எனது அரசியலை தொடர்ந்து கொண்டு செல்பவரை இறைவனே தீர்மானிப்பார்!

எனது அரசியலை தொடர்ந்து கொண்டு செல்பவரை இறைவனே தீர்மானிப்பார்!

வடக்கில் படையினர் வசம் உள்ள பல காணிகள் தொடர்பில் அரசாங்க அதிபர்கள் தகவல்களை தரவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டியுள்ளார்.
அவர் யாழ்ப்பாண செய்தியாளர் யாழ்.தீபனுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்:-
கேள்வி: வடக்கு மாகாணசபையின் அதிகாரங்கள் குறித்து நீங்கள் மேற்கொள்ளும்
போராட்டங்கள் எதுவரை எந்தளவில் வெற்றியளித்துள்ளன?
பதில்: தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு வெற்றியளித்துள்ளது. எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே அரசியல் தலைவர்களுக்கு ஓரளவு புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் செயற்படுகின்றேன். முழுமையான புரிந்துணர்வு ஏற்பட்டால் தான் முழுமையான வெற்றி கிடைக்கும்.
கேள்வி: ஆளுநரின் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற யாழ்ப்பாண நகர அபிவிருத்தி கூட்டத்துக்கு உங்களிடம் அறிவிக்கப்படவில்லை என்பதற்காக நீங்கள் செல்லவில்லை? எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாண சபையின் 8 உறுப்பினர்களும் சென்றிருந்தனர். இதன்போது நீங்கள் செல்லாமை காரணமாக ஏதாவது தாக்கங்கள் ஏற்படும் என்று நினைக்கிறார்களா? மாகாண முதலமைச்சர் செல்லாமை காரணமாக அன்று இடம்பெற்ற கூட்டத்தின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் தடங்கல்கள் ஏற்படுமா?
பதில்: ஆளுநர் கூட்டத்திற்கு எனக்கு அறிவித்தல் கிடைத்தது. ஆனால் அவர் பேசவிருந்த விடயங்கள் ஏற்கனவே உலக வங்கியுடன் எம்மால் பேசப்பட்டு விட்டதால், கூட்டத்திற்கு அவசியமில்லை என ஆளுநருக்கு அறிவித்தேன். சென்ற மாதம் 23ந் திகதி ஆளுநர் அவர்களைச் சந்தித்த போது அவர் மூன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் இக் கூட்டத்திற்காகவே வருகை தந்துள்ளார்கள். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். உடனே நான் அவர்களது கருத்துக்களை அறிந்து எனக்குக் கூறுங்கள் எனக் கூறிவிட்டு வந்தேன். ஆனால் இதுவரை அவர் அதுபற்றி எதுவும் கூறவில்லை. என்றாலும் எனக்கு அவருடன் எதுவித பிரச்சினையுமில்லை.
கேள்வி: அவ்வாறு தடங்கல்கள் ஏற்படாதவிடத்து நீங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களில் தாக்கம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: ஆளுநருடன் எந்தவித பிரச்சனையும் இல்லையென்று கூறும்போது இந்தக் கேள்விக்கே இடமில்லை.
கேள்வி: தென்னிலங்கையில் உங்களை இனவாதி என்று பார்க்கிறார்கள். இது நீங்கள்அனைத்து விடயங்களிலும் சட்டமுறையின் கீழ் விடயங்களை அணுகுவதன் காரணமாக இருக்கலாம். இந்தநிலையில் ஏன்? மிதவாத போக்குடன் செயற்பட்டு தென்னிலங்கை அரசியல்வாதிகளை வெற்றி கொள்ள முடியாது?
பதில்: மிதவாத நோக்குடன் செயற்பட்டு தென்னிலங்கை அரசியல்வாதிகளை வெற்றி கொள்ள முடிந்தது என்று சரித்திரமே இல்லை. பண்டாரநாயக்கா – செல்வா உடன்பாடு, டட்லி சேனாநாயக்கா – செல்வநாயகம் உடன்பாடு போன்றவை இரு தரப்பு மிதவாதப் போக்குடன் தான் தயாரிக்கப்பட்டன. ஆனால் அவை ஈற்றில் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் கைவிடப்பட்டன. ஆனால் தீவிரவாதிகள் எனக் கருதப்படும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போது பலதையுந் தருவதாகக் கூறினார்கள். இளைஞர்கள் ஏற்பதாகக் கூறியிருந்தால் அதைத் தந்துமிருப்பார்கள். ஆனால் ஆயுதங்கள் மௌனித்த நிலையில் அவற்றைத் தர மறுக்கின்றார்கள்.
ஆயுதம் ஏந்திய போது திரு.பிரேமதாசா அவர்கள் “ஈழம் மட்டும் முடியாது மற்ற எல்லாம் தருவோம்” என்றார். மத்திய அரசாங்கமானது நெருக்கடிகளுக்கு உட்பட்டால் தான் எதையுந் தர முன்வரும். இல்லாவிட்டால் தட்டிக் கழித்துப் போவார்கள். ஒரு இனத்தின் உரிமைகளை எடுத்துக் கூறினால் அது இனவாதம் ஆகாது. அது இனவாதம் போல் தென்னிலங்கையில் இருப்பவர்கள் சிலருக்குத் தெரியக் காரணம் இதுகாறும் அவர்கள் மனதில் அவர்கள் வளர்த்துக் கொண்டு வந்த மேலாதிக்க உணர்வுகள் தான். அவர்கள் மேலாதிக்க எண்ணங்களுக்கு பங்கம் ஏற்பட்டுக் கொண்டிருப்பதால் நான் கூறுவது இனவாதம் போல் அவர்களுக்குத் தெரிகின்றது. இலங்கை தமிழ் மக்கள் இன்றும் தம்மை வடகிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மை இனமாகவே கருதுகின்றார்கள். அதுதான் உண்மை. ஆகவே நீங்கள் கூறும் உபாயம் பயனளிக்காது என்பது எனது கருத்து.
கேள்வி: வடக்கு மாகாண சபைக்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட அபிவிருத்திக்கான நிதி, திறைசேரிக்கு திரும்பியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதன் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்: திரும்பத் திரும்ப பல பத்திரிகைகளில் நாங்கள் சென்ற ஆண்டின் நிதி 95சதவிகிதத்திற்கும் மேலாக செலவழித்து விட்டோம் எனக் கூறியுள்ளோம். தொடர்ந்தும் உங்களைப் போன்றவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைக்கின்றீர்கள். இதனால் தான் நான் எனது அலுவலர்களை இது பற்றி முழுமையான அறிக்கையை பத்திரிகைகளுக்கு வழங்கும்படி கூறியிருக்கின்றேன்.
கேள்வி: மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவாலாக்கம் என்ற விடயத்தில் முரண்பாடு உள்ளமையால், சில அபிவிருத்தி திட்டங்கள் இல்லாமல் போகும். இதனை எவ்வாறு சீர்செய்து கொள்ளப் போகிறீர்கள்?
பதில்: அபிவிருத்தித் திட்டங்கள் பலவிதமானவை. வெளிநாட்டு உதவிகளுடன் செய்யப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பெரும்பான்மையானவை மத்திய அரசாங்கத்தினாலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அச் செயற்திட்டங்களில் எமது மாகாண அலுவலர்கள் பலர் உள்வாங்கப்படுகின்றார்கள். அபிவிருத்தித் திட்டங்கள் இல்லாது போவதைப் பற்றி நீங்கள் கூறுகின்றீர்கள். மத்திய அரசாங்கம் தருவதாகக் கூறி தராது விட்டால் தான் அவ்வாறு கூற முடியும். ஆனால் அவ்வாறு நடைபெற வாய்ப்பில்லை. ஏனெனில் எமக்குத் தரப்படும் செயற்திட்டங்கள் கரவாக மத்திய அரசாங்கத்தால் இனி எடுத்துச் செல்லப்பட்டால் அரசாங்கத்திற்கே அது தீமையை விளைவிக்கும்.
கேள்வி: சர்வதேசம் இன்று இலங்கை அரசாங்கத்துடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் இணைந்து செயற்படுகிறது. இந்த சூழ்நிலையில் உங்களின் சில நிலைப்பாடுகளை சர்வதேச நாடுகள் விமர்சனம் செய்வதாக கூறப்படுகிறது?
