பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட கிராம மக்களின் காணிகளை மீள வழங்க கடற்படை மறுப்பு

625.117.560.350.160.300.053.800.210.160.90 (24)
மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் உள்ள பொது மக்களின் காணிகளில் தற்போது நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி இடம் பெயர்ந்த மக்களை அக்காணிகளில் மீண்டும் மீள் குடியேற்றம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதும், கடற்படையினர் குறித்த காணிகளில் இருந்து வெளியேற எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என இடம் பெயர்ந்துள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில், பொதுமக்களுக்கு சொந்தமான 25 வீட்டுத்திட்ட கிராமத்தில் உள்ள காணிகள் மற்றும் வீடுகளில் கடற்படையினர் முகாம்களை அமைத்துள்ளனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இராணுவத்தினர் குறித்த வீட்டுத்திட்டத்தினுள் உட்புகுந்த நிலையில் குறித்த வீட்டுத்திட்டத்தில் வாழ்ந்து வந்த மக்கள் வெளியேறினர்.
பின் நிர்வாக வசதியாக பொலிஸார் அங்கு இணைந்து கொண்டனர்.
1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இராணுவம் குறித்த வீட்டுத்திட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில் பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் செயற்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த காணிகளில் உள்ள படையினரை வெளியேற்ற அக்கிராம மக்கள் தொடர்ச்சியக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.ஆனால் இது வரை பயனளிக்கவில்லை என அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக தமது சொந்த நிலங்களை விட்டு இடம்பெயர்ந்து வேறு இடங்களில் குடியிருந்த மக்கள், போர் நிறைவடைந்த பின்னரும் தமது பூர்வீக கிராமங்களில் மீள் குடியிருக்க முடியாத நிலை பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ளது. அந்த நிலமையே பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்களுக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த கிராம மக்களின் சொந்த வீடுகள் மற்றும் காணிகள் தற்போது கடற்படையினரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமது காணிகளை மீட்டுத்தருமாறு வலியறுத்தி, பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான சுமார் 26 வருடங்களுக்கு மேலாக பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள் உற்றார்,உறவினர்,நண்பர்களின் வீடுகளில் பல்வேறு வேதனைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே நல்லாட்சி அரசாங்கம் படையினர் வசம் இருக்கின்ற மக்களின் காணிகளை மீட்டுக்கொடுக்கும் இச்சந்தர்ப்பத்தில் மன்னார் பள்ளிமுனை கடற்கரையோரமாக உள்ள 25 வீட்டுத்திட்ட காணிகளையும் மீட்டுக்கொடுக்க உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila