ரெலோ அமைப்பின் தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் போராளிகளின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி பொதுக்கூட்டம் இன்று யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்காக யாழ்.வந்திருந்த அமைச்சர் மனோகணேசன் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், முதலமைச்சரும் தாமும் மிக நெருங்கிய நண்பர்கள் எனவும், அந்தவகையில் சிநேகபூர்வமாகவும், சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாகவும் பொருளாதார மையம் வவுனியாவில் அமைப்பது தொடர்பாகவும் பேசியிருக்கிறோம். அது தொடர்பாக முதலமைச்சருடன் பேசினோம். அது தொடர்பாக துறைசார் அமைச்சர் ஹரிசனுடன் முதலமைச்சர் விக்னேஷ்வரன் முன்னதாகவே பேசியிருக்கின்றார். எனவே அந்த விடயத்தில் வடமாகாண சபை உரிய நடவடிக்கை எடுத்து வவுனியா நகருக்கு அண்மையில் பொருத்தமான காணியை தெரிந்து கொடுக்கும் என கூறியிருக்கின்றார்.
இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மனோகணேசன் என்னுடைய மிக நெருங்கிய நண்பர், அவருடைய தந்தையாரையும் எனக்கு நன்றாக தெரியும். மனோ கணேசன் என்னை அரசியல் வாழ்க்கைக்கு இழுத்து வந்தவர்.
அதனாலேயே நான் இவ்வளவு கஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வகையில் அவர் என்னை சந்திக்க வந்தமை மிக மகிழ்ச்சியான விடயம். எங்களுடைய சந்திப்பின் போது பொருளாதார மையம் தொடர்பாக பேசியிருக்கிறோம். அது தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். எந்தவொரு கட்டத்திலும் வடமாகாணத்திற்கு வெளியே அதனை கொண்டு செல்வதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என கூறியிருக்கின்றார்.