பாடசாலை அனுமதிக்காக பல இலட்ச ரூபாய்களை வெகுமதியாக வழங்குவதனால் நகர்ப்புற பெரிய பாடசாலைகள் வர்த்தக நிலையங்களுக்கு ஒப்பாக இயங்கத் தொடங்கியிருக்கின்றன என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் வெளியிட்டுள்ளார்.
வட மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச் சினால் முன்னெடுக்கப்படும் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாட சாலை நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் செயற்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் உள்ள 644 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு அவை செயற்திட்டம் A, செயற்திட்டம் B,செயற்திட்டம் C செயற்திட்டம் D என நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு பிரதேச செயலர் பிரிவு மட்டம், உயர்தரப் பாடத் துறைகள், இடைநிலைப் பாடசாலைகள், ஆரம்பப் பாடசாலைகள் என நான்கு வகையில் பாடசாலை அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் இதற்கென மொத்தம் 4131.08 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவ்வளவு பெரியதொரு தொகை ஒதுக்கீடு இப் பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு கிடை க்கப்பெற்றிருப்பது ஒரு வரப்பிரசாதம் என கருதப்படலாம்.
வடபகுதியிலுள்ள மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை எத்தனையோ பாரிய இடையூறுகளுக்கு மத்தியிலும் கைவிட்டு விடாது குப்பி விளக்குகள் முன்னிலையிலும் பங்கர்களுக்குள்ளும், இடம்பெயர் முகாம்க ளிலும் இருந்தவாறு கற்றுத்தேறியது மட்டு மல்லாமல் தேசிய ரீதியில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஒன்றையொன்று விஞ்சுவதாக கல்வி நடவடிக்கைகளில் முன்னணியில் திகழ்ந்தன.
ஆனால் இந்நாட்டின் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஏழு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இயல்பு வாழ்க்கை ஓரளவிற்கு சுமுக நிலைக்கு திரும்பிய இச்சந்தர்ப்பத்தில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மிகக் குறைவடைந்து க.பொ.த சாதாரண தர கல்விப் பெறுபேறுகள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பது மிகவும் மனவருத்தத்திற்குரியது.
இவ்வாறான பின்னடைவிற்கு பல காரணங்களை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்நாட்டில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் வட பகுதியில் மிகுந்த ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. பெண் பிள்ளைகளும் சின்னஞ்சிறிசுகளும் எந்த நேரத்திலும் இரவில் கூட எதுவித பயமுமின்றி வீதிகளில் பயணம் செய்யவும் வீடுகளில் தனித்து இருக்கவும் முடிந்தது.
ஆனால் யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் பகலில் கூட பெண் பிள்ளைகளும் வயது வந்தவர்களும் வீட்டில் தனித்திருக்க அல்லது வீதியில் தனியே செல்ல இயலாத ஒரு புதிய கலாசாரம் இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. கள்வர்கள் கைவரிசை ஒருபுறம், காமுகர்களின் அங்கசேட்டைகள் இன்னோர் புறம், போதைக் கும்பல்களின் அட்டகாசம், வாள் வீச்சு என இப்பகுதியையே உலுக்கி வைக்கக்கூடிய ஒரு இழி நிலை இங்கே உருவாகியுள்ளது.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் போர் வீரர்கள் இங்கு பாதுகாப்புக்கு என்று நிறுத்தி வைத்திருக்கும் போதுதான் இவை யாவும் நடைபெறுகின்றது. ஆகவே இராணுவத்தினரால் மக்கள் பாதுகாக்கப்படுவதாகத் தோன்றவில்லை.
பிள்ளைகள் பாடசாலைக்கு செல்கின்றார்களா? பாடசாலை முடிவடைந்ததும் வீட்டிற்கு திரும்புகின்றார்களா? மாலை நேரங்களில் கற்றல் மற்றும் வீட்டுக் கடமைகளில் ஈடுபடு கின்றார்களா? என ஒவ்வொரு பெற்றோரும் கவனிப்பது கிடையாது.
பாடசாலை நேரங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து அதிக கவனம் எடுக்க அதிபர்களும் ஆசிரியர்களும் கூட சில சமயங்களில் தவறிவிடுகின்றார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் பொது நோக்கின்றி தனித்து செயற்பட்டதன் விளைவே இன்று பூதாகாரமாக எம்முன் தோன்றி அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. இந்நிலை மாற்றப்படல் வேண்டும்.
அன்றன்று கற்பிக்க வேண்டியவற்றை முழுமையாகத் தயாரித்து ஆயத்தமாகி வருவது ஆசிரியக் கடமை என்பதை மறந்து விடாதீர்கள். வெறுமனே கட்டங்களையும் உபகரண ங்களையும் பல மில்லியன் ரூபாக்கள் செலவில் அமைப்பதன் மூலம் மட்டும் கல்வியறிவு வந்துவிடாது. பிள்ளைகளை ஒழுங்காகக் கற்பிக்கின்ற தன்மை உருவாக்கப்படல் வேண்டும்.
நகரப்புறப் பாடசாலைகளுடன் கிராமப் புறப்பாடசாலைகளும் அண்மையிலுள்ள பாடசாலைகளும் போட்டி போட முடியாத நிலையில் மாணவர்கள் நகரப்புறப் பாடசாலைகளை நோக்கி படையெடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அது மட்டுமல்ல. பாடசாலை அனுமதிக்காக பல இலட்சங்களையும் வெகுமதியாக பாடசாலைக்கு வழங்குகின்றார்கள். இதன் மூலம் நகரப்புற பெரிய பாடசாலைகள் வர்த்தக நிலையங்களுக்கு ஒப்பாக இயங்கத்தொடங்கியிருக்கின்றன.
அங்கே கல்வி பயிலக்கூடிய பல மாண வர்கள் வசதி படைத்தவர்களாக இருப்பதன் காரணமாக வசதி குறைந்த ஓரிரு மாணவர்கள் பாடசாலை அனுமதியைப் பெற்று விட்டாலும் அவர்களின் ஏழ்மை பணம் படைத்த மாணவர்களுடன் நடையுடை பாவனையில் போட்டிபோட முடியாத நிலையில் அவர்கள் பாடசாலையை விட்டு நீங்கிவிடு கின்றார்கள் அல்லது ஒதுங்கி பின்வரிசையில் இருந்து கல்வி நடவடிக்கைகளை கோட்டை விட்டுவிடுகின்றார்கள்.
எனவே அருகிலுள்ள பாடசாலைகள் சிறந்த பாடசாலைகளாக திகழ வேண்டுமாயின் இந்த நகரப்புற மோகம் குறைக்கப்படல் வேண்டும். கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்கள் சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு அப்பாடசாலைகளை முன்னேற்றப்பாடுபடல் வேண்டும் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.