பதில்: சர்வதேச நாடுகள் எதுவும் எங்கள் நிலைப்பாடுகளைப் பற்றி விமர்சனம் செய்யவில்லை. மாறாக நாங்கள் கூறுவதை உள்ளார ஏற்கின்றார்கள். உதாரணத்திற்கு சமஷ்டி முறையே சிறந்தது என்பதை ஏற்கின்றார்கள். ஏனென்றால் தங்கள் நாட்டிலும் அதே முறையை கடைப்பிடித்து வருகின்றார்கள். ஆனால் மக்கள் தீர்ப்புக்கு (Referendum) மக்கள் பிரச்சினைக்கான தீர்வு கொண்டு செல்லப்பட்டால் அவர்களால் அவை நிராகரிக்கப்பட முடியும். ஆகவே தருவதை வாங்கிக் கொண்டால் என்ன என்று சிலர் கேட்கின்றார்கள். லட்சக்கணக்கான மக்கள் லட்சோப லட்சம் பெறுமதியான ஆதனங்கள் மேலும் பல இழப்புக்களைக் கண்ட தமிழ் மக்களிடம் தருவதை வேண்டிக் கொள்ளுங்கள் எனக் கூறுவதற்கு சிலருக்கு மனம் எப்படித்தான் வருகின்றதோ தெரியவில்லை. நாங்கள் எமது முன்மொழிவுகளை புத்திஜீவிகளுடன் கலந்து ஆலோசித்த பின் வெளியிட்டுள்ளோம். உண்மையில் பல கோரிக்கைகளை நாம் ஏற்காதும் விட்டுள்ளோம். எம்மால் தரப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வை எட்டலாம் என்பது எனது கருத்து. அதற்குக் குறைவாக ஏதேனும் தீர்வு தரப்பட்டால் இரு இன மக்களிடையேயும் பிணக்குகள் தொடர்வது நிச்சயம். ஆகவே நிரந்தர தீர்வுக்குத் தருவதைத் தாருங்கள் என்ற உபாயம் பயனளிக்காது.
கேள்வி: தமிழக முதலமைச்சரை நீங்கள் சந்திக்கப் போவதாக கூறியிருப்பது தென்னிலங்கையிலும் இந்திய அரசியலிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது? இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: டேவிட் கமரூன் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று அவருக்கு எனது பாராட்டுதல்களையும் நல்வாழ்த்துக்களையும் நான் அனுப்பி அவர் என்னைச் சந்திக்க வேண்டுமென்றிருந்தால் இவ்வாறான கேள்வி கேட்டிருப்பீர்களா? தமிழ் முதலமைச்சர் இன்னொரு தமிழ் முதலமைச்சரைச் சந்திக்கப் போவது தென்னிலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றதென்றால் இதுவரையில் தமிழ் பேசும் மக்களை நியாயமான முறையில் தென்னிலங்கை நடத்தவில்லை என்று தானே அர்த்தம். அதனால் தான் தென்னிலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எங்களை நியாயமாக அவர்கள் நடத்தியிருந்தால் இவ்வாறான கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார்கள். தங்கள் மீது குற்றம் இருப்பதால் தான் தமிழக முதல்வரை நான் சந்திப்பது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
கேள்வி: மாகாணசபை அதிகாரங்கள் மற்றும் தமிழர்களின் தீர்வு திட்டங்களில்தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு திருப்தியில்லை என்று கருதுகிறீர்களா?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைபின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் தான் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதை நடைமுறைப்படுத்துவதில் தான் நான் ஊக்கம் காட்டுகின்றேன். என்னுடைய ஊக்கமும் உத்வேகமுந் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு. அதைத் திருப்தி இல்லை என்று என்னையே கூறச் சொல்கின்றீர்களா?
