இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச விசாரணை என்ற தீர்மானம் பின்னர் உள்ளக விசாரணையாகி இப்போது அது கூட இல்லையென்ற நிலையாகிவிட்டது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எந்த விசாரணையையும் இலங்கை அரசு நடத்தாது என முதலிலேயே தெரிந்தும் காலத்தை விரயமாக்கும் அரசின் செயற்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடந்தையாக இருந்துள்ளது எனவும் ஆரம்பம் முதல் இறுக்கமாக இருந்திருந்தால் இந்த நிலைவந்திருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 29ந்திகதி ஐ.நாவில் புதிய கதையைச் சொல்ல இருக்கிறார். இதைக் கேட்டு அமெரிக்கா வாய்மூடி மௌனமாக இருக்கப்போகின்றதா? அல்லது பேசுமா? என்பது கேள்வி
அமெரிக்கா இலங்கையுடன் நட்புறவை பேணி வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு எதிராக அந்நாடு செயற்படாது என்றே தோன்றுகிறது.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் உரிய தெளிவுபடுத்தல்கள் உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கும் வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக சுரேஸ் கூறினார்.
ஜெனிவா சென்று உறுப்பு நாடுகளைச் சந்தித்து நடந்ததையும், நடக்காதவற்றையும் சொல்வதாகச் சொல்கிறார்கள். இந் நிலையில் நடக்காத போர்க் குற்ற விசாரணையை நடத்துமாறு வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசை இனியும் நம்ப முடியாது. எனவே விசாரணைக்கான கால எல்லையை வழங்குமாறு கூட்டமைப்பு கோர வேண்டும் எனவும் கூறினார்.