உண்மைகளை ஏற்றுக் கொள்வதே உலகில் மதிக்கப்படுகின்ற விடயமாக உள்ளது.
பாரத தேசத்துக்கு விடுதலை பெற்றுக் கொடுத்த தேசபிதா மகாத்மா காந்தி சத்தியசோதனை என்ற தன் சரிதத்தை எழுதினார்.
எந்த இடத்திலும் அவர் தனது பிழைகளை-தவறுகளை குறிப்பிட மறக்கவில்லை. இதனால்தான் காந்தியை மகாத்மாவாக உலகம் போற்றுகிறது.
எனவே உண்மையை ஏற்றுக் கொள்வது, உண்மையை வெளிப்படுத்துவது எந்தக் காலத்திலும் எவராலும் வரவேற்கப்படக் கூடியது.இருந்தும் இந்த விடயத்தில் இலங்கை அரசு எதிர்மறையான போக்கைக் கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது.
2009ஆம் ஆண்டு வன்னியில் நடந்த இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை வெளிப்படுத்துவது மிகவும் நல்லதாயினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாகக் காட்டுவதில் இலங்கை அரசு மிகக் கடுமையாகப் பிரயத்தனம் செய்வது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது.
அதிலும் இறுதிப் போரில் தம் உறவுகளை இழந்து கண்ணீரும் கம்பலையுமாக தமிழ் மக்கள் இருக்கின்ற நிலையில் இறுதிப் போரில் உயிரிழப்பு அதிகம் இல்லை என இந்த நாட்டின் அமைச்சர் ஒருவர் கூறுவாராயின் அதுவே முதற்தர இனவாதமாக இருக்கும்.
வன்னிப் போரில் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை என்பது அரச நிர்வாகத்தின் ஊடாக பெறக்கூடியது.
நிலைமை இதுவாக இருக்கையில், இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை என நாக்கூசாமல் கூறுவதானது, தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்வதாகவே அமையும்.
எனவே, இத்தகைய வலிந்த வதைகளை ஆட்சியாளர்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது. இலங்கைத் திருநாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனை தென்பகுதியில் இருக்குமாயின் வார்த்தைப் பிரயோகங்களை மிகவும் நிதானமாக முன்வைப்பதே நல்லது.
வன்னியில் நடந்த இறுதிப்போர் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்ட இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,போர் வெற்றி மகிழ்ச்சியைத் தந்தாலும் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வேதனையைத் தருகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த வார்த்தை மனித நேயம் சார்ந்தது. ஒரு நாட்டின் தலைவர் கூறக் கூடியது.
ஆனால் ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்களை முறியடிப்பதாக அமைச்சர்களின் கருத்துக்கள் அமைவது எல்லாவற்றையும் குழப்புவதாகும்.
இது தவிர, போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அனு மதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதை போரில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தீர்மானிப்பதாக இருந்தால் நடைபெறும் விசாரணை போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்தப் பயனையும் தரமாட்டாது. ஆகையால் எதனையும் நிதானமாக அணுகுவதே நல்லது.