கேள்வி: போர் குற்றச்சாட்டு விசாரணை பொறிமுறைக்கு உள்ளுர் நீதிபதிகள் மாத்திரமே நியமிக்கப்படுவர் என்ற இலங்கை அரசாங்கத்தின் பிந்திய நிலைப்பாடு குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: இதனால் தான் சர்வதேச போர்க் குற்றச்சாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என்று சென்ற வருடம் செப்ரம்பருக்கு முன்னரேயே பல முறை மனித உரிமை ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் இளவரசர் அல் செய்ட்க்கு கூறி வந்தோம். உள்ளுர் நீதிபதிகள் பற்றி சிங்கள சட்டத்தரணிகளே கேள்வி எழுப்பியிருந்தார்கள். மூன்று சிங்கள சட்டத்தரணிகள் எழுதிய நூல் ஒன்றில் எவ்வாறு எமது நீதிபதிகள் ஒரே நிகழ்வுகளின் அடிப்படையில் சிங்களவர்களுக்கு ஒரு தீர்ப்பும் தமிழர்களுக்கு இன்னுமொரு தீர்ப்பும் வழங்கி இருந்தார்கள் என்று தமது நூலில் கூறியிருக்கின்றார்கள். உள்ளூர் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால் போர்க் குற்ற விசாரணை முறையாக நியாயமாக நடந்தேறாது என்பது என்னுடைய கருத்து. சர்வதேச நீதிபதிகள் பங்கெடுத்துக் கொண்டால் உண்மை வெளிவந்து விடும் என்று இலங்கை அரசாங்கம் தடுமாறுவது போலத் தெரிகின்றது.
கேள்வி: போரின் பின்னர் முன்னாள் போராளிகள், கணவர்மாரை இழந்த பெண்கள், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபை கொண்டிருக்கும் முன்னேற்றத் திட்டங்கள் எவை?
பதில்: எம்முடைய 38 மாகாண சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 6 மில்லியன் ரூபா மக்கள் சார்பில் செலவிடத் தரப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பான்மையானவை போரினால் பாதிக்கப்பட்ட போராளிகள், கைம்பெண்கள், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பாகத்தான் செலவிடப்படுகின்றன. அவற்றைவிட வேறு சில திட்டங்களும் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து தரப்படும் நிதிகள் ஊடாக எமது திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவற்றை முழுமையாக செய்து முடிப்பதற்கு போரின் பின்னரான தேவைகள் பற்றிய ஒரு மதிப்பீடு அவசியம். அதைத் தயாரித்துக் கொடுக்க கௌரவ பிரதம மந்திரி அவர்கள் முன்வந்துள்ளார். அது தயாரிக்கப்பட்டதும் அந்த அறிக்கையின் படி மேலும் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
கேள்வி: உங்களுக்கு பின்னர் உங்களுடைய அரசியலை யார் கொண்டு செல்வார்?
பதில்: என்னை யார் இந்த அரசியலுக்குக் கொண்டு வந்தாரோ அந்த இறைவன் அதைப் பார்த்துக் கொள்ளுவார்.
கேள்வி: வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே பொறுப்புக்கள் சிலவற்றை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் என்பது தொடர்பில் உங்களின் பதில் என்ன?
பதில்: அமைச்சுப் பொறுப்புக்களை சுகாதார அமைச்சிடம் இருந்து மீளப் பெறுவதற்கு ஊழல் குற்றசாட்டுக்களே காரணம் என்று நீங்கள் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. அந்த மூன்று பொறுப்புக்களும் முன்னரே என் அமைச்சுக்குள் இருந்தவை. எனக்குப் போதிய வசதிகள் இல்லாமையால் தான் அவற்றையும் வேறு சில பொறுப்புக்களையும் மற்றைய அமைச்சர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இப்பொழுது எனக்கு வசதிகள் இருக்கின்றன. முதலமைச்சர் நிதியம் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. காணி. மீள் குடியேற்றம், சமூக சேவைகள், பெண்கள் விவகாரம், புனர்வாழ்வு ஆகிய அனைத்தும் ஒரு அமைச்சின் கீழ் இருப்பதுதான் உசிதம் என்று கண்டு அந்த மூன்று பொறுப்புக்களையும் மீளப் பெற்றுக் கொண்டேன்.வேறு எந்தக் காரணங்களும் இல்லை.
13A கேள்வி: அப்படியானால் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளனவே அது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நான்கு அமைச்சர்கள் பற்றியும் 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு என்னிடம் அமைச்சர்களை மாற்றும் படி கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தும் அவர்கள் குற்றச்சாட்டுக்கள் எவற்றையும் ஆதாரபூர்வமாக முன் வைக்கவில்லை. சபையில் ஒரு உறுப்பினர் நடவடிக்கை எடுக்காவிடில் ஊழல் ஆணைக்குழுவுக்குத் தெரிவிக்கப் போவதாகக் கூறினார். ஆனால் இதுவரை தெரிவித்ததாகத் தெரியவில்லை.
ஒரு அமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெகுவிரைவில் கொண்டு வரப் போவதாக அறிவித்திருந்தார்கள். அவர்கள் யாவருக்கும் நான் சபையில் கூறியதைத்தான் இங்கும் கூறுகின்றேன். என்னையும் சேர்த்து எவர் மீதும் எந்த விதமான ஊழல் குற்றச் சாட்டுக்கள் இருப்பதாக எவரேனும் உரிய சாட்சியத்துடன் எனக்கு அறிவித்தீர்களானால் உடனேயே அது சம்பந்தமாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவரை நியமித்து அவர்களின் தீர்ப்பைப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பேன். அதை விட்டு வெறுமனே பேச்சளவில் ஊழல் குற்றச்சாட்டு என்று வடமாகாண சபையில் எடுத்து காரசாரமாக விவாதிப்பது எமது அமைச்சர்கள் மீதும் வடமாகாண சபை மீதும் களங்கத்தை ஏற்படுத்தும்.
மக்கள் எம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பார்கள். இதனால் எதுவித நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. ஒருவரின் குற்றச்சாட்டுக்களின் உண்மை கையுயர்த்துவதில் மட்டும் அடங்கியிருக்காது. அவர்கள் ஊழல்களில் ஈடுபட்டார்களா இல்லையா என்பது தான் அறிய வேண்டிய விடயம். 16 உறுப்பினர்கள் கோரிய கோரிக்கையினை இன்னமும் நான் கவனமாகப் பரிசீலித்தே வருகின்றேன். ஆனால் ஊழல் சம்பந்தமாக எடுக்கும் நடவடிக்கைகளில் உறுப்பினர்களின் கையுயர்த்தலால் மட்டும் அவை ருசு ஆகி விடா என்பதை நாங்கள் மறக்கக்கூடாது. எனவே எவர் மீதான குற்றச்சாட்டென்றாலும் என்னிடம் தாருங்கள் தவறாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதனையும் மூடி மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
கேள்வி: வடக்கின் வன்முறைகளை கட்டுப்படுத்த அடுத்த கட்ட திட்டம் உள்ளதா?
பதில்: பொலிஸ்மா அதிபரின் அனுசரணையுடன் பொலிஸ் அலுவலர்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெகுவிரைவில் அவற்றின் அடிப்படையில் நன்மைகள் ஏற்படவுள்ளன.
கேள்வி: நீங்கள் எதிர்பார்க்கும் அரசியல் சித்தாந்தம் எது?
பதில்: சித்தாந்தம் என்ற சொல் ஆன்மீகத்தில் வேறு அர்த்தம், அரசியலில் வேறு அர்த்தம். மக்கள் மனதில் அரசியல் சம்பந்தமாக காலத்திற்குக் காலம் எழுந்து அஸ்தமிக்கும் கருத்துரைகளைத் தான் அரசியல் சித்தாந்தம் என்கின்றார்கள். ஒரு காலத்தில் மார்க்சீய சித்தாந்தத்திற்குப் பலத்த ஆதரவு இருந்தது. முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு ஆதரவு இருந்தது. இப்பொழுது சித்தாந்தங்களின் அடிப்படையில் செல்வதைத் தவிர்த்து யதார்த்தத்தை உணர்ந்து செயல்படவே பல தலைவர்கள் முன்வந்துள்ளார்கள். கஸ்ரோ போய் சில வருடங்களில் கியூபா நாடும் சீனாவைப் போல் மார்க்சீயத்தில் இருந்து விடுபட்டுச் செல்லவே தலைப்படும் என்பது எனது எதிர்பார்ப்பு. ஆகவே எனது அரசியல் சித்தாந்தம் யதார்த்தமே. நடைமுறையில் இருக்கும் உண்மை நிலையே அது. அதை எவ்வாறு கொண்டு நடத்த வேண்டும் என்பதில் நல்லாட்சிக்கான கருத்துக்கள் பலவும் உள்ளடக்கப்பட வேண்டும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila