உங்கள் நாடகத்தை சர்வதேசம் பார்க்கிறது


வடக்கு மாகாண சபையின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது தமிழர் அரசு மலர்ந்தது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.அவ்வாறு செய்தி வெளியிட்டதற்குள் வடக்கு மாகாண சபையினால் சிலவற்றை சாதிக்க முடியும் என்ற உட்கருத்தும் பொதிந்திருந்தது.

ஆனால் வடக்கு மாகாண சபையின் அமர்வுகள்; அதனைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களின் செயற் பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.

வடக்கு மாகாண சபைக்கான அதிகாரங்கள் போதாது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆயினும் வடக்கு மாகாண சபையால் இதைச் செய்ய முடியும் - இதைச் செய்கின்ற அதிகாரங்கள் மாகாண சபைக்கு உண்டு என்ற விடயங்களில் வடக்கு மாகாண சபை தனது உச்சமான செயற்பாட்டை நிறைவு படுத்தியிருக்க வேண்டும்.

இருந்தும் அது நடைபெறவில்லை. இதற்கு முக்கிய காரணம் இரண்டு உள்ளது. 
அதில் ஒன்று அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரால் கொண்டு வரப்பட்டவர்.

எனினும் இது சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தமக்கு ஏற்பட்ட ஆத்திரத்தை சம்பந்தர் மீது காட்டினால் அவர் சீட்டுக்கிழித்து விடுவார் என்பதால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது தமது காழ்ப்புணர்வைக் காட்டமுற்பட்டனர்.

இதற்காக முதலமைச்சருக்கு கடுமையான உபத்திரவம் கொடுத்து அவரை கபடமாக பதவியிலிருந்து வெளியேற்றச் செய்வது என திட்டம் தீட்டினர்.

இதற்காக சில உறுப்பினர்கள் தமிழ்; தாயகம்; போரினால் பாதிக்கப்பட்ட எங்கள் உறவுகள் என்பதையெ ல்லாம் மறந்து முதலமைச்சருக்கு எவ்வா றெல்லாம் தொந்தரவு கொடுக்கலாமோ அதைக் கொடுக்கத் தலைப்பட்டனர். இது முதன்மைக் காரணம்.

இரண்டாவது முக்கிய காரணம் மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் சிலர் அடுத்தது பாராளுமன்ற உறுப்பினர் பதவியென ஆசை கொண்டனர்.

இவ்வாறு ஆசை கொண்டவர்கள் யாரைப்பிடித்தால் அந்தப் பதவி தமக்குக் கிடைக்கும் என்று நினைத் தார்களோ அன்றே வடக்கு மாகாணசபை தன்னால் முடிந்ததையே செய்ய முடியாமல் போயிற்று.

தமிழ் மக்களுக்கு சேவை செய்யவென வந்தவர்கள் பேராசை கொண்டனர். இந்தப் பேராசையை வசமாக பயன்படுத்தத் தெரிந்த - முதலமைச்சரை வெளியேற்ற வேண்டும் என நினைத்தவர்கள் நிலைமையை தமக்கு மிகவும் சாதகமாக்கிக்கொள்ள,

வடக்கு மாகாண சபையின் ஒவ்வொரு கூட்டமும் எந்தப் பயனும் இன்றி கடந்து போகிறது.
ஐயா! நடந்ததெல்லாம் நடந்ததாக இருக்கட்டும்.  இனியாவது எங்கள் மக்களுக்காக ஏதாவது செய்வோம் என்று நினைக்க யாரும் இல்லை. இத்தகைய நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்களே தமக்குள் வாதிட்டு, வாக்குவாதம் நடத்தி மாகாணசபை அமர்வேயே கேலிக்கூத்தாக்குவது கண்டு யாரும் எதுவும் கதைக்கக் கூடாது என்று நினைப்பவர்களை நினைக்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லை.

தங்கள் இலாபம், தங்கள் நலன் என்றால் தமிழ் மக்களின் கதி என்ன? மாற்று அரசியல் தலைமை இல்லை என்பதால் தான் இந்தக் கதியோ என்று தமிழ் மக்கள் நினைந்து அழுகின்ற துன்பத்தை எவரும் ஏற்படுத்திவிடக் கூடாது.

ஏனெனில் தமிழ் மக்கள் உங்களை நம்பி உங் களுக்கு அளித்த வாக்குகள் அன்றோ உங்களுக்கு  பதவியை தந்தன. அந்தப் பதவியை துஷ்பிரயோகம் செய்து மக்களின் வெறுப்பை சம்பாதிக்காதீர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila