அண்மைக்காலமாக வாள்வெட்டுச் சம்பவங்களால் அச்சுறுத்தல் விடுத்துவந்த ரொக் ரீம் இன்று காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாணப் பிராந்தியக் காவல்துறை குற்றத் தடுப்புப் பிரிவே இவர்களைக் கைதுசெய்தது.
ஐந்துபேர் கொண்ட இந்தக் குழுவிற்கு 20 வயதான தனு ரொக் என அழைக்கப்படும் சந்தேக நபரே தலைமைதாங்கினார். இந்தக் குழுவில் 18 வயதையுடைய பிரபல பாடசாலை மாணவனான இரத்தினசிங்கம் செந்தூரன் என்பவரும் உள்ளடங்குகின்றார். ஏனைய நான்குபேரும் அதே பாடசாலையைச் சேர்ந்த பழையமாணவர்கள் எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
வடக்கில் பெருகி வரும் வாள் வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையோரை கைது செய்யவும் அவற்றை கட்டுப்படுத்தவும் வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் டப்ளியூ.எப்.யூ.பெர்ணான்டோவின் நேரடி கண்காணிப்பில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.கே.பெரேரா, வட மாகாண சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் கே.கணேசநாதன், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் தம்மிக ஜயலத் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பிரதான காவல்துறை பரிசோதகர் கேரலகேயின் கீழ் அதன் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் முஜித்த, உபகாவல்துறை பரிசோதகர் ஸ்ரீ கஜன் ஆகியோரின் கீழான சிறப்பு விசாரணைக் குழுவினரே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளின்போது பெறப்பட்ட தகவல்களுக்கேற்ப கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியமளவில் குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இதன்படி, லோட்டன் வீதியை சேர்ந்த தனு ரொக் என அழைக்கப்படும் இந்த குழுவின் தலைவன் எனக் கருதப்படும் மோகன் தனுசன் (20), கல்வியன் காடு புலவர் வீதியை சேர்ந்த பாடசாலை மாணவனான ரட்ணசிங்கம் செந்தூரன் (18), கோப்பாய் காளி கோவிலடியை சேர்ந்த கிசோக் என அழைக்கப்படும் பசுபதி கோபால், உரும்பிராய் கிழக்கு பகுதியை சேர்ந்த சிவகுமார் நிசாந்தன்(23), கோப்பாய் தெற்கு பகுதியை சேரந்த சிறி ரஞ்சன் இராகுலன் (22) ஆகியோரே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களாவர்.
கைதானவர்களிடம் விசாரணை நடாத்திய காவல்துறையினர் யாழ் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் நடைபெற்ற வாள்வெட்டு, நாயன்மார்கட்டு வீடு ஒன்றினில் புகுந்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தியமை, சுன்னாகப் பகுதியில் ஒருவரை வாளால் வெட்டிவிட்டு உந்துருளியை பறித்துச் சென்றமை போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்டமை தெரியவந்துள்ளது.
மேலும், சுண்டுக்குளி பகுதியில், தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் சொகுசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தமை, ஆனைக்கோட்டைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியமை, முதலி கோயில் கொக்குவில் பகுதியில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிளிளை கோடரியால் கொத்தி சேதம் விளைவித்தமை உள்ளிட்ட 9 குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளமையையும் உறுதி செய்துகொண்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இவர்களது வங்கிக் கணக்கில் பெருந்தொகையான பணம் வைப்பிலிடப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பணமானது, சுவிற்சர்லாந்திலுள்ள மோட மாமா என அழைக்கப்படும் நபரால் வைப்பிலிடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் சுவிற்சர்லாந்திலுள்ள நபர் இந்த குழுவுக்கு யாழில் குற்றங்களுடன் கூடிய சூழலை உருவாக்க பணம் வழங்கினாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சுவிற்சர்லாந்தில் உள்ள நபர் இந்த குழுவுக்கு பணம் வழங்கியமைக்கான காரணம், அதன் நோக்கம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்கள் ஐவரையும் இன்று யாழ். பிரதான நீதிவான் சதீஷ்குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைத்துள்ளனர்