இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் 7 தமிழர்களையும் விடுதலை செய்வது தற்போதைக்கு சாத்தியமில்லை எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் மாளிகை தகவல்களை மேற்கோள் காட்டி தமிழக ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, அவர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றியது.
குறித்த தீர்மானம் அன்றைய தினமே தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தமிழக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆளுநர் அந்த தீர்மானத்தில் கையெழுத்திடாத காரணத்தினால் ஏழு பேரின் விடுதலை காலதாமதமடைவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி ஆளுநர் கருத்து கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டபோதும், ஆளுநர் மாளிகை அதனை மறுத்திருந்தது.
இதேநேரம், ராஜிவ்காந்தி கொலையின்போது உயிரிழந்த 2 பேரின் உறவினர்கள், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஆளுநர் இதுவரை சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உள்ள பல்வேறு சட்ட, நிர்வாக, அரசியல் பிரச்சினைகளை ஆலோசித்து ஆளுநர் முடிவெடுப்பார் எனவும் தகவல்கள் தெரிவிப்பதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.