கிளிநொச்சி பூநகரி பள்ளிக்குடா பகுதியில் யூதா தேவாலயத்திற்கு சொந்தமான காணியை கடற்படையினரின் தேவைக்காக அளவீடு செய்யும் நடவடிக்கை பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் குறித்த பகுதிக்கு சென்ற நில அளவையாளர்கள் காணியை அளக்க முற்பட்டபோது, அப்பிரதேச மக்கள் 100 பேர் வரையில் ஒன்று திரண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக நில அளவை கைவிடப்பட்டுள்ளது.
இதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன், வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிளையும் பிரசன்னமாகியிருந்தனர். குறித்த காணி தேவாலயத்திற்கு சொந்தமானது என்றும், இந்தக்காணியை கடற்படையினரின் தேவைக்கு கொடுக்க முடியாது என்றும் கூறிய மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, மக்களின் கோரிக்கைகளை எழுத்து மூலமாக வழங்குமாறு நிலஅளவை அதிகாரிகள் கேட்டுக்கொள்ள, மக்கள் எழுத்து மூலமாக தமது கோரிக்கைகளை கொடுத்துள்ளனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, இராணுவத்தினர் புகைப்படக் கருவிகளுடன் பொது மக்களையும், ஊடகவியலாளர்களையும் புகைப்படம் எடுத்து அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.