மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இனவாத வெறியுடன் தலைதூக்கிய சிங்கள கடும்போக்குவாதிகளின் பேய் ஆட்டம் நல்லாட்சியிலும் தொடரவே செய்கின்றது. இந்த இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அடாவடித் தனங்களைத் தொடர்கின்றார்கள்.
சிஹல உறுமய, ராவணா பலய, பொதுபல சேனா, சிங்க லே ஆகிய அமைப்புக்கள் இவற்றில் முதன்மையானவையாக செயற்படுகின்றன. இந்த அமைப்புக்கள் தீவிரவாதிகளாக இருந்தாலும் அவர்கள் மொட்டை போட்டு, காவி அணிந்து கொண்டு பௌத்த பிக்குகளைப் போலவே இருக்கின்றார்கள்.
பௌத்த நாடு என்பதாலும், சிங்கள ஆட்சியாளர்கள் என்பதாலும் இவர்களைக் கண்டால் எழுந்து மரியாதை செய்யும் நிலைமையே இருக்கின்றது. பௌத்த துறவிகள் என்றும், ஆன்மீகவாதிகள் என்றுமே பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் மொட்டையும், காவியும் இந்த இனவாத தீவிரவாதிகளுக்கு ஒரு கவசமாகவே இருக்கின்றது.
விடுதலைப் புலிகள் இருந்தவரை இந்த இனவாதிகள் தமது கட்டமைப்புக்களை பலப்படுத்தியிருந்தாலும் வெளியில் தலை காட்டவில்லை. வெளியில் தலைகாட்டிய சிஹல உறுமய போன்ற அமைப்புக்கள்,தமிழ் மக்களுக்கு எதிராகவோ, முஸ்லிம் மக்களுக்கு எதிராகவோ வன்முறைகளை செய்யவில்லை.
விடுதலைப் புலிகளிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர், வெற்றி மமதையில் சிங்கள இனவாதம் தலைதூக்கத் தொடங்கிய மஹிந்த ராஜபக்சவின் காலத்திலேயே இனவாதிகள் உற்சாகம் பெற்றார்கள். பொதுபல சேனா போன்ற அமைப்புக்களுக்கு நோர்வே போன்ற சில நாடுகள் நிதி உதவி வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் இனவாதிகளை ஊக்குவிக்கும் காரியங்களை பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்ச ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகின்றது. மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் கொழும்பு,தம்புள்ளை,மலையகம் போன்ற பகுதிகளில் தமிழ் மக்களின் வணக்க ஸ்தலங்களை இனவாதிகள் தாக்கி அழித்திருக்கின்றார்கள்.
இதுதவிரவும் வடக்கு கிழக்கில் கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் புத்தர் சிலைகளை நிறுவுவதை படையினரும், பௌத்த அமைப்புக்களும் திட்டமிட்டு முன்னெடுத்திருந்தார்கள். இந்த அடாவடித் தனத்தை தடுத்து நிறுத்த தமிழ் அரசியல் தலைமைகள் முற்படவில்லை. எதிர்ப்பதும், தடுப்பதும் விடுதலைப் புலிகளோடு இல்லாமல் போன உணர்வுகளாகிவிட்டது.
தமிழ் மக்களை யுத்தத்தில் தோல்வியடையச் செய்துவிட்டதாக நினைத்துக் கொண்டு சிங்கள இனவாதிகள், முஸ்லிம்களை ஒடுக்கும் தாக்குதல்களை தொடங்கினார்கள். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை தாக்கினார்கள். பள்ளிவாசல்களை தாக்கினார்கள். சிங்கள மக்கள் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யக் கூடாது என்றும், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் பணியாளர்களாக இருக்கக்கூடாது என்றும் இனவாத சட்டங்களையும் விதித்தார்கள்.
இத்தகைய நடவடிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டது, நோலிமிட், ஹவுஸ் ஒப் பெசன் போன்ற முஸ்லிம் வர்த்தக நிலையங்களாகும். அதுபோலவே முஸ்லிம்கள் உணவு தரச்சான்றிதலான ஹலால் என்பனவற்றை எதிர்த்தார்கள். நாடுதழுவிய ரீதியில் பள்ளிவாசல்கள், மார்க்க கல்வி நிலையங்களான மதராசாக்கள் போன்ற புனிதப் பகுதிகளையும் இனவாதிகள் தாக்கி அவமானப்படுத்தினார்கள்.
பேருவளையில் அப்பாவி முஸ்லிம் மக்களை தாக்கியும், கடைகளை தீயிட்டும் இனவாதிகள் செய்த வன்முறைகளையும் மறக்கமுடியாது. இனவாதிகள் பொலிஸாரை மதிக்காமலும்,அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் போலவும், தாமே சீருடை அணியாத பொலிஸார் என்றும் கூறிக்கொண்டு நாளாந்தம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக முன்னெடுத்த வன்முறைகளை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ மஹிந்த ராஜபக்சவும், அவரது படைகளும் முற்படவில்லை. மஹிந்த ராஜபக்சவின் சிறுபான்மை மக்கள் மீதான பாரபட்சமான செயற்பாடுதான் அவரது ஆட்சிக் கதிரையை உலுப்பிவிட்டு ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியது.
இந்நிலையில், மஹிந்த அதிகார அரங்கிலிருந்து அகற்றப்பட்டதோடு இனவாதிகளும் அடங்கிவிடுவார்கள் என்றும், அடக்கப்படுவார்கள் என்றும் சிறுபான்மை மக்கள் நம்பினார்கள். ஆனால் அந்த நம்பிக்கைகள் இன்று உடைந்து தவிடு பொடியாகிக் கொண்டிருக்கின்றன. நயினாதீவில் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் முகப்பு கோபுரத்துக்குப் போட்டியாக அதைவிடவும் உயர்ந்த புத்தர் சிலையை அமைக்க வேண்டுமென பௌத்த அமைப்புக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றன.
கண்டியில் பள்ளிவாசலை புனரமைக்க விடாமல் சிங்க லே அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். வேலிமடவில் முஸ்லிம் சிறுவர்களுக்கு மார்க்க கல்வியை போதிக்கும் பாடசாலையை நிர்மாணிக்க எடுத்த முயற்சியை பௌத்த அமைப்புக்கள் தடுத்து எதிர்ப்புக்காட்டி வருகின்றனர்.
இதேபோல் அன்மையில் சம்பூரில் பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு கூடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீரை அழைக்காமல் கடற்படையினர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்ததையும், அந்த நிகழ்வுக்கு சென்றிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சரை கடற்படை அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது மேடையிலேயே கடற்படை அதிகாரி முதலமைச்சரை மேடைக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்த முற்பட்டபோது வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. அதில் முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டிதீர்த்த சம்பவமானது சிங்கள இனவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து முப்படையினரின் முகாம்களுக்குள்ளும், படையினரின் நிகழ்வுகளிலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்படுவதாக படைத்தரப்பு அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் முதலமைச்சர் நசீர் பேச்சு நடத்தியதை தொடர்ந்து முதலமைச்சர் மீதான தடையை படையினர் விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் ராஜிதவும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கவும் கருத்துத் தெரிவிக்கும்போது, முதலமைச்சர் ஒருவருக்கு படையினர் தடைகளை விதிக்க முடியாது என்று கூறியிருந்தார்கள். அப்படியானால் முதலமைச்சருக்கு தடைவிதித்த படையினர் மீது பிரதமர் நடவடிக்கை எடுத்தாரா? அதுகுறித்து விசாரணையை முன்னெடுத்தாரா? என்பதை சிந்திக்க வேண்டும்.
வெளிப்படையாகப் பேசப்படாவிட்டாலும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் விடயத்தில் முன்னின்றது, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிறுபான்மை முஸ்லிம் என்பதும், படையினர் வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் சிவில் நடவடிக்கைகளில் அநாவசியத் தலையீடு செய்து கொண்டிருக்கின்றனர் என்பதும் தான். இதை உண்ரந்தே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இனவாதிகளுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் கிழக்கு மாகாண முதலமைச்சர் மன்னிப்புக் கேட்டு பிரச்சினைக்கு முடிவுகாண வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆக, இனவாதம் நல்லாட்சியிலும் அடக்கப்படாமல் தலைதூக்கியிருக்கின்றது. உண்மை நிலைமை இவ்வாறு இருக்கையில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சிறுபான்மை மக்கள் கோருவது நியாயம் என்றும், அவர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுவதால் மட்டும் நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்பட்டுவிடாது.
தேசிய நல்லிணக்கத்திற்கு பாதகமாக அமையும் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்துநிறுத்த, நல்லாட்சி அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கையை முன்னெடுக்காவிட்டால் ஆட்சி மாற்றத்தின் மீது சிறுபான்மை இனங்கள் கொண்டிருந்த நம்பிக்கை தகர்ந்துபோய்விடும்.
-ஈழத்துக் கதிவரன்-