வெளியேறுகிறது பிரிட்டன்; அடுத்த நகர்வு என்ன? ஒரு பார்வை


ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது குறித்து பிரிட்டிஷ் மக்களின் கருத்தறியும் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது. 

"பிரெக்ஸிட்´ என அழைக்கப்படும் அந்த விலகல் குறித்த பொது வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக, இதுவரை இல்லாத அளவு 4.65 கோடி வாக்காளர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். 

பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பொதுவாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பொது வாக்கெடுப்பின்போது பெய்த மழையையும் பொருள்படுத்தாது லட்சக்கணக்கானோர் வாக்களித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

எவ்வாறாயினும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இலங்கை நேரப்படி 10.00 மணிவரையான நிலவரப்படி 90 சதவீதமான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் (1,08,42,366) மக்களும், விலக வேண்டும் என 52 சதவீத மக்களும் வாக்களித்துள்ளனர். 

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய ஒன்றியம்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 

1993–ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்த்துக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன. 

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம், வேலைவாய்ப்புகளை பெறலாம், கல்வி கற்கலாம், தொழில் தொடங்கலாம். 

இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள். 

இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, குறிப்பாக வேலைவாய்ப்பு பறிபோவதாக பிரிட்டன் மக்கள் கருத தொடங்கினார்கள். 

பிரிட்டன் அரசாங்கம் வழங்கும் சமூக நலத்திட்டங்களின் பலன்களை பிறநாட்டினர் பெற்று விடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள். 

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதால் பிரிட்டனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், எனவே அதில் இருந்து விலக வேண்டும் என்றும் அந்த நாட்டில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தது. 

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது குறித்த மக்கள் கருத்துக் கணிப்பு நேற்று ஆரம்பமாகிய நிலையில், அதிக மக்கள் வெளியேற வேண்டும் என்றே வாக்களித்துள்ளனர். 

எவ்வாறாயினும் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றித்தில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தால் அந்த நாட்டின் பணமான பவுண்ட் மதிப்பு சரியும் வாய்ப்பு உள்ளது. 

இந்த சரிவானது இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளின் பணத்தின் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், தொடரவேண்டும் என்ற தரப்பு வெல்லக்கூடும் என்று சில கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டியதை அடுத்து பிரிட்டிஷ் நாணயமான பவுண்டின் மதிப்பு உயர்ந்து பின்னர் மீண்டும் சரிந்தமை கூறத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila