கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் உள்ள தமது காணிகளை இராணுவத்தினர் விடுவிக்காவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் சனிக்கிழமை கிளிநொச்சிக்குப் பயணம் செய்யவுள்ள சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தமது காணிகளை விடுவிப்பார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 10 ஆம் திகதி பரவிப்பாஞ்சானில் உள்ள ஒரு தொகுதி காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தாலும் இன்னும் 20 குடும்பங்களுக்குச் சொந்தமான 180 ஏக்கர் காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக இம்மக்கள் கடந்த 28ஆம் திகதி பரவிப் பாஞ்சான் இராணுவ முகாம் அதிகாரியிடம் கடிதம் ஒன்றும் வழங்கியிருந்தனர்.
இதற்கான பதில்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் அம்மக்கள் ஊர்வலமாகச் சென்று இராணுவ அதிகாரியிடம் தமது கோரிக்கையை முன்வைத்தனர்.
மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த இராணுவ அதிகாரி, இது குறித்து தாம் முடிவு எடுக்கமுடியாது எனவும் அரசாங்கமே இதற்கான முடிவை எடுக்கவேண்டுமெனவும் தெரிவித்தார்.