போர்க்குற்ற விசாரணை தொடர்பாக சர்வதேசத்தினதும் சிவில் அமைப்புக்களின் கோரிக்கைகளையும் சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், போர்க்குற்ற விசாரணைகளை உள்நாட்டு நீதிபதிகளைக்கொண்டே நடாத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்களை சிறீலங்கா இராணுவத்தின் உயர் மட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று இன்று (வியாழக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவுறுத்தலானது மேஜர் ஜெனரல் தரத்திலிருந்து கேணல் தரத்திலுள்ள அதிகாரிகள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வு நடைபெறவுள்ளது. இதில் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் சிறீலங்கா தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் வடக்குக் கிழக்கிலுள்ள சிவில் அமைப்புக்களும், பாதிக்கப்பட்ட மக்களும் சர்வதேச விசாரணையே தேவையெனக் கோரிவருகின்றனர்.
அத்துடன் இந்த உள்நாட்டு விசாரணைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணித் தளபதி காலஞ்சென்ற தமிழினி தனது புத்தகத்தில் முன்வைத்த கருத்துக்களும் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சர்வதேச விசாரணைகளின்றி உள்நாட்டு நீதிபதிகளின் அனுசரணையுடனேயே விசாரணை நடைபெறும் என அரசாங்கம் தொடர்ந்தும் அழுத்தமாகக் கூறிவருகின்றது.