இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, மாகாண முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் உள்ளடங்கிய மேல்சபை (செனற் சபை) உருவாக்கப்பட வேண்டுமென, புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறியும் குழு, அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
75 பேர்களை கொண்டதாக அமைக்கப்படும் குறித்த சபையில், மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் மாகாணசபைகளிலிருந்து தெரிவுசெய்யப்படும் ஆறு பிரதிநிதிகள் இடம்பெறவேண்டுமென்றும், சிறுபான்மையினரின் மொத்த பிரதிநிதித்துவமானது, பெரும்பான்மை சமூக பிரதிநிதித்துவத்திற்கு குறைவாக இருக்கக்கூடாதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, அமைக்கப்படும் மேல்சபை, நாடாளுமன்றத்தின் எதேச்சாதிகார செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதாக அமையவேண்டுமென்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்றத்தினால் உப ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட வேண்டுமெனவும், மக்கள் கருத்தறியும் குழு பரிந்துரைத்துள்ளது.
வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கக் கூடாதென குறிப்பிட்டுள்ள மக்கள் கருத்தறியும் குழு, அவ்வாறு இணைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குகின்ற அரசியலமைப்பின் உறுப்புரை 154A (3) என்ற பிரிவு நீக்கப்பட வேண்டுமென்றும், புதிய அரசியலமைப்பிலும் அவ்வாறான ஒரு பிரிவு உள்ளடக்கப்பட கூடாதென்றும் பரிந்துரை செய்துள்ளது.
புதிய அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மாகாண சபைகளுக்கு சிறியளவிலாள பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென குறித்த குழு தெரிவித்துள்ளது. எனினும், ஒவ்வொரு மாகாணங்களுக்கும் சட்டமா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென்றும், பொலிஸ் ஆணைக்குழுவும், மாகாண அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளது. காணி அதிகாரங்களை பகிர்வதற்கு காணி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் மாகாண முதலமைச்சர்களின் சம்மதத்துடனேயே, மாகாண ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கருத்தறியும் குழு பரிந்துரைத்துள்ளது.
புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வரும் நிலையில், அதில் மக்களின் கருத்துக்களையும் உள்ளீர்க்கும் வகையில் நாடளாவிய ரீதியில் மக்கள் கருத்துக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து, மக்கள் கருத்தறியும் குழுவினரின் பரிந்துரைகளையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட அறிக்கை, நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.