எதிர்க்கட்சி என்ற முறையில் அரசாங்கத்தை விமர்சிக்கவும், சர்வதேச விசாரணையைக் கோரவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உரிமையுண்டு என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 32ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சிறீலங்கா தொடர்பாக அடுத்த வாரம் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் உரையாற்றவுள்ள நிலையில், புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைனைச் சந்திக்கவுள்ளனர். இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தையோ அல்லது புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கருத்தையோ, வடக்கு மாகாண முதலமைச்சரின் கருத்தையோ அரசாங்கம் செயற்படுத்தவேண்டுமென்ற தேவையில்லை.
அனைத்து மக்களினதும் ஒருமித்த கருத்திற்கமையவே அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுக்கும் என அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் ஒன்றுகூடி வரும் நிலையில் அதனைக் குழப்பாது தமிழர் தரப்பு பொறுமையாக இருந்து தீர்வைப் பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.