பாடசாலை வளாகத்தில் தனி மாணவருக்கு வகுப்புக்கள் எதுவும் நடத்தப்படக்கூடாது (மீறினால் சட்ட நடவடிக்கை என முதலமைச்சர் உரை)


தனி ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ எக்காரணம் கொண்டும் பாடசாலை வளாகத்தினுள் பிரத்தியேக வகுப்புக்கள் நட த்தப்படக்கூடாது. அவ்வாறு வகுப்பு நடத்தப்பட்டால் குறித்த ஆசிரியர், அதிபர் மீது சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

கல்வி நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் செயற்பாடுகள் பற்றி இறுக்கமான சில தீர்மானங்களை எடுக்கவேண்டிய கால கட்டாயத்திற்கு நாம் உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்/புற்றளை மகா வித்தியாலயத்தின் நூறாவது ஆண்டு நிறைவு விழா, புதிய நிர்வாகத் தொகுதி, திறந்த வெளி கலையரங்கம், நுழைவாயில் திறப்பு விழா மற்றும் நூற்றாண்டு மலர் வெளியீடும் தபால் தலை வெளியீடும் நேற்றைய தினம் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். 
அவர் தொடர்து உரையாற்றுகையில்,

உலகளாவிய ரீதியில் இலங்கைத் தமிழர்கள் பொதுவாகக் கற்றவர்கள், பண்பட்டவர்கள், பண்புடையவர்கள் என்ற நற்பெயரை இதுவரை நிலைநாட்டி வந்துள்ளனர். 
எனினும் எவ்வளவு தீய பழக்கங்களையும் செயல்களையும் புரிய முடியுமோ அவற்றையெல்லாம் புரிந்து கொண்டு பூமிக்கு பாரமாக இருக்கக் கூடிய இளைஞர்களை நாம் இன்று எம்மிடையே பார்க்கின்றோம்.  இவர்களைத் திருத்தி சரியான பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய தலையாய பணி இப்போது புதிதாக உருப் பெற்றிருக்கின்றது. 

போரால் பாதிக்கப்பட்ட மக்கள்,எவ்வாறு கரையேற்றுவது என்று திக்குத் தெரியாமல் நாம் தடுமாறிக் கொண்டிருக்கும் இவ்வேளை யில் மாணவ மாணவியரைக் கரைசேர்க்கும் பிரச்சினை எம்மை மேலும் திணற வைத்துக் கொண்டிருக்கின்றது. 

எளிமையிலும் செழிப்புடனும் வாழ்ந்த எம்மவர்கள் இன்று வெட்கித் தலைகுனிகின்றார்கள். பிரச்சினைகள் மாணவ மட்டத்தில் மட்டுமே என்று கூறமுடியாது. நாம் சிறுவர்களாக பாடசாலைகளில் கல்வி கற்ற காலத்தில் எமது ஆசான்களாக எமக்குக் கல்வி புகட்டிய ஆசிரியப் பெருந்தகைகளை ஒரு கணம் எண்ணிப் பார்த்தோமானால் அவர்கள் ஆசார சீலர்களாக, ஒழுக்கம் நிறைந்தவர்களாக, கண்ணியம் மிக்கவர்களாக, எமது முன்னேற்றத்தின் முன்னோடிகளாக வாழ்ந்ததை நாங்கள் அடையாளம் காணுவோம். அவர்களின் தோற்றங்கள் இப்போதும் எமது மனக் கண்ணில் பசுமரத்தாணியாக காட்சி யளித்துக் கொண்டிருக்கின்றன. 

ஆனால் இன்றைய தினசரிப் பத்திரிகைகளில் வருகின்ற செய்திகள் எம்மை கதி கலங்க வைக்கின்றன. பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் குறிப்பாகப் பத்துப் பன்னிரண்டு வயது பெண் பிள்ளைகளுடைய பெற்றோர்கள் தமது பிள்ளைகளை எவ்வாறு பாடசாலைக்கு அனுப்புவது என ஏங்குகின்றார்கள். 
குருவைக் கண்ட இடமெல்லாம் வணங்கு என்ற ஒளவைப் பிராட்டியின் கூற்றுக்கு இன்று என்னாகி விட்டது? தகுதியற்றவர்கள் தகைமையற்றவர்கள் தரங்குறைந்தவர்கள் புனிதமான ஆசிரியத் தொழிலினுள் உள்ளிட நாம் இடமளித்து விட்டோம். இதற்குக் காரணம் அரசியல் என்பதிலும் பார்க்கச் சுயநலமே என்பது எனது கருத்து. 

தூர நோக்கின்றி தருணத்திற்குப் பொருத்தமாக தன்நல காரணங்களுக்காக நாங்கள் தவறான பாதையில் சென்று விட்டோம் என்பதை இனியாவது நாம் உணர வேண் டும். எனவே கல்வி நடவடிக்கைகளில் ஆசிரி யர்களின் செயற்பாடுகள் பற்றி இறுக்கமான சில தீர்மானங்களை கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் மூலம் அனுப்ப வேண்டிய கால கட்டாயத்திற்கு நாம் உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம் என்று நான் நம்புகின்றேன். 

உதாரணத்திற்குத் தனி ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடத்தப்படக்கூடாது. அவ்வாறு நடத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும். 

மேலும் ஒரு ஆசிரியர் ஒழுக்க நெறி பிறழ்வில் ஈடுபட்டிருப்பது தெரிந்தும் அதனை உட னடியாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்ப டுத்தாமல் மறைப்பதும்; கூட தண்டனைக்கு உரிய குற்றமாகும். இவற்றை நடைமுறைப் படுத்த நாம் முன்வர வேண்டும்.

எனவே  ஓர் இரு ஆசிரியர்களின் தவறான பழக்க வழக்கங்கள் ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தையும் தலைகுனிய வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நண்பர்கள், பழகியவர்கள் எனப் பிழை செய்பவர்களுக்கு உதவப் போய் நீங்களும் சேர்ந்து பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள் ளுங்கள். 

பெரும்பான்மை ஆசிரியர்கள் கண்ணிய த்துடன் நடந்து கொள்ள முடிவெடுத்தால் குற்றமிழைக்கும் ஆசிரியர்களை எளிதில் திருத்தி விடலாம். 
உங்கள் பெரும்பான்மையினரின் அழுத்தம் தவறு செய்பவரைக் கட்டுப்படுத்திவிடும். ஆனால் அதற்கென்ன என்று பெரும்பான்மையோர் சிந்திக்கத் தொடங்கினால் ஆசிரிய சமூகத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்ப டும். கணணி மூலமாக எங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டுவோம். ஆசிரியர்களு டன் நேரடித் தொடர்பின்றி கல்வி புகட்டுவோம் என்று பெற்றோர்கள் கூறத் தலைப்படுவார்கள். 

ஆகவே ஆசிரியர் சமூகம் மீண்டும் ஒரு உன்னதமான சமூகமாக மாற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என இச் சந்தரப்பத்தில் கூறி வைக்கின்றேன். 
ஒவ்வொரு பாடசாலையும் ஏனைய பாடசாலைகளுக்கும் மக்களுக்கும் முன்மாதிரியாக விளங்க இனிப் பாடுபடவேண்டும். அவை பாடசாலைகளாக இல்லாது கோவில்களாக மாற நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கோவில்களாகத் தினமும் பூஜிக்கத்தக்க வகையில் பாடசாலைகள் மாற்றப்பட வேண் டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.  அதற்கு நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila