மூத்த குடிகளில் தமிழ்க் குடியும் ஒன்று. இதற்கு செம்மொழியாக பிரகடனப்படுத்தப்பட்ட தமிழ் மொழி சான்றாகும்.
இவ்வாறு மூத்த குடியாகிய தமிழினத்தின் பண்பாடுகள், நாகரிகங்கள் என்பன மிகப் பழமையானவை. எனினும் கால ஓட்டத்துக்கு ஏற்ப தமிழி னம் தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை என்பது நிறுதிட்டமான உண்மை.
இந்நிலைமை தொடர்வது மிகவும் வேதனைக்குரியது. நமக்கு என்ன என்ற போக்கும் எதிலும் அக்கறை அற்ற நிலைமையும் பொறுப்புக்களை உணர்ந்து கொள்ளாமையும் எங்களின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு பாதகமாக அமைந்திருப்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
ஆக, ஒட்டுமொத்தத்தில் தமிழினத்தின் சுயநலப் போக்கு எங்களுக்கான உரிமைகள் பலவற்றை இழப்பதற்கு காரணமாயிற்று.
குறிப்பாக வாக்காளர் பதிவு என்ற விடயத்தில் நாம் கவனம் செலுத்துவது மிக மிகக் குறைவு. வாக் காளர்களாக பதிவு செய்யும் போதுதான் எமக்கான வாக்குரிமையை நாம் பெற முடியும் என்பதை மறந்து விடுகின்றோம்.
எதையும் அந்தந்த நேரத்தில் செய்வது என்பதில் எங்களிடம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உடனுக்கு உடன் வேலையைச் செய்து முடித்தல் என்பதில் ஏற்படுகின்ற அசமந்தம் எங்களுக்கான கிடைப்பனவுகளை இல்லாமல் செய்கின்றது அல்லது மிகுந்த அலைச்சலை ஏற்படுத்தி அதன் பின்னர் கிடைப்பதாக அமைகின்றது.
இதனால் மனித மணித்தியாலங்களின் வீணடிப்பு, பொருளாதார சமூக காரணிகளால் பாதகமான தாக்கங்களை தருகின்றன.
எனவே எதையும் உடனுக்கு உடன் செய்து முடிப்பது, எதிலும் கவனம் செலுத்துவது, கவனம் செலு த்துகின்ற விடயங்களை உன்னிப்பாக கவனிப்பது என்ற திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக இத்திறன்களை மாணவர் மத்தியில் ஏற்படுத்தும்போது அது எதிர்காலத்தில் மிக சாதகமான விளைவுகளைத் தரும்.
அதேநேரம் மக்கள் மத்தியிலும் பொது விடயங்கள் மற்றும் சமூகம் சார்ந்த கருமங்கள் தொடர்பில் அக்கறைப்பாட்டை ஏற்படுத்த செய்வது கட்டாயமானதாகும்.
இதில் மிகவும் முக்கியமானது வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதாகும். வாக்காளர்களாக பதிவு கொள்வதன் மூலம் வாக்களிக்கின்ற உரிமை; எங்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை; சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட நிதி ஒதுக்கீடு எனப் பல விடயங்களில் நன்மை பெற முடிகின்றது.
இது மட்டுமன்றி இதற்கு மேலாக வாக்காளர் பதிவு என்பது வேலைவாய்ப்பு, கல்வியியல் கல்லூரிகளில் படிப்பை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கும் அவசியமாக இருப்பதால் , வாக்காளர்களாகப் பதிவு செய்தல் என்பது கட்டாயமானதாகும்.
இவ்வாறு வாக்காளர்களாக பதிவு செய்வதை மக்கள் மத்தியில் ஆர்வப்படுத்துவதற்கு நடைபெறுகின்ற தேர்தல்கள் நீதியாக, நேர்மையாக இருப்பதும் அவசியம் என்பதால்,
தேர்தல் அதிகாரிகள்; தேர்தல் கடமைகளில் ஈடுபடுவோர்; வாக்குகளை எண்ணுவோர்; அவற்றைப் பதிவு செய்வோர் என அனைத்துத் தரப்பினரும் நெஞ்சுக்கு நீதியாக நடக்க வேண்டும்.
அப்போதுதான் வாக்களிப்பது, வாக்குரிமை என்பன தொடர்பில் மக்கள் நம்பிக்கை கொண்டு அது தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துவர்.
எனவே எல்லாச் சூழலும் நேர்மையாக இயங்க வேண்டும் என்பது மிகவும் கட்டாயமானதாகும்.