சிறிலங்காவின் முக்கிய துறைகளான ஆயுதப்படைகள், காவல்துறை, சட்டமா அதிபர் திணைக்களம், மற்றும் நீதித்துறை என்பன மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்று, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான பயணத்தின் முடிவில் கடந்த சனிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட, சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடுமையான, மனிதநேயமற்ற நடத்தைகள் மற்றும் தண்டனைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், ஜுவான் மென்டஸ்-
“ஆயுதப்படைகள், காவல்துறை, சட்டமா அதிபர் திணைக்களம், மற்றும் நீதித்துறை என்பன மறுசீரமைக்கப்பட வேண்டும். இந்த முக்கிய நிறுவனங்களின் விரிவான மறுசீரமைப்புக்கு அவசரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். இந்தச் சட்டம், விசாரணையின்றித் தடுத்து வைக்க அதிகாரமளிக்கிறது. இதற்கு மாற்றான புதிய மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
பூசா சிறைச்சாலை, பூசா தீவிரவாத தடுப்புப் பிரிவின் தடுப்பு முகாம், காலி கோட்டை இராணுவ முகாம், களுத்துறை தெற்கு கண்காணிப்பாளர் பணியகம், பாணந்துறை, புத்தளம், கற்பிட்டி காவல் நிலையங்கள், ஜோசப் முகாம் என அழைக்கப்படும், வவுனியா படைத் தலைமையகம், வவுனியா, சிறைச்சாலை, வவுனியா காவல்நிலையம், வவுனியா தீவிரவாத தடுப்பு முகாம், பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம், திருகோணமலைக் கடற்படைத்தளம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம், தீவிரவாத விசாரணைப்பிரிவு, வெலிக்கடைச் சிறைச்சாலை என்பனவற்றையும் பார்வையிட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.