தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களின் எதிர்கால நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்ற கருத்துக்கள் வலுவடைந்து வருகின்றன.
தமிழ் அரசியல்வாதிகளின் கடந்த காலப்போக்குகளால் மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் சிலரின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு அநீதி இழைப்பதாக உணரப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் நேர்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண் டியவர்களாக உள்ளனர். தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தமிழ் மக்கள் ஆதரிப்பர்; வீட்டுச் சின்னத்துக்கே வாக்களிப்பர்; யாராவது புது அரசியல் கட்சியை ஆரம்பித்தால் வழமைப்படி துரோகப்பட்டம் சூட்டி அந்த அரசியல் கட்சியை ஓரங்கட்ட முடியும் என்ற நினைப்புகளை தலைமுறை இடைவெளிகள் நிச்சயம் வெட்டிச் சரிக்கும் என்ற உண்மையை அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பொதுவில் சூழ்நிலைகள் ஒரேமாதிரியாக இருப்பதில்லை என்பதால் தமிழ் அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்து பதவியைக் கொடுத்த தமிழ் மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.
எனினும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அரசியல்வாதிகளில் பலர் தமிழ் மக்களை-அவர்கள் படும் துன்பங்களை, அவலங்களை மறந்தவர்களாக செயற்படுகின்றனர்.
இதற்கு மேலாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றி வைக்க வேண்டிய இடங்களில் தங்களின் சுயநல அரசியலைப் புகுத்தி குழப்பங்களை ஏற்படுத்துவதையும், நேரத்தை வீணடிப்பதையும் அபிவிருத்தி முயற்சிகள் பற்றி சிந்திப்பதற்கே இடம் தராமலும் எங்களுக்கான சந்தர்ப்பங்கள் வீணடிக்கப்படுகின்றன.
இந்த நிலைமை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இருக்கின்ற போதிலும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இடையே இவற்றின் வெளிப்படுகை தமிழ் மக்களால் நேரடியாக உணரப்படுகிறது.
எனவே வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தமக்குக் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்த வேண்டும்.
இதற்கான சூழமைவு இன்னமும் கலைந்து போகவில்லை. கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருந்தால், அடுத்த தேர்தலிலும் ஆசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்படாத வரையிலுமே சாத்தியமாகும்.
மாறாக தமிழ் மக்கள் தமது இத்துணை அவலத்துக்கு காரணம் எங்கள் தமிழ் அரசியல் தலைமைகள்தான் என்று உணரத் தலைப்பட்டால், எல்லாம் அம்போ என்றாகிவிடும்.
ஆகவே அன்பார்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்களே! நீங்கள் மீண்டும் ஒரு தடவை சத்தியம் செய்ய வேண்டும். அந்த சத்தியம் தமிழ் மக்களின் உயர் வாழ்வுக்காக வடக்கு மாகாண சபையில் நாம் இயங்குவோம்.
எங்கள் மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவோம். எந்த அரசியல் தலைமைகளும் எங்களை பிழையாக வழிநடத்த விடமாட்டோம் என் பதாக இருக்க வேண்டும்.
இவ்வாறான ஒரு சத்தியமும் அதன் வழிச் செயலும் எங்கள் மக்களை உயர் நிலைக்கு கொண்டுவரும் என்பது நாம் செய்யும் சத்தியம்.