குற்றச்சாட்டுக்களை இராணுவம் ஏற்கும் என நம்பவில்லை: சந்திரிக்கா
காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இராணுவம் ஏற்றுக்கொள்ளும் என தாம் நம்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க காரியாலயத்தின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், ‘காணாமல்போனவர்கள் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை இராணுவம் ஒருபோதும் ஒத்துக்கொள்ளும் என நான் எதிர்பார்க்கவில்லை. கடும் யுத்தம் நடைபெற்ற தென் ஆபிரிகாகாவில் தவறு இழைத்தவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டனர். எனினும் இலங்கையில் அவ்வாறு நடைபெறவாய்ப்பில்லை. ஏனெனில் இலங்கையின் பாரம்பரியம், கலாச்சாரம், மற்றும் மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் தவறு இழைத்தவர்கள் தாமாக முன் வந்து தமது குற்றங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். யுத்தத்தினால் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்கு பல்வேறு விடயங்கள் அவசியமாகின்றது. காணாமல் போனோர்களின் உறவினர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் மூலம் வழங்கப்படும் நிவாரணங்களை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். நீதி அமைச்சு மற்றும் வெளிவிகார அமைச்சுடன் இணைந்து இந்த சான்றிதழை வழங்கும் நடவடிக்கையை அரசாங்கமும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க காரியாலயமும் செயற் திறன்மிக்க வகையில் முன்னெடுத்துவருகின்றது. காணாமல் போன இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் குடும்பங்கள், காணாமல் போன சிவிலியன்களின் குடும்பங்கள் உள்ளிட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இந்த சான்றிதழ் உதவியாக அமையும். முரண்பாடுகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசாங்கம் வழங்கும் வகையில் அடுத்த கட்டமாக மரண சான்றிதழ் வழங்கப்படும். காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை எடுத்துக்கொள்ளும் போது, மரண சான்றிதழ் வழங்கப்படாவிடின் அவர்களின் உறவினர்கள் சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் தற்போது வழங்கப்படவுள்ள, உறவினர் காணாமல் போனமை தொடர்பிலான சான்றிதழை, சமூக நலத் திட்டங்களின் கீழான சலுகைகளைப் பெறுவதற்கு பயன்படுத்த முடியும்’ எனவும் தெரிவித்துள்ளார்.
Add Comments