சாலாவ விபத்தின் பின்னர், மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படும் என தெரிவித்த அரசாங்கம், வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு சிந்திப்பதானது, வடக்கிலுள்ள தமிழர்களுக்கு ஒரு நியாயமும், தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு வேறொரு நியாயம் என்பதையே எடுத்துக்காட்டுவதாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச்செயலாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான சண்.குகவரதன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா கூட்டத்தொடர் நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில், அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடு, அரசின் மீதான சர்வதேசத்தின் ஆதரவை இழக்கச்செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சண்.குகவரதன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
”வடக்கிலிருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாதென இராணுவத் தளபதியும், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரும் தெரிவித்துள்ளனர். இது தமிழ் மக்களின் மனதை புண்படுத்தியுள்ளதோடு கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பெயரளவில் வடமாகாணசபை ஏற்படுத்தப்பட்டபோதும் தமிழர் பிரதேசங்கள் இராணுவமயமாக்கப்பட்டதோடு, தமிழ் மக்கள் மீது இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
இதனைமாற்றி, தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தையும் சிவில் நிர்வாகத்தையும் வழங்குவதாக கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் உறுதியளிக்கப்பட்ட காரணத்தினாலேயே, தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆதரவு வழங்கினர். அரசாங்கம் இதனை உணர்ந்து, அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
வடமாகாணத்தில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டுமென கூறும் அதிகாரம், வடக்கு முதலமைச்சருக்கு உள்ளது. அது ஜனநாயக உரிமை. இதற்கு இனவாதிகள் புலிமுத்திரையும் இனவாத முத்திரையும் குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாடு நடைபெறும் நிலையில் அரசின் செயற்பாடுகள் சர்வதேசத்தின் ஆதரவை இழக்கும் ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது. எனவே இராணுவத்தரப்பு அரச தரப்பு தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலையிட்டு தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தையும், சிவில் நிர்வாகத்தையும் உறுதிசெய்வதற்கான தீர்மானத்தை எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.