றியுரை சொல்லுதற்குத் தயாரானார்.
இதன்போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஆனோல்ட், இங்கு வந்த மக்கள் தவறான கருத்துடன் வெளியில் செல்லக் கூடாது. முன்னைய பிரதேச செயலாளர் என்று கருத்துத் தெரிவிக்க ஆரம்பிக்க, முதலமைச்சர் இத்தோடு கூட்டம் முடிந்தது. இந்த விடயம் பற்றி கதைப்பதற்கு இது பொருத்தமான இடமில்லை என்று கூறிக் கொண்டே தனது கதிரையை விட்டு எழுந்தார்.
மாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் மீண்டும் இந்த விடயத்தைப் பேச முற்பட, முதலமைச்சர் கூட்டம் முடிந்தது நன்றி என்று தெரிவித்து விட்டு மண்டபத்திலிருந்து வெளியேறினார். இதன்போது பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் வெளியேறினர். அரச அதிகாரிகளும் வெளியேற முற்பட்டனர்.
ஆனால், மற்றொரு இணைத் தலைவரான திருமதி விஜயகலா மகேஸ்வரன், கூட்டம் முடியவில்லை. கூட்டத்தை முறைப்படி முடிக்க வேண்டும். மக்கள் வேண்டுமானால் வெளியேறிச் செல்லலாம். அரச அதிகாரிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதன் பின்னர் கூட்டத்தை தொடர்ந்து நடத்தினார்.
இதன்போது, மாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்டிடம், என்ன கூற வந்தது என்பதை தெரிவிக்குமாறு திருமதி விஜயகலா மகேஸ்வரன் கேட்டார். "முன்னைய பிரதேச செயலர் யாருடைய அரசியல் தயவில் இங்கே இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருக்கு வந்த இடமாற்றங்களை அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தடுத்துக் கொண்டிருந்தார். அரசியல் செல்வாக்கைப் பிரயோகித்தது, அந்தப் பிரதேச செயலரே தவிர மக்கள் பிரதிநிதிகள் இல்லை" - என்றார் ஆர்னோல்ட்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நிரலில் குறிக்கப்பட்டிருந்த, சிறுகைத்தொழில் தொடர்பான விடயம், மீள்குடியமர்வு ஆகிய ஆராயப்பட்டே கூட்டம் முடிவுக்கு வந்தது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila