வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தரிடம் கையளிக்காததால் வடக்கு மாகாண சபையின் இளம் உறுப்பினர்கள் கடும் கோபம் உற்றுள் ளனர் என்பதை நேற்று முன்தினம் நடந்த மாகாண சபைக் கூட்டத்தொடரில் காணமுடிந்தது.
வடக்கின் முதலமைச்சர் மீது குற்றம் சுமத்தும் தமது வழமையான நடவடிக்கைக்கு ஒரு நல்ல துரும்பு கிடைத்ததுபோல் இளம் உறுப்பினர்கள் சீறிப் பாய்ந்தனர்.
வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்டத்தை யாரிடம் ஒப்படைக் வேண்டுமோ அவர்களிடம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கையளித்திருந்தார். இந்நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது.
தீர்வுத் திட்ட வரைபை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து முதலமைச்சர் கையளிப்பதாக இருந்த போதிலும் முதலமைச்சரின் உடல்நிலை காரணமாக அது நடைபெறவில்லை.
இது தவிர கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்போர் ஒரு குடும்பத்தவர்கள். இருவரும் தமிழ் மக்களின் தலைவர்கள். எனவே இவர்கள் தீர்வுத் திட்ட வரைபை கையளிப்பதும் பெற்றுக்கொள்வதும் என்பது ஒரு விசேடமான நிகழ்வன்று.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரிடம் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தீர்வுத்திட்ட வரைபை கையளித்தல் என்பதை ஒரு பெரும் நிகழ்வாக யாரேனும் நினைத்திருந்தால் இவர்களுக்கு எது வுமே தெரியாது என்று மட்டுமே சொல்லமுடியும்.
இது ஒரு வீட்டுக்குள்-குடும்பத்துக்குள்ளான நிகழ்வு. அதைப்பெருமெடுப்பான நிகழ்வாக நோக்குவது அறியாமையின் வெளிப்பாடாகும். இந்த உண்மைகள் வடக்கு மாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்கு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறோம்.
வடக்கு மாகாணம் தயாரித்த தீர்வுத்திட்ட வரைபை முதலில் சம்பந்தரிடம் கையளிப்பதை விட அரசியலமைப்பை வரைபதற்கான மக்கள் கருத்தறியும் குழுவிடம் கையளிப்பதே பொருத்துடையது. இதனையே முதலமைச்சர் செய்திருந்தார். இதில் தவறு எங்குள்ளது என்பது தெரியவில்லை.
இருந்தும் சம்பந்தரைப் புகழ்ந்து பாடிப் போற்று வதன் மூலமே அடுத்த முறையும் தமக்கு ஆசனம் கிடைக்கும் என்று கனவு காண்பவர்கள் தங்களைச் சம்பந்தரின் விசுவாசிகளாக காட்ட நினைத்து, நேற்றுமுன்தினம் வடக்கு மாகாண சபையில் கூச்சலிட்டனர்.
இருந்தும் நியாயம் தெரிந்த உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் செய்தது சரி என்பதை வெளிப்படுத்தினர். இத்தகைய உறுப்பினர்கள் யார்க்கும் அஞ்சாது உண்மையை எடுத்துரைத்தமை தமிழ் வாழும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.
எது எப்படியாயினும் வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்ட வரைபை முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரிடம் முதலில் கையளித்தால் சம்பந்தர் உடனடியாக தீர்வைக் கொடுத்து விடுவாரா என்ன? அவரும் அரசிடம் அல்லது அரசியல் அமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிடமே அத் தீர்வுத்திட்ட வரைபை கையளிப்பார். ஆக, அதை முதலமைச்சரே நேரில் கையளிப்பது நல்லதல்லவா?
அட! தங்கள் முதலமைச்சருக்கு மே தினத்தில் இடம்கொடுக்காமல் கூட்டமைப்பு ஓரம் கட்டியதை, யாழ்.குடாநாட்டில் நடக்கின்ற பயங்கரங்களைப் பற்றி எதுவும் கதைக்காத சபை உறுப்பினர்கள், சம்பந் தரின் விடயத்தை பெரிதுபடுத்தியமை ஏற்கெனவே திட்டமிட்ட சதி என்பது மறுக்க முடியாத உண்மை.
எதுவாயினும் மக்கள் கண்டு கொள்ளாத வரை இவர்கள் கூச்சலிடவே செய்வர்.