இன்று தீபாவளித் திருநாள். நரகாசுரனை விஷ்ணு பரமாத்மா வதம் செய்தநாள். அசுரர்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவதாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
அவதாரங்கள் அசுரர்களை அழிப்பதோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. அசுரத்தனங்களும் அவதாரங்களும் தோன்றிக்கொண்டே இருக்கும். பகலும் இரவும் போல தர்மமும் அதர்மமும் உள்ளன.
எதுவுமே முடிந்து விடுவதில்லை. ஏனெனில் அரசுத்தனம் என்பது ஆன்மாவின் பக்குவத்துடன் சம்பந்தப்பட்டது. பக்குவப்படாத ஆன்மாக்களில் அரசுரத்தனங்கள் இருக்கவே செய்யும்.
இப்போது கூட எங்கள் தமிழ் அரசியலை எடுத்துப் பாருங்கள். அசுரத்தனங்கள் எழுந்து ஆடுகின்றன. தமிழ் மக்கள் அன்றோ! வாக்களித்து எங்களுக்குப் பதவி தந்தனர் என்ற நினைப்பு அழிந்து விட்டது.
வீடு வீடாகச் சென்று கூப்பிய கரத்துடன் வாக்குக் கேட்ட அந்த நினைவுகள் மறந்து போயின. வாக்குக் கேட்கும் காலத்தில் பரிபக்குவ நிலை அடைந்த ஆன்மாக்களாகக் காட்சி கொடுத்த அரசியல்வாதிகள் இப்போது அனைத்தையும் மறந்து அதர்மம் செய்யத் தலைப்பட்டனர்.
அந்தகோ! தமிழ் மக்களின் வாக்கைப் பெற்று தமிழ் மக்களுக்கே ஈனம் செய்கின்ற கயமைத் தனத்தை இங்கு தவிர்ந்து வேறு எங்கும் கண்டிட முடியாது.
உலக நாடுகள் மத்தியில் தான் பேசுவது-கூறுவது அனைத்தும் உண்மையும் நேர்மையும் என்று நினைத்தால், அதைக் கும்பிடு கோலத்தில் நின்று; பொய்ப் பிரசாரம் செய்து; அரசியல் பித்தலாட்டம் புரிந்து; பதவியைப் பெற்றுக் கொண்டு கூறாமல், சமாதானத்தை; நல்லெண்ணத்தை; இன ஒற்றுமையை; மனிதத்தை விரும்புகின்ற மனிதர்களாக நின்று கூறுவதுதான் பொருத்தம்.
கூறுகின்ற கருத்து நியாயமானதாயினும் அதைக் கூறுவதிலும் நியாயம் இருக்கவேண்டும். அதுவே தர்மம். தர்மத்தை நிலை நாட்டுவதற்காக அதர்மத்தை பின்பற்றுவது மகாபாவம்.
இராவணனை சங்காரம் செய்ய வந்த இராமபிரான் போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்கும் இராவணனை இன்று போய் போர்க்கு நாளை வா என்று அனுப்பினான். இராவணனைக் கொல்வதன் மூலமே தர்மம் நிலைக்கும் என்பதை அறிந் திருந்த இராமன் அதைச் செய்து விட வேண்டியது தானே! எதற்காக இராவணன் ஆயுதத்துடன் நிற்கிறானா? அல்லது ஆயுதத்தை இழந்து நிற்கிறானா? என்றெல்லாம் பார்க்க வேண்டிய தேவை எதற்கானது. இராவணனை வெட்டிச் சரித்தால் தர்மம் நிலைக்கும் எனின் காலதாமதம் ஏன்?
ஆம்! இங்குதான் அவதார புருர்கள் இன்னொரு தர்மத்தை நமக்கு உணர்த்துகின்றனர். தர்மத்தை நிலைநாட்டுவதிலும் ஒரு தர்மம் இருக்க வேண்டும்.
தர்மம் என்பதற்காக அதர்மத்தின் ஊடாக அதனை நிறைவேற்றலாகாது. இதுதான் உண்மை. இந்த உண்மை காலத்துக்குக் காலம் பிழைத்துப் போவதால் அவதாரங்களும் அவ்வப்போது தோன்றி சரிப்படுத்தலைச் செய்தாகின்றன.
அப்படியானதொரு சரிப்படுத்தலுக்காக அவதாரம் எடுத்து அசுரத்தனத்தை சங்காரம் செய்து தர்மத்தை நிலைநிறுத்திய நாளே தீபாவளித்திருநாள்.
இந்நாளில் அதர்மம் அழிந்து தர்மம் நிலைத்து தமிழ் மக்கள் இன்புற்று வாழ இன்னுமொரு அவதாரத்தை எடு கிருஷ்ணா என்று இறைஞ்சுவோம்.