ஊடகவியலாளர்களின் கேள்விகளினால் திக்குமுக்காடிய அமைச்சர்கள்

rajithaவீண் செலவுகளை குறைக்க வேண்டும் என நல்லாட்சியை ஏற்படுத்திய அரசாங்கம், வாகனமொன்றுக்கு பல கோடி ரூபாவை செலவழிக்க வேண்டுமா? என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்களான கயந்த கருணாதிலக மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் மழுப்பலான பதிலையே வழங்கியிருந்தனர்.
எனினும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து வாகனம் கொள்வனவு தொடர்பில் பல கேள்விகளை எழுப்பினர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்களான ராஜித சேனாரத்தன மற்றும் கயந்த கருணாதிலக,
‘அமைச்சர்கள் என்ற வகையில் அவர்களின் நாளாந்த கடமைகள் அதிகமாகும். மேலும் ஒரு நாளைக்கு பல இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மக்களுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றது என்பதற்காக வாகனங்களில் விலை குறைக்கப்படாது. வாகனங்கள் விற்கப்படும் விலை அடிப்படையிலேயே கொள்வனவு செய்யப்படுகின்றது. இதற்காக சாதாரண வாகனங்களை எம்மால் வாங்க முடியாது.
உதாரணமாக இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா போன்ற மாவட்டங்களில் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டுமாயின் சாதாரண வாகனங்களில் செல்வது கடினம். கொழும்பில் உள்ள ஒருவருக்கு இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. குறித்தப் பகுதிகளுக்கு சாதாரண வாகனங்களில் சென்று பாதையில் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு நடந்து செல்ல முடியாது. அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டுமாயின் ‘போ வீல்’ வாகனங்கள் கட்டாயம் தேவை.
அமைச்சர் என்ற வகையில் ஒரு நாளில் பிரயாணத்தில் அதிக நேரத்தை செலவிடுகின்றோம். இதனால் வாகனங்கள் கூடுதலாக பாவனைக்குள்ளாகின்றன. குறிப்பாக நான்கு வருடங்களுக்கு மேல் ஒரு வாகனத்தை பாவிக்க முடியாத நிலையும் உள்ளது. எமது பாதுகாப்பு மிக முக்கியமாகும். எமது நாட்டிலேயே இவ்விடயமெல்லாம் ஒரு பிரச்சினையாக பேசப்படுகின்றது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமைச்சர்களுக்கு இது ஒரு விடயமே இல்லை. மக்களும் பெரிதுபடுத்துவதில்லை.
கேள்வி : வாகனங்கள் கொள்னவு செய்வதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ள பணத் தொகையை குறைக்க முடியாதா? குறிப்பாக பொன்சேகாவுக்கு 7 கோடி ரூபா செலவிலும் மஹிந்த சமரசிங்கவுக்கு 5 கோடி ரூபா செலவிலும் வஜிர அபேகுணவர்தன 9 கோடி ரூபாவுக்கும் வாகனம் கொள்வனவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று இன்னும் சிலருக்கும் பல கோடி ரூபா செலவில் வாகனங்கள் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக விலையில் வாகனங்கள் கொள்வனவு செய்ய வேண்டுமா? இந்த வாகன கொள்வனவுக்காக தீர்மானிக்கப்பட்டுள்ள பணத்தொகையை குறைத்து அப்பணத்தில் மக்களுக்கு உதவ முடியும் அல்லவா?
பதில்: ஒரு சிலரே அதிக விலையில் வாகன கொள்வனவு செய்யப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்தாலோசிக்க வேண்டும்
கேள்வி: காணி அமைச்சராக இருந்த எம்.எஸ்.டி குணவர்தன உயிரிழந்த பிறகு அவருக்கு வழங்கப்பட்டிருந்த நவீன ரக வாகனத்தை ஜோன் அமரதுங்கவுக்கு வழங்கப்பட்டது. இந்த வாகனம் இல்லாமல் மேலும் நான்கு வாகனங்களை கொள்வனவு செய்ய போவதாக தெரிவிக்கப்படுகின்றது?
பதில்: நீங்கள் வாகனங்கள் பற்றி கதைக்கின்றீர்கள். இன்றைய ஆட்சியில் மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர். வெள்ளை வேன் கலாசாரம் இல்லை. நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுகின்றது. முன்னர் ஜனாதிபதியே நிதி அமைச்சராக காணப்பட்டார். கடந்த ஆட்சியில் இவ்வாறு நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவில்லை. ஆனால் இப்போது நல்லாட்சி என்பதனாலேயே இவ்வாறான நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டுவரப்படுகின்றன.
கேள்வி : மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் கூடுதலான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அமைச்சர்கள் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளதே?
பதில்: நாட்டின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஒரு காலத்தில் மோதலில் ஈடுபட்டு எதிரிகளாக காணப்பட்ட கட்சிகளாகும். ஆனால் இன்று இரு கட்சிகளும் இணைந்து நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமும் மக்களுக்கும் நாட்டுக்கும் நிறைய சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila