யுத்தக் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமில்லையென்றும், வெளிநாட்டின் தலையீடு இன்றி உள்நாட்டிலேயே பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம், விசாரணைக்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதாகவும், அதுவும் எவ்வித நிபந்தனைகளும் இன்றியே பெற்றுக்கொள்ளப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று வெளியாகியுள்ள ஆங்கில வார இதழொன்றிற்கு ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 27 ஆம் திகதி அலரி மாளிகையில் சிரேஷ்ட படை அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தபோதும்இவ்வாறு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, போருக்கு பின்னர் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமாக காணப்பட்ட போதும், கடந்த அரசாங்கம் அதனை மேற்கொள்ளவில்லையென குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கில் மாத்திரமன்றி தெற்கிலுள்ள சிங்கள பௌத்தர்களுக்கும் நல்லிணக்கம் அவசியமாக உள்ளதென குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எதிராக நாசவேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு, தொடர்ந்தும் இடமளிக்க முடியாதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செயற்படுபவர்கள் வடக்கில் இருந்தாலும், தெற்கில் இருந்தாலும், நாட்டிற்கு வெளியே இருந்தாலும் அவர்கள் தேசத் துரோகிகள